TM Soundarajan: ஏழிசை வேந்தன் டி.எம்.செளந்தரராஜன்!

டி.எம்.செளந்தரராஜன்

சிவாஜிக்கு பாடும் போது சிவாஜியாகவும்… எம்ஜிஆருக்கு பாடும் போது எம்ஜிஆர்ஆகவும் கூடு விட்டு கூடு பாயும் குரல் வித்தை காரரானார் டி.எம்.எஸ்.

  • Share this:
தமிழ் சினிமாவுக்கும் மூன்றெழுத்துக்கும் எப்போதும் அப்படி ஒரு பொருத்தம் எனலாம். எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரம் போல் இன்னோர் மூன்றெழுத்து தமிழ் சினிமாவை ரீங்காரித்தது. அந்த மூன்றெழுத்து குரல் தமிழ் சினிமாவில், செய்த சாதனைகள், மிகப்பெரிய சரித்திரம் ஆனது. டி.எம்.எஸ் எனும் இந்தப் பெயர்தான் தமிழர்களின் காதுகளுக்கு ஐந்து தலைமுறைகளாக தேன் வார்த்தது.

தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட இந்த எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன் ஆனான். ஆம்… டி.எம்.எஸ் என அழைக்கப்படும் டி.எம்.செளந்தர்ராஜன் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழை இவரளவுக்கு அட்சரம் பிசகாமல் உச்சரித்தவர்களில்லை என்று இன்றைக்கும் கொண்டாடி தீர்க்கும் தமிழ் சினிமா. வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என கொண்டாடியது இந்திய சினிமா.தமிழகத்தில் 1960 மற்றும் 70-களில் இவர் பாட்டுக்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம் 1946-லிருந்து 2007-ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஐந்து தலைமுறைகளாக, 10,000-ற்கும் மேலான பாடல்கள்…., 2000-க்கும் மேலான பக்தி பாடல்கள் என டி.எம்.எஸ் குரல் ஒலிக்காத இடம் இல்லை என சொல்லலாம்.இளமையிலேயே இசைப் பயிற்சி பெற்று கச்சேரிகள் செய்து வந்த டி.எம்.எஸ், எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் பாடி வந்தார். ஒரு கச்சேரியில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு முன்பு பாடிய சிறுவனான டி.எம்.எஸின் குரல் அவரை ஈர்த்தது. “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்ததும், 1950-ஆம் ஆண்டு
வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடலானதும் வரலாறானது.

‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். எம்ஜிஆரின் ‘மந்திரிகுமாரி’, ‘சர்வாதிகாரி’ படங்களுக்கெல்லாம் பாடிய டி.எம்.எஸ்-க்கு சிவாஜிக்குப் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. அது எம்ஜிஆர் - சிவாஜி என்று வரத்தொடங்கிய காலம். ஆரம்பத்தில் ‘சிவாஜி கணேசனின் குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். எனினும் சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்

மலைக்கள்ளன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு பாடிய ”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது. எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்க முடியாத பிம்பம் ஆனார்.

எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை என்ற வரலாற்றை படைக்க ஆயுத்தமானார் இந்த சிம்மக்குரலோன். . திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் எம்.ஜி.ஆரா இல்லை சிவாஜியா என்பதை சொல்லிவிடலாம். எம்ஜிஆருக்கு ஒரு குரலையும் சிவாஜிக்கு ஒரு குரலையும் என வித்தியாசம் காட்டிய டி.எம்.எஸ்ஸை கண்டு, எல்லோருமே பிரமித்து போனார்கள்.எம்ஜிஆர், சிவாஜிக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான குரலாகவும் அவரின் குரல் ஒலித்தது. முத்துராமனுக்கென ஒரு ஸ்டைல், ஜெமினி கணேசனுக்கு ஒரு ஸ்டைல், எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு விதம், ஜெய்சங்கருக்கு ஒரு விதம். என அந்தக் குரல் மாயங்கள் செய்து ஜாலங்கள் புரிந்தது.. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று சாட்டையைச் சுழற்றிய அதே குரல்தான் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி’ என்று அழவும் வைத்தது.சிவாஜியின் பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவதும் ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் சன்னமான குரலில் இறங்கி அசத்துதும் டி.எம்.எஸ்ஸுக்கே சாத்தியம் எனலாம். சிவாஜியின் எண்ணற்ற பாடல்களில் இப்போதும் டி.எம்.எஸ்ஸின் முகம் ரசிகர்களுக்கு வராமல் இருப்பது சாத்தியம் இல்லை என அடித்து சொல்லும் அளவு எண்ணற்ற பாடல்களில் சிவாஜியாகவே வாழ்ந்திருப்பார் டி.எம்.எஸ்.சிவாஜிக்கு பாடும் போது சிவாஜியாகவும்… எம்ஜிஆருக்கு பாடும் போது எம்ஜிஆர்ஆகவும் கூடு விட்டு கூடு பாயும் குரல் வித்தை காரரானார் டி.எம்.எஸ். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என எம்ஜிஆருக்கு டி.எம்.எஸ் பாடிய பாடல்கள்தான், இன்றைக்கும் எம்ஜிஆரின் பிறந்தநாள், நினைவுநாளிலெல்லாம் தெருவெங்கும் ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்.கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடித்தார்.

அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் இப்போதும் பக்தி இசை ரசிகர்களின் மோஸ்ட் வாண்டேட் பாடல் எனலாம்,. இப்படியாக திரையிசை பாடல்களில் மட்டுமல்லாமல் பக்தி பாடல்களிலும் வசியம் செய்தார் டி.எம்.எஸ்.`கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... ’, 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடிய டி.எம்.எஸ்ஸின் குரலை அதிகாலை வேளையிலே இப்போதும் கேட்கலாம்.உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகம் சிவாஜிக்கு தன் குரலிலேயே சவால் கொடுத்த ஒரு பாடகர் என்றால் அது டி.எம்.எஸ் தான் என்பதை பல பாடல்கள் சொன்னது குறிப்பாக ’கவுரவம்’ திரைப் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா… கண்ணா நீயும் நானுமா…” என்ற அந்த பாடலை கேட்ட சிவாஜி மிரண்டு போய்தான் நடித்தார் என சொன்னது அக்கால கதைகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி என்று மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களுக்கும் பொருந்தி போனது டி.எம்.எஸ்-ஸின் காந்தக்குரல். ஆம். முத்துகுளிக்க வாரீயளா’ என்று நாகேஷுக்கு இவர் பாடியதை ரசித்த ரசிகர்கள்தான் ‘நான் மலரோடு தனியாக’ என்று ஜெய்சங்கருக்குப் பாடியதையும் கொண்டாடினார்கள்..

டி.எம்.எஸை கொண்டாட இன்னொரு காரணமும் கிடைத்தது மக்களுக்கு. ஆம்… பாடல்களை மட்டுமல்லாமல் வசனத்தையும் பாடக்கூடியவர் டி.எம்.எஸ். என உச்சி முகர்ந்தது தமிழ் சினிமா. "உயர்ந்த மனிதன்' படத்தில் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே', என வசனத்தில் அமைந்த பாடலே அதற்கு சாட்சி.

டி.எம்.எஸ் சாதாரண ஒரு பாடகராக மட்டும் இருந்திருந்தால் இந்த உயரத்தை அடைந்திருக்க மாட்டார் என சொல்லியது தான் பாடிய பாடல்களில் டி.எம்.எஸ் செய்த புதுமைகள் பல. "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ...' போன்ற பாடல்களில் தேன் வண்டு செவிகளில் ரீங்காரம் இட செய்தது அவருடைய குரல் என்றால் "ஆறுமனமே ஆறு. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. பாடலில் கேட்ப்போரை துறவியாக்கியது அதே குரல்.டி.எம்.எஸ் குரலில் "ஊட்டி வரை உறவு' படத்தில் தமிழ், ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை எந்த வித கலப்புகளும் இல்லாமல் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்ற வரிகளால் வெளிநாட்டினரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடி மகிழ்வித்தது என்றால் "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு', என்ற தத்துவ பாடலில் எம்.ஜி.ஆரின் புகழை பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் சென்றது எனலாம்.கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’ என்ற வரிகளைப் பாட மறுத்துவிட பின்னர், கவிஞர் `சாகவேண்டும் ’ என்பதை
`வாடவேண்டும் ’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார். அதேபோல் `நவராத்திரி ’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருந்தது என புதுமைகளின் நாயகனானார் டி.எம்.எஸ்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் என முன்னணி நாயகர்களுக்கு பாடலில் குரல் கொடுத்த டி.எம்.எஸ் டி.ராஜேந்தரின் ’ ஒரு தலை ராகம் . படத்திலும் குரல் கொடுத்தார். ’நூலும் இல்லை வானும் இல்லை…’ பாடலும் “என் கதை முடியும் நேரம் இது” பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட அடித்து அப்படத்தை வெற்றி பெற செய்தது.

பின் கால மாற்றங்களில் டி.எம்.எஸ்ஸின் குரல் தமிழ் சினிமாவில் ஒலிப்பது முற்றாக குறைந்தது. தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடிய டி.எம்.எஸ் இறுதியாக 2010-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடிய இவருக்கு மத்திய அரசு 2003-ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது. கம்பீரமான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட டிஎம்எஸ், தனது 91-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இன்றும் என்றும் இசை ரசிகர்களை விட்டு மறைய போவதில்லை என சொல்லி கொண்டேயிருக்கும் “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என காற்றில் ஒலித்து கொண்டிருக்கும் பாடலை போல் அவரது ஆயிரம் பாடல்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: