ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ஹீரோவாக களமிறங்கிய படம் லவ் டுடே. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் காதலர்களுக்கு இடையேயான பிரச்னைகளை யதார்த்தமாக பதிவுசெய்த இந்தப் படம் இளைஞர்களின் கவனம் பெற்று வசூல் சாதனை படைத்தது. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூலைப் பெற்றது.
இந்தப் படத்தின் டிரெய்லரே படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. ஒரு அறிமுக நடிகரின் படத்துக்கு இப்படிப்பட்ட வரவேற்பா என திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது லவ் டுடே படத்தின் வெற்றி. பொதுவாக தெரிந்த முகங்கள் இருந்தால்தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்ற கருத்தினை லவ் டுடே படம் உடைத்திருக்கிறது. இந்தப் படத்தினை உதாரணம் காட்டி ஒரு படம் வெற்றிபெற கதை மிக முக்கியம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருப்பதாக விமர்சகர்கள் கருத்துதெரிவித்துவருகின்றனர்.
கடந்த 2017-ல் ஆப் லாக் என்ற குறும்படத்தை பிரதீப் இயக்கியிருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டே லவ் டுடே படத்தின் திரைக்கதை அமைத்திருந்தார். சத்யராஜ், ராதிகா, யோகி பாபுவைத் தவிர பெரும்பாலும் புதுமுகங்களே நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடிக்க, ரவீனா, விஜய் வரதராஜ், ஃபைனலி பரத், ஆஜித், அக்ஷயா உதயகுமார், பிரார்த்தனா நாதன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் கைப்பற்றியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஹிந்தியில் இந்தப் படத்தில் வருண் தவான் நடிக்க, டேவிட் தவான் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் அதிகம் ரீமேக் செய்யப்பட்டுவருகின்றன. தமிழ் படமான விக்ரம் வேதா அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு மாதவன் வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும் மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்திருந்தனர். அதே போல கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் போலா என்ற அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரிலும், ஜிகர்தண்டா படம் பச்சன் பாண்டே என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போனி கபூர் தமிழ் படங்களை ஹந்தியில் ரீமேக் செய்யப்படுவதைப் போல ஹிந்தி படங்களான ஆர்டிக்கல் 15 படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரிலும், பதாய் ஹோ படத்தை ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரிலும் ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ஓடிடி தளங்களில் நாம் அனைத்து மொழி படங்களையும் பார்த்துவிடுவதால் ரீமேக் படங்களுக்கு வரவேற்பு குறைவாகவே இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boney Kapoor, Thunivu