ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படமும், பரிசுத்த நாடாரின் யாகப்பா திரையரங்கும்!

தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படமும், பரிசுத்த நாடாரின் யாகப்பா திரையரங்கும்!

பரிசுத்த நாடார்

பரிசுத்த நாடார்

பரிசுத்த நாடார் என்பது தஞ்சையின் செல்வாக்குமிக்க பெயர்களுள் ஒன்றாக இருந்தது. அதன் காரணமாகவே அவரது யாகப்பா திரையரங்கில் தூங்காதே தம்பி தூங்காதே படம் வெளியாகி, அது குறித்து பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்ட போது, பரிசுத்த நாடாரின் பெயரும் இடம்பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1983 நவம்பர் 4 ஆம் தேதி வெளியான கமலின் தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படம் சக்கைப்போடு போட்டது. பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். அப்போது சினிமா மட்டுமே மக்களின் ஒரே பொழுதுப்போக்கு. திரையரங்கு வைத்திருப்பது சமூக அந்தஸ்து. ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.

அப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக வசூல் செய்தால், திரையரங்கு உரிமையாளர்களே சொந்தக் காசில் பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள். தங்கள் திரையரங்குகளில் எத்தனை பேர் படம் பார்த்தார்கள், எத்தனை ரூபாய் கலெக்ஷன் ஆனது என்பதையெல்லாம் அதில் தெரிவித்திருப்பார்கள். தூங்காதே தம்பி தூங்காதே படத்துக்கு, தஞ்சை யாகப்பா திரையரங்கு சார்பில் அப்படி விளம்பரங்கள் செய்யப்பட்டன.

ஒரு விளம்பரத்தில், 'பார்த்தவர்களே மீண்டும் பார்ப்பதனால் 32 வருடங்களாக நாங்கள் பார்க்காத 77 நாட்களில் 1,94,444 (நெட்) வசூலை இன்று பார்க்கிறோம்' என குறிப்பிட்டிருந்தனர். அதில் யாகப்பா திரையரங்கு உரிமையாளர் பரிசுத்த நாடாரின் புகைப்படம், தஞ்சை யாகப்பா திரையரங்கு உரிமையாளர் என்ற குறிப்புடன் இடம்பெற்றிருந்தது. அதற்கு முன் அத்திரையரங்கில் அதிகம் வசூல் செய்த கமலின் சகலகலாவல்லவன் 77 தினங்களில் 1,52,877 ரூபாய் வசூல் செய்த விவரத்தையும் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுவாக திரையரங்கு உரிமையாளரின் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் தருவதில்லை. இது விதிவிலக்கு. காரணம், பரிசுத்த நாடார் என்ற பெயருக்கு தஞ்சையில் இருந்த செல்வாக்கு.

காமராஜரின் அணுக்கத் தொண்டரான பரிசுத்த நாடார் காங்கிரஸின் அதிதீவிர விசுவாசி. 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1957 இல் நடந்த தேர்தலில் தஞ்சை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கழுதையை நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்பார்கள். பரிசுத்த நாடாரோ தஞ்சையில் மாபெரும் செல்வாக்கு உடையவர். 1957 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முடிந்தால் தஞ்சையில் நின்று என்னை வீழ்த்திப் பார்க்கட்டும் என்று சவால்விட்டார் பரிசுத்த நாடார். எதிர்க்கட்சிகள் இப்படி சவால்விடுவது அப்போதே சகஜமானது. ஆனால், அதுவெறும் வாய் சவடால்தான். எதுவும் நடக்காது.

1962 இல் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்த போது கருணாநிதி அண்ணாவிடம் தஞ்சை தொகுதியை கேட்டு வாங்கினார். முதலில் அண்ணா சம்மதிக்கவில்லை. செல்வாக்குமிக்க பரிசுத்த நாடாருடன் மோதி கருணாநிதி தோற்பதை அவர் விரும்பவில்லை. ஆனால், கருணாநிதியோ பிடிவாதமாக தஞ்சைத் தொகுதியை கேட்டு வாங்கினார். பரிசுத்த நாடாரும், அவரது ஆள்களும் பணத்தை  எறிந்து விளையாடினர். கருணாநிதி வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார். இறுதியில் முடிவு அறிவிக்கப்பட்ட போது பரிசுத்த நாடாரைவிட 1928 வாக்குகள் அதிகம்பெற்று கருணாநிதி வெற்றி பெற்றிருந்தார். தஞ்சை தரணியில் யாரும் இந்தத் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு பரிசுத்த நாடார் அங்கு செல்வாக்குமிக்கவராக இருந்தார். 1967 இல் நடந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் பரிசுத்த நாடார் போட்டியிட்டார். கருணாநிதி சைதாப்பேட்டையில் போட்டியிட்டார். இந்தமுறை பரிசுத்த நாடார் மீண்டும் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.

Also read... பிக்பாஸில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்... இன்னைக்கு எந்த போட்டியாளர் குடும்பம் வராங்க தெரியுமா?

பரிசுத்த நாடார் என்பது தஞ்சையின் செல்வாக்குமிக்க பெயர்களுள் ஒன்றாக இருந்தது. அதன் காரணமாகவே அவரது யாகப்பா திரையரங்கில் தூங்காதே தம்பி தூங்காதே படம் வெளியாகி, அது குறித்து பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்ட போது, பரிசுத்த நாடாரின் பெயரும் இடம்பெற்றது.

ஒரு சினிமா விளம்பரத்தில் ஒரு அரசியல் செய்தியே அடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Kamal Haasan