Home /News /entertainment /

ஒரு நாயகன் உதயமாகிறான் - சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கான கையேடு

ஒரு நாயகன் உதயமாகிறான் - சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கான கையேடு

சந்தோஷ் நம்பிராஜன்

சந்தோஷ் நம்பிராஜன்

டூலெட் திரைப்படத்தில் நடிகராக மட்டுமின்றி அதன் ஆக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே பங்களிப்பு செலுத்தி வந்துள்ளார். அந்த அனுபவங்கள், அவற்றினூடாக தான் கற்றுக் கொண்டவை ஆகியவற்றை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் டூலெட் திரைப்படத்தில் நாயகனாக  அறிமுகமான சந்தோஷ் நம்பிராஜன், தனது முதல்பட அனுபவங்களை, ஒரு நாயகன் உதயமாகிறான் என்ற பெயரில் புத்தகமாக்கியுள்ளார். சந்தோஷ் நம்பிராஜன் அடிப்படையில் ஒளிப்பதிவாளர். பரதேசி உள்ளிட்ட படங்களில் செழியனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கத்துக்குட்டி உள்பட மூன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டூலெட் திரைப்படத்தில் நடிகராக மட்டுமின்றி அதன் ஆக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே பங்களிப்பு செலுத்தி வந்துள்ளார். அந்த அனுபவங்கள், அவற்றினூடாக தான் கற்றுக் கொண்டவை ஆகியவற்றை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

தங்களின்  சினிமா அனுபவத்தை, திரைப்பயணத்தை பலர் பதிவு செய்திருக்கிறார்கள். சிவகுமார், கலைஞானம், ஆரூர்தாஸ் என இந்தப் பட்டியல் நீண்டது. ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களும் தங்களின் திரையுலகப் பயணத்தை புத்தகமாக்கியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து, நூற்றுக்கணக்கானவர்களுடன் தொழில்ரீதியாக உறவாடி, சினிமாவின் பல சிகரங்களை அடைந்து அதன் பின் தங்களின் அனுபவங்களை புத்தகமாக்கியவர்கள். சந்தோஷ் நம்பிராஜன் நடிப்பில் இதுவரை ஒரேயொரு திரைப்படமே வெளியாகியிருக்கிறது. அந்தப் படத்தின் அனுபவத்தை மட்டுமே தனிப்புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார். இதுதான் மற்றவர்களுக்கும், இவரது புத்தகத்துக்கும் உள்ள பிரதான வித்தியாசம். இதுவே ஒரு நாயகன் உதயமாகிறான் புத்தகத்தின் பலமும்.

பல வருட திரைத்துறை அனுபவங்களுக்குப் பிறகு, அதில் சாதித்த நிறைவுடன் எழுதப்படும் புத்தகங்கள் வாசகனுக்கு ஆச்சரியமூட்டுபவை. அவன் அண்ணாந்துப் பார்த்த பல ஆளுமைகள் குறித்து நூலாசிரியர் பல்வேறு உள்தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். நாம் வியந்துப் பார்த்த திரைப்படங்களுக்கு பின்னாலுள்ள கதைகள் திரைப்படத்தைவிட சுவாரஸியத்துடன் சொல்லப்பட்டிருக்கும். திரைத்துறையின் நடைமுறைகள் நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் புத்தகங்களில் உள்ள போதாமை, அந்தப் புத்தகங்கள் வெளியாகும்போது, அதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியிருக்கும். அன்றை திரைத்துறை நடைமுறைக்கும் நிகழ்கால திரைத்துறை நடைமுறைக்குமான ஒற்றுமை தலைகீழாகியிருக்கும். அவற்றை படித்துவிட்டு நிகழ்கால திரைத்துறை  நடைமுறைகளை நாம் கணிக்க இயலாது. ஆச்சரியமூட்டும் தகவல் மற்றும் சாதனைகளின் தொகுப்பாக அந்தப் புத்தகங்கள் எஞ்சும். அந்த இடத்தில் ஒரு நாயகன் உதயமாகிறான் வித்தியாசப்படுகிறது.

டூலெட் திரைப்படம் தமிழின் இரண்டாவது சுயாதீன திரைப்படம் எனலாம். எந்த பெரிய நிறுவனங்களையோ, தனி நபர்களையோ சாராமல் இயக்குநரே பணத்தை தயார் செய்து, நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து, குறைந்த முதலீட்டில் தான் விரும்பிய படத்தை எடுப்பது. இதில், 'தான் விரும்பிய படம்' என்பது முக்கியமானது. சுயாதீன திரைப்படத்தில் பார்வையாளர்கள் இல்லை. இயக்குநர் தான் மற்றவர்களுடன் பகிர விரும்பிய ஒன்றை தனது கலையனுபவத்தின் அடிப்படையில் முன்வைப்பது. இது பார்வையாளர்களுக்கு பிடிக்குமா, இந்த இடத்தில் இப்படி காட்சி வைத்தால் கைத்தட்டல் பெறுமா, கமர்ஷியலாக வெற்றியை தருமா என்றெல்லாம் சிந்திக்காமல் தனது கலை வெளிப்பாட்டுக்கு 100 சதவீதம் உண்மையாக ஒரு படைப்பை தருவது. அதுதான் டூலெட்.100 க்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்கள்... 82 சர்வதேச போட்டிப் பிரிவுகள்.. 32 விருதுகள் என தமிழ் சினிமா இதுவரை சாத்தியப்படுத்தாத அனைத்தையும் டூலெட் சாதித்தது. லட்சங்கள் செலவில் இந்தப் படத்தை செழியன் எங்ஙனம் எடுத்தார். எப்படி படம் உருவானது, அதன் பின்னால் இருந்த சவால்கள் என்னென்ன என்பதை தன்னுடைய அனுபவங்கள் வழியாக சந்தோஷ் நம்பிராஜன் இந்தப் புத்தகத்தில் முன் வைத்துள்ளார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான இணக்கம், குடும்பப் பொறுப்பு ஆகியவை புனைவின் சுவையுடன் ஊடுபாவாக வருவது சிறப்பு.

படப்பிடிப்புக்கு முன்பு ஏன் நடிகர்கள் ஒத்திகைப் பார்க்க வேண்டும், அதனால் இயக்குநருக்கும், நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன, கலை இயக்கத்துக்கான பட்ஜெட்டை கட்டுக்குள் வைப்பது எப்படி, யதார்த்தமான நடிப்பை நடிகர்களிடமிருந்து ஒரு இயக்குநர் எப்படி வாங்க வேண்டும், கொரில்லா ஃபிலிம் மேக்கிங் என்றால் என்ன என்பவை சந்தோஷ் நம்பிராஜனின் அனுபவங்களின் வழியாக முன்வைக்கப்படுகிறது.

Also read... Gargi Movie Review: எப்படி இருக்கிறது சாய் பல்லவியின் கார்கி படம்?

எளிமையும், நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட எழுத்து சந்தோஷ் நம்பிராஜனுடையது. திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களை நுட்பமாக விவரிக்கும் அதேநேரம், அதிலிருந்து ஒருவர் மீள்வது எப்படி என்பதை தனது முயற்சிகளின் வாயிலாக அவர் பதிவு செய்திருப்பது திரைத்துறையில் நுழைகிறவர்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.சாதித்தவர்களின் திரைஅனுபவம் பிரமிப்பை கொடுக்கும். சந்தோஷ் நம்பிராஜனின் ஒரு நாயகன் உதயமாகிறான் திரைத்துறையில் நுழைகிறவர்களுக்கு சாதிப்பதற்கான நம்பிக்கையை அளிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி