ஒரு மொழியில் அனைவரையும்விட பிரபலமாகவும், ஸ்டார் அந்தஸ்துடனும் இருப்பவர்களை சூப்பர் ஸ்டார் என்பார்கள். காலகட்டத்துக்கு ஏற்ப சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டிருப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என தியாகராஜ பாகவதரை சொல்லலாம். அவர் நடித்தப் படங்கள் பல வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனைகள் படைத்தன. அவரைப் பார்க்க, அவரது குரலைக் கேட்க ரசிகர்கள் அலைமோதினர். தங்கத்தட்டில் சாப்பிட்டு, ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த அவரை, மஞ்சள் பத்திரிகையாளர் லக்ஷ்மிகாந்தனின் கொலை வழக்கு வீதியில் தூக்கி எறிந்தது.
நாற்பதுகளில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் பாகவதருக்கு சிறைவாசத்தைப் பெற்றுத் தந்தது. அவருடன் கைது செய்யப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலையான பிறகும் பாகவதரின் சிறைவாசம் தொடர்ந்தது. அவர் விடுதலையாகி வந்த போது உலகம் வேறொன்றாக மாறியிருந்தது. யாரும் பாகவதரை கண்டு கொள்ளவில்லை. மறுபடியும் நடிக்கத் தொடங்கிய போது படங்கள் வரவேற்பு பெறாமல் தோல்வி கண்டன. புறக்கணிப்பு, கடன் என்று வாழ்வின் இன்னொருபுறத்தை பாகவதர் அனுபவப்பட்டார். எப்படியும் பழைய நிலைக்கு திரும்புவது என்ற அவரது முயற்சியில் 1957 இல் வெளியான படம்தான் புது வாழ்வு.
இளங்கோவன், ஏகே.வேலன், இரைமுடி மணி மூவரும் இணைந்து கதையெழுத, பாகவதர் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்தார். பாகவதரின் உண்மைக் கதையை புது வாழ்வு பிரதிபலித்தது. வைகுண்டம் கிராமத்தின் அப்பாவி இளைஞன். அவனுக்கும் கிராமத்து வெள்ளந்திப் பெண் நாகம்மாளுக்கும் காதல். இது நாகம்மாளின் அண்ணனுக்குப் பிடிக்காமல் போக, அவனுக்கு வைகுண்டத்தின் மீது பகை ஏற்படும். ஒருமுறை வைகுண்டத்தை அடித்து, மரத்தில் கட்டி வைத்துவிடுவான். அவனை அந்த வழியாக வரும் பணக்காரப் பெண் சுபா விடுவித்து தன்னுடன் பட்டணத்துக்கு அழைத்துச் செல்வாள். அவனிடம் அபாரமான குரல்வளம் இருப்பதை அறிந்து, பாடுவதற்கு அவனுக்கு வாய்ப்புகள் வாங்கித் தருவாள். அவனது பெயரையும் கீதாமணி என மாற்றுவாள்.
கீதாமணி விரைவில் சிறந்த பாடகனாக பெயர் பெற்று, வாழ்வின் உச்சத்தை எட்டுவான். பணம் கண்ணை மறைக்க, தனது பெற்றோரை உதாசீனப்படுத்துவான். நாகம்மாளையும் கண்டுகொள்ள மாட்டேன். இதனால் வெறுத்துப் போகும் அவள், தற்கொலை முயற்சிவரை செல்வாள். இறுதியில் கீதாமணி தவறை உணர்ந்து எப்படி திருந்திய மனிதனாக மாறி நாகம்மாளை ஏற்றுக் கொண்டான் என்பது கதை.
இதில் வைகுண்டமாக பாகவதரும், நாகம்மாளாக லலிதாவும், சுபாவாக மாதுரி தேவியும் நடித்தனர். சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்கு தன்னிடம் எஞ்சியிருந்த செல்வத்தைப் போட்டு, கடன்கள் வாங்கி புது வாழ்வு படத்தை பாகவதர் எடுத்தார். குரல்தான் தனது பலம் என்பதை அறிந்து படத்தில் இடம்பெற்ற 18 பாடல்களில் 13 பாடல்களை அவரே பாடினார். இதில் இரு டூயட் பாடல்களில் ஒன்றில் ஜிக்கியும், இன்னொன்றில் லீலாவும் அவருடன் இணைந்து பாடினர். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து இரு பாடல்களை பாடினர். ராதா ஜெயலக்ஷ்மியும், கஜலக்ஷ்மியும் தலா ஒரு பாடலை பாடினர்.
புது வாழ்வு படத்தின் பாடல்கள் ஹிட்டாயின. பல பிரச்சனைகளால் 1957 மார்ச் 8 ஆம் தேதி புது வாழ்வு ஒருசில திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. பிறகு மார்ச் 22 ஆம் தேதி பிற திரையரங்குகளில் வெளியிட்டனர். புது வாழ்வு படம் வந்த போது, தமிழில் பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்கள் வெளியாகி சமூகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனை ருசித்த ரசிகர்களுக்கு புது வாழ்வு கதையும், காட்சிகளும் போதவில்லை. படத்தை அவர்கள் புறக்கணிக்க, பாகவதருக்கு மறுவாழ்வு தராமலே திரையரங்கை விட்டு புது வாழ்வு வெளியேறியது.
இந்தப் படத்தால் பாகவதர் கடனாளியானார். அவரது இறுதி நம்பிக்கையும் அறுந்து போனது. பல்வேறு உடல் உபாதைகளும் சேர்ந்து கொள்ள பாகவதர் சோர்ந்து போனார். புது வாழ்வு வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து அவரது நலம்விரும்பி முத்தையா பிக்சர்ஸ் எம்.ஏ.வேணு சிவகாமி படத்தை பாகவதரை வைத்து எடுத்தார். பாகவதரின் விருப்பத்தின் பேரிலேயே இந்தப் படத்தை அவர் தயாரித்தார். படம் வெளியாகும் முன்பே, பாகவதர் மரணமடைந்தார்.
புது வாழ்வு ஒரு கலைஞனின் ஆகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம். சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைத்து, அடுத்தகணமே இரக்கமில்லாமல் குப்புறத் தள்ளும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் படம். 1957 மார்ச் 8 வெளியான புது வாழ்வு இன்று 66 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema