Home /News /entertainment /

சினிமாவுக்காக 11 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்த நடிகை எஸ்.என்.லட்சுமி!

சினிமாவுக்காக 11 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்த நடிகை எஸ்.என்.லட்சுமி!

நடிகை எஸ்.என்.லட்சுமி

நடிகை எஸ்.என்.லட்சுமி

எஸ்.என்.லட்சுமி கதாபாத்திரத்துக்கு தாண்டிய மேனரிசங்களையோ பாவனைகளோ செய்வதில்லை. கதாபாத்திரமாகவே மாறிப்போவது அவரது இயல்பு.

  • News18
  • Last Updated :
நாளை 20 ஆம் தேதி பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமியின் பத்தாவது ஆண்டு நினைவு தினம். திறமைக்கேற்ற அங்கீகாரம் பெறாத நடிகைகளில் எஸ்.என்.லட்சுமி முதன்மையானவர். 200 க்கும் மேற்பட்ட நாடகங்கள், 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பங்களிப்பு செலுத்தியிருக்கும் இவருக்கு வெளியிலிருந்து கிடைத்த அங்கீகாரம் என்றால் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது மட்டுமே.

எஸ்.என்.லட்சுமியின் இளமைக்கால வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம். அத்தனை சாகஸங்கள் நிறைந்தது. நாராயண தேவர், பழனியம்மாள் தம்பதியின் 13 வது குழந்தை இவர். சொந்த ஊர் விருதுநகர் மாட்டம் சென்னெல்குடி அருகிலுள்ள பொட்டல்பட்டி கிராமம். பெயருக்கேற்ப வறுமையை கொண்ட ஊர். தந்தை இறந்ததும் தாய் பழனியம்மாள் பிழைப்புக்காக விருதுநகர் வருகிறார். வீட்டு வேலை செய்தும், கோயிலில் பணிவிடை செய்தும் அரைவயிறு கால்வயிறுக்கே வருகிறது. எஸ்.என்.லட்சுமியின் சகோதரர்கள் கல்லுடைக்கும் வேலைக்கு செல்ல, பெண் குழந்தைகள் மாவரைத்து தருகிறார்கள். இந்த கஷ்டஜீவனத்தில் கடைசிக்குழந்தையான எஸ்.என்.லட்சுமியை கவனிக்க யாரும் இல்லை. தனது 11 வது வயதில் வீட்டைவிட்டு கிளம்புகிறீர். அவருக்கு தெரிந்த நடனக்கலைஞர் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறார். நாடகம் முடிந்து அனைவரும் வீடு திரும்புகையில் எஸ்.என்.லட்சுமிக்கு மட்டும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை. மெட்ராஸ் சென்று சினிமாவில் சேர விரும்புகிறார். அவரை ராஜ மன்னார்குடியில் மெட்ராஸ் செல்லும் ரயிலில் ஏற்றிவிடுகிறார்கள்.

சினிமாவில் நுழையும்முன் ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடகக் கம்பெனியில் நாடகங்கள் நடிக்க ஆரம்பித்தார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கலைவாணர் சிறை சென்ற போது அவரது நாடகக் கம்பெனியை நடத்தியவர் எஸ்.வி.சகஸ்கரநாமம். நடிகர், நாடகக் கலையின் அனைத்து நுணுக்கங்களும் அறிந்தவர். எஸ்.என்.லட்சுமியைப் போன்று இளவயதில் நாடகத்தில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடிவந்தவர். புகழ்பெற்ற சேவா ஸ்டேஜ் நாடகக் கம்பெனியை தோற்றுவித்தவர். இவரது வழிகாட்டுதல் எஸ்.என்.லட்சுமிக்கு பெரிதும் உதவியது. இவரது நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான் முத்துராமனும், தேவிகாவும்.எஸ்.என்.லட்சுமி 200க்கும் அதிகமான நாடகங்களில் நடித்தார். 2000 க்கும் அதிகமானமுறை மேடையேறியிருக்கிறார். பாலசந்தரின் ராகினி ரிக்ரியேஷன்ஸ்; நாடகக்குழுவிற்காகவும் இவர் நடித்திருக்கிறார். 1948 இல் ஜெமினியின் சந்திரலேகா திரைப்படத்தில் நடனமாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை. 1955 இல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தனது நல்ல தங்காள் திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு அளித்தார். எனினும் 1959 இல் வெளியான தாமரை குளம் திரைப்படமே எஸ்.என்.லட்சுமியை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க சினிமாவில் பிஸியானார்.1945 இல் தனது 11 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்தே எஸ்.என்.லட்சுமியின் துணிச்சலை அறிந்து கொள்ளலாம். திரைப்படத்திலும் சாகஸக் காட்சிகளில் துணிந்து நடித்தார். முக்கியமாக எம்ஜிஆரின் பாக்தாத் திருடன் படத்தில் சிறுத்தையுடன் அவர் போட்ட சண்டை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் படப்பிடிப்புத்தளத்திலேயே அவரது துணிச்சலை பாராட்டினார். நாகேஷின் சிபாரிசில் பாலசந்தரின் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி என அந்த காலத்தின் சூப்பர்ஸ்டார்களின் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.எஸ்.என்.லட்சுமியின் மனதில் தங்கும் திரைப்படங்களை தந்ததில் கமலுக்கு பெரிய பங்குண்டு. இயல்பாகவே பழம்பெரும் நடிகர்கள் மீது ஈர்ப்பு கொண்ட அவர் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் துணிச்சலான, திருட்டுப் பாட்டி கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார். பாக்தாத் திருடனில் கமல் ரசித்த சிறுத்தை சண்டைக் காட்சியும், வாள் சண்டையும், மைக்கேல் மதன காமராஜனில் அதிரடி சண்டையிடும் பாட்டியாக எஸ்.என்.லட்சுமியை சித்தரிக்க வைத்தது.தேவர் மகன் படம் எடுக்கையில் சிவாஜி, காகா ராதாகிருஷ்ணனுடன் முன்பு நடித்த எஸ்.என்.லட்சுமியையும் நடிக்க வைத்தார். அதில் காகா ராதாகிருஷ்ணனின் மனைவியாக, மாயத்தேவராக நடித்த நாசரின் தாயாக நடித்தார். மகன் தேருக்கு குண்டு வைத்ததை கமலிடம் சொல்ல ஓடோடிவரும் கதாபாத்திரம்.அதில் ஜாக்கெட் அணியாமல், வடிந்த காதுடன் கிராமத்து கிழவியாக நடிக்க வைத்த கமல் மகாநதியில் தனது மாமியாராக முற்றிலும் வித்தியாசமான வேடத்தை தந்தார். கமல் மது அருந்திவிட்டு வரும் இரவில் ஒரு மாமியாராக இல்லாமல் ஒரு தாயாக அவர் பேசும் காட்சி வலிமைமிக்கது. மகாநதியில் மாமியாராக நடித்தவர் விருமாண்டியில் கமலின் பாட்டியாக நடித்தார். ஜல்லிக்கட்டில் காயம்பட்ட பேரனை கடிந்து, அவன் காயத்தில் தலையால் முட்டும் ஆக்ரோஷமான பாட்டி.எஸ்.என்.லட்சுமி கதாபாத்திரத்துக்கு தாண்டிய மேனரிசங்களையோ பாவனைகளோ செய்வதில்லை. கதாபாத்திரமாகவே மாறிப்போவது அவரது இயல்பு. அதுதான் அவரை பிரபலப்படுத்தமல் குடத்திலிட்ட விளக்காக வைத்திருந்தது. பதினொரு வயதில் வீட்டைவிட்டு அவர் கிளம்ப குடும்பத்தில் நிலவிய குழப்பங்களே காரணம். எட்டு வருடங்கள் கழித்தே அவரது குடும்பம் அவரை கண்டு பிடித்தது. ஆனாலும், கடைசிவரை குடும்பம் என்ற அமைப்பின் மீதான ஒவ்வாமை அவரிடம் இருந்தது.எனக்கு திருமணம் தேவையில்லை என்று கடைசிவரை அவர் குடும்பப் பந்தத்தில் இணையவில்லை. அண்ணன்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன்தான் வசித்தார். நடிப்பு அவருடன் ஊறிப்போன ஒன்று. கடைசிவரை அதனை அவர் விடவில்லை. சினிமாவில் வாய்ப்பு குறைந்த போது தொலைக்காட்சிக்கு வந்தார். நெடுந்தொடர்களில் நடித்தார். 2012 பிப்ரவரி 20 ஆம் தேதி அவர் மாரடைப்பால் காலமானார். சந்திரலேகாவிலிருந்து அவரது திரைப்பங்களிப்பை தொகுத்துப் பார்த்தால் அவர் எப்பேர்ப்பட்ட நடிகை என்ற வியப்பு மேலிடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி