உலக அளவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்!

உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள்!

இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பிராந்திய மொழிகளில் வெளியாவது ஹாலிவுட் படங்கள் மட்டுமே. இந்த காரணங்களால் உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களை ஹாலிவுட் திரைப்படங்கள் கைப்பற்றியுள்ளன.

 • Share this:
  உலக அளவில் ஹாலிவுட் திரைப்படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஹாலிவுட்டின் பெரும் நிறுவனங்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் வியாபார கட்டமைப்பு காரணமாக, சின்னச் சின்ன நாடுகளுக்கும் தங்களின் படத்தை கொண்டு சேர்க்கிறார்கள். இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பிராந்திய மொழிகளில் வெளியாவது ஹாலிவுட் படங்கள் மட்டுமே. இந்த காரணங்களால் உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களை ஹாலிவுட் திரைப்படங்கள் கைப்பற்றியுள்ளன.

  10. ஃப்ரோஸன் 2 (2019)

  ஃ;ப்ரோஸன் 2, 2019-ல் வெளியான அனிமேஷன் திரைப்படம். இதன் முதல் பாகம் 2013-ல் வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக ஃப்ரோஸன் 2 படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகம் 1.281 பில்லியன் டாலர்களை வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் 1.450 பில்லின் டாலர்களை வசூலித்து பத்தாவது இடத்தை பிடித்தது.

  09. ஃப்யூரியஸ் 7 (2015)

  பாஸ்ட் & தி ஃப்யூரியஸ் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் ஏழாவது பாகமான ஃப்யூரியஸ் 7-ஐ இயக்கியவர் ஜேம்ஸ் வான். இதில் வில்லனாக ஜேசன் ஸ்டெதம் நடித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் ஆக்ஷன் பட ரசிகர்களை அதிர வைக்க, படம் வெளியானதும் திரையரங்கில் குவிந்தனர். விளைவு, இந்த சீரிஸில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. வசூல், 1.515 பில்லியன் டாலர்கள்.

  08. தி அவெஞ்சர்ஸ் (2012)

  சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு மொழி தேவையில்லை. ஒரு வசனம் கூட புரியாமல் இரண்டு மணி நேரம் படத்தைப் பார்க்க முடியும். பிரமாண்டத்துக்கும், அடிதடிக்கும் மொழி எதற்கு? தி அவெஞ்சர்ஸில் எல்லா சூப்பர் ஹீரோக்களும் கூடி கும்மியடித்தார்கள். படம் உலக அளவில் வசூலித்தது, 1.518 பில்லியன் டாலர்கள்.

  07. தி லயன் கிங் (2019)

  தி லயன் கிங் படம் 1994 -ல் வெளிவந்த போது எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் அது 2டி அனிமேஷன் படம். உணர்ச்சிகரமான கதையும், நேர்த்தியான அனிமேஷனும் படத்தை பம்பர் ஹிட்டாக்கியது. அனிமேஷன் திரைப்படங்களுக்கு உலக அளவில் ஒரு சந்தையை திறந்துவிட்டது இப்படம் எனலாம். 2019-ல் இதனை இன்றைய தொழில்நுட்பத்தை வைத்து 3டி லைவ் அனிமேஷனில் எடுத்தனர். தி ஜங்கிள் புக் படத்தை இயக்கியவர் தி லயன் கிங்கை இயக்கினார். படம் 1.657 பில்லியன்களை வசூலித்தது.

  06. ஜுராஸிக் வேர்ல்ட் (2015)

  ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் உருவாக்கிய ஜுராஸிக் பார்க் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மெட்டீரியல். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ஜுராஸிக் பார்க்கை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது இந்த இடைவெளி மேலும் குறைந்திருக்கிறது. அடுத்த வருடம் ஒரு ஜுராஸிக் பார்க் வெளியாகிறது. ஜுராஸிக் வேர்ல்ட் - டொமினியன் என்று பெயர் வைத்துள்ளனர். நமது பட்டியலில் உள்ள ஜுராஸிக் வேர்ல்ட் இந்த சீரிஸில் நான்காவதாக வந்த படம். உலகம் முழுவதும் சேர்த்து 1.670 பில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

  05. அவேஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் (2018)

  ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து எடுப்பதை விட பல சூப்பர் ஹீரோக்களை வைத்து எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் எகிறும் என்பதை தி அவெஞ்சர்ஸ் வெற்றியில் கண்டு கொண்டவர்கள், அடுத்து எடுத்தது, அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார். படம் இரண்டு பில்லியன்களை கடந்து தயாரிப்பாளர்களின் வயிற்றில் டாலர் வார்த்தது. இதன் உலகளாவிய வசூல் 2.048 பில்லியன்கள் (நமது ரூபாயில் சுமார் 16,000 கோடிகள்).

  04. ஸ்டார் வார்ஸ் : எபிசோட் 7 - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (2015)

  ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மெட்டீரியலில் மற்றுமொன்று, ஸ்டார் வார்ஸ் சீரிஸ். ஜார்ஜ் லூகாஸ் உருவாக்கிய ஸ்டார் வார்ஸ் உலகம் இப்போதும் டாலர்களாக கொட்டிக் கொண்டிருக்கிறது. அதன், தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் எபிசோட் 2015 இல் வெளியாகி உலக அளவில் 2.068 பில்லியன்களை வசூலித்தது.

  03. டைட்டானிக் (1997)

  மூன்றாவது இடத்தில் நம் அனைவருக்கும் தெரிந்த ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக். என்ன தான் பிரமாண்டம் இருந்தாலும் உணர்ச்சிகரமான காதல் கதைக்கு மவுசே வேறு. 1997-ல் வெளியான இப்படம் உலக அளவில் 2.201 பில்லியன்களை வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, இந்த டாப் 10-ல் நாம் இதுவரை பார்த்த அனைத்துப் படங்களும் 2010-க்குப் பிறகு வெளியானவை. அதாவது சமீபத்திய படங்கள். டைட்டானிக் 1997-ல், அதாவது 24 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இவ்வளவு அதிக வசூலை பெற்றிருக்கிறது. இது மாபெரும் சாதனை.

  02. அவெஞ்சர்ஸ் : என்ட்கேம் (2019)

  அவெஞ்சர் சீரிஸின் மூன்றாவது படம், அவெஞ்சர்ஸ் : என்ட்கேம். அயன்மேன் இந்த படத்தில் இறந்துவிடுவார் என பட வெளியீட்டுக்கு முன்பே வயலின் வாசித்து, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினர். படம் அதிரி புதிரி ஹிட். உலகளாவிய வசூல், 2.797 பில்லியன்கள்.

  01. அவதார் (2009)

  ஜேம்ஸ் கேமரூனின் அவதார் குறித்து சொல்ல வேண்டியதில்லை. 2009-ல் அவதார் வெளியாகும் வரை அவரது டைட்டானிக் திரைப்படம் உலக அளவிலான வசூலில் முதலிடத்தில் இருந்தது. அவதார் அதனை முந்தி 2.846 பில்லியன்கள் வசூலித்தது. இந்த வசூலை எந்த சூப்பர் ஹீரோக்களாலும் முறியடிக்க முடியவில்லை. அவதார் 2 வரும்போது அந்தப் படம் அவதாரை முறியடிக்கலாம்.

  இந்த பாக்ஸ் ஆபிஸ் நமக்கு பல விஷயங்களை உணர்த்துகிறது. முதலாவதாக டாம் க்ரூஸ் போன்ற ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அனிமேஷன் திரைப்படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. காமிக்ஸில் தங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோக்களை திரையில் பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒரு இயக்குநர் நினைத்தால் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமலே உலகின் அதிக வசூல் செய்த திரைப்படத்தை எடுக்க முடியும். இந்திய பாக்ஸ் ஆபிஸில் பாகுபலி படங்கள் மூலம் அதனை செய்து காட்டியவர் ராஜமவுலி. இந்த ஒரு அம்சத்தை தவிர மற்ற எதுவும் இந்திய பாக்ஸ் ஆபிஸ் சரித்திரத்துடன் பொருந்தாது. இங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களே பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை பெறுகின்றன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: