• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய் பீம் விவகாரம் - திரையரங்கு உரிமையாளர்களின் திடீர் அறச்சீற்றம்!

ஜெய் பீம் விவகாரம் - திரையரங்கு உரிமையாளர்களின் திடீர் அறச்சீற்றம்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

திருப்பூர் சுப்பிரமணியத்தின் நியாயத்தின் மீதான ஆவேசமும், சட்டத்தின் மீதான அவரது மதிப்பும் பாராட்டுக்குரியது. அதனை அவர் தனது திரையரங்குகளிலிருந்து தொடங்கினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெய் பீம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியானது. படத்தை அனைத்துத் தரப்பினரும் வியந்து பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி நீண்ட கடிதம் எழுதினார். ஜெய் பீம் தமிழக எல்லை கடந்து பிற மாநிலங்களிலும் பார்க்கப்படுகிறது, பாராட்டப்படுகிறது.

ஜெய் பீமின் வெற்றியால் அதிகம் எரிச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள். 2020 இல் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானால் திரையரங்குகள் பாதிக்கப்படும், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறையும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் பார்வை சரியானது. அதேநேரம், ஒருவர் தனது படத்தை எதில் திரையிட வேண்டும் என்பது அவரது உரிமைச் சார்ந்தது. சட்டப்படி தவறில்லை என்பதால், வெளிப்படையாக சூர்யாவின் முடிவை எதிர்க்காமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தனர்

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட விரும்பினார் சூர்யா. ஓடிடியில் வெளியிட்ட படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என அதனை நிராகரித்தனர் திரையரங்கு உரிமையாளர்கள். அதனைத் தொடர்ந்து இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம் ஆகிய தனது படங்களை அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிட ஒப்பந்தம் போட்டார் சூர்யா. முதலிரு படங்கள் குறித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு புகார் இல்லை. ஆனால், ஜெய் பீம் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் முன்னணி நடிகரின் படம். விமர்சனங்கள்வேறு படத்தை கொண்டாடுகின்றன. தங்களுக்கு வரவேண்டிய லாபம் திசைமாறிப்போனதில் கோபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்

ஜெய் பீம் படத்தை சூர்யா ரசிகர்கள் ஒரு இடத்தில் கூட்டமாக திரையிட்டத்தை சுட்டிக் காட்டி தங்களின் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். பொதுவெளியில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவது சட்டப்படி தவறு. அதனை கண்டிக்க யாருக்கும் உரிமை உண்டு. திருப்பூர் சுப்பிரமணியம் அதனைத் தாண்டி பேசியிருப்பவைதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

டிவி விளம்பரத்தில் காலையில் சூர்யா காபி குடியுங்கள் என்கிறார், கார்த்தி டீ குடியுங்கள் என்கிறார். அவர்களின் தந்தை சிவகுமார் டீ, காபி எதுவும் குடிப்பதில்லை, அதனால்தான் 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார். இவர்கள் காசுக்காக எதையும் பேசுவார்கள் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்

யாருக்கு எது பிடித்தமானதோ அதை அவர்கள் குடிக்கப் போகிறார்கள். பிடிக்காதவர்கள் இரண்டையும் தவிர்க்கப் போகிறார்கள். இவரது திரையரங்கு கேன்டீனில் டீ, காபி விற்கத்தானே செய்கிறார்கள். பிறகேன் இந்த காழ்ப்பு?

இன்று படத்தை திரையிடுகிறவர்கள் அடுத்து செக்ஸ் படங்களை திரையிடுவார்கள் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அப்படி யாராவது திரையிட்டால் அதனை காவல்துறை பார்த்துக் கொள்ளும் இவருக்கு ஏன் பதைக்கிறது? சமூக அக்கறையா? இணையதளமும், தொலைக்காட்சியும், வீடியோ கேசட்டும் இல்லாத காலகட்டத்தில் ஊருக்கு ஊர் காலைக்காட்சி என்ற பெயரில் செக்ஸ் படங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது யார். திரையரங்குகள்தானே. திருப்பூர்; சுப்பிரமணியம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்.

சட்டத்தை மீறிவிட்டார்கள் என்று கொந்தளிக்கிறார். சட்டத்தை யார் மீறினாலும் தண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படுவார்கள். எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் திரையரங்குகள் பார்க்கிங் கட்டணமாக அதிகபட்சம் 20 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டதே. அதை எந்த திரையரங்கு உரிமையாளர் கடைப்பிடிக்கிறார். அரசு நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணங்களைத்தானே 90 சதவீத திரையரங்குகள் வசூலிக்கின்றன. எம்ஆர்பி 20 ரூபாய் உள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்பது மட்டும் சட்டத்துக்குட்பட்டதா. சட்டமீறல்களின் கூடாரமாக திரையரங்குகள் இருக்கின்றன

Also read... மீண்டும் குஸ்தியில் இறங்கிய விஷால், மிஷ்கின்...!

திருப்பூர் சுப்பிரமணியத்தின் நியாயத்தின் மீதான ஆவேசமும், சட்டத்தின் மீதான அவரது மதிப்பும் பாராட்டுக்குரியது. அதனை அவர் தனது திரையரங்குகளிலிருந்து தொடங்கினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிக்கெட், பார்க்கிங், தின்பண்டங்களில் திரையரங்குகள் அடிக்கும் கொள்ளையை நிறுத்தினாலே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுப்பார்கள் என்பது திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தெரியாததா என்ன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: