• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தீபாவளியை முன்னிட்டு மீண்டும் கட்டணக் கொள்ளையை தொடங்கும் திரையரங்குகள்!

தீபாவளியை முன்னிட்டு மீண்டும் கட்டணக் கொள்ளையை தொடங்கும் திரையரங்குகள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு அரசு நிர்யணித்த கட்டணம் வசூலித்தால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாது என்றால், அந்தப் படங்களுக்கு மட்டும் அரசு அனுமதியுடன் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு தரலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது கேட்கிற அதே அவலக் குரல்கள் இப்போதும் கேட்கின்றன. திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை தீபாவளியை முன்னிட்டு 99 சதவீத திரையரங்குகள் உயர்த்திவிட்டன. அண்ணாத்த முதல் நாள் முதல் காட்சிப் பார்க்க குறைந்தது 500 ரூபாய் ஒருவர் தர வேண்டியிருக்கிறது. அதிகாலைக்காட்சிகளுக்கு இந்தக் கட்டணம் இன்னும் கூடுதல். எனிமி படத்துக்கு இந்தளவு இல்லை. என்றாலும், அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமே பெரும்பாலான திரையரங்குகளில் வசூலிக்கப்படுகிறது.

கடந்த பல பத்து வருடங்களாக இந்தத் திரையரங்குக் கொள்ளை நடக்கிறது. இதனை யாரும் தட்டிக் கேட்பதாக இல்லை. தனி நபர்கள் பலமுறை வழக்குப் போட்டிருக்கிறார்கள். எந்தப் பலனும் இருந்ததில்லை. இந்தக் கொள்ளைக்கு ஒரு முடிவு இல்லையா? யாரால் இந்த கொள்ளைப் பூனைக்கு மணி கட்ட இயலும்?

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது இரு விதங்களில் வியாபாரம் நடக்கிறது. தனி திரையரங்குகள் படத்தைப் பெற, ஐந்திருந்து இருபது லட்சங்கள்வரை முன்பணமாக தர வேண்டும். அத்துடன் டிக்கெட் கட்டணத்தில் பெரும் சதவீதத்தை தயாரிப்பாளருக்கு தர வேண்டும். உதாரணமாக டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றால் முதல் வாரம் 90 ரூபாய் தயாரிப்பாளருக்கு. 10 ரூபாய் திரையரங்குக்கு. இரண்டாவது வாரத்தில் இது 80 - 20 என மாறும். இந்த 10 - 20 சதவீதத்தை வைத்தே, தயாரிப்பாளருக்கு கொடுத்த பல லட்ச ரூபாய் முன் பணத்தை திரையரங்குகள் எடுத்தாக வேண்டும். லாபத்தையும் பார்க்க வேண்டும்

இந்த சதவீதம், அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி அமையும் என்று நினைத்தால் ஏமாந்தீர்கள். படத்தை தரும்போதே, முதல் மூன்று தினங்கள் டிக்கெட்டை 500 ரூபாய்க்கு விற்க வேண்டும், வார நாள்களில் 300 ரூபாய் என்று சொல்லித்தான் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ படத்தை தருவார். 90 - 10 சதவீதம் என்பது இந்த உயர்த்திய கட்டணத்திலிருந்தே பெறப்படும்

கேரள எல்லையில் இருக்கும் தமிழக தனி திரையரங்கு உரிமையாளாடம் பேசிய போது ஒரு தகவலைச் சொன்னார். எந்திரன் படத்தைவிட அவர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது சிங்கம் படம் என்றார். சிங்கத்துக்கு அவர்கள் கொடுத்தது ஐந்து லட்ச ரூபாய். எந்திரனுக்கு பதினைந்து லட்சம். சிங்கத்தைவிட, எந்திரனுக்கு அதிக பார்வையாளர்கள் வந்தனர். எனினும் கொடுத்த முன்பணம் குறைவு  என்பதால் லாபத்தில் எந்திரனை சிங்கம் முந்தியது.

மல்டிபிளக்ஸ்களில் கட்டணத்தை பலவகைகளில் உயர்த்துகின்றன. மாற்றான் படத்தின் போது சென்னை ஏஜிஎஸ் திரையரங்கு ஆன்லைனில் வழக்கமான கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தது. காரணம் தெரியாமல் நேரில் சென்று விசாரித்தால், டிக்கெட்டுடன், பாப்கார்ன், கோக் போத்தலுக்கு பணம் எடுத்திருந்தார்கள். வெளியே அதே கோக், பாப்கர்னுக்கு 50 ரூபாய் என்றால் இவர்கள் 250 ரூபாய் எடுத்திருப்பார்கள்.  

சென்னை புறநகரில் உள்ள திரையரங்கில் ஆன்லைனில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்தால், சேவை கட்டணமாக 40 ரூபாய் மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள். திரையரங்கில் சென்று அதைக் காண்பித்து டிக்கெட் எடுக்க வேண்டும். ஆன்லைனில் அதிக டிக்கெட் கட்டணத்தை போட்டால், அது ஆதாரமாகிவிடும் என்று இப்படி செய்கிறார்கள்

ஆளும்கட்சியினர் நேரடியாக சினிமா வர்த்தகத்தில் இருப்பதால் இந்த கட்டணக் கொள்ளையை எதுவும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வேதாளம் படத்தை சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் வாங்கியது. வேதாளத்துடன் வெளியான கமலின் தூங்காவனம் படத்தின் அதிகாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, வேதாளம் படத்தின் காட்சிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. டிக்கெட் கவுண்டர்களில் அதுவரை இல்லாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலித்தார்கள். பார்வையாளர்கள் கேள்வி கேட்டால் அவர்களை அப்புறப்படுத்த சென்னை திரையரங்குகளில் போலீசார் காவலுக்கு போடப்பட்டிருந்தனர். இப்போது அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. கட்டணத்தை உயர்த்தி வாங்கும் திரையரங்குகள் மேல் இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை

Also read... சத்தியன் அந்திக்காடின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீரா ஜாஸ்மின் - படங்கள்!

இந்த கொள்ளையை அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். திரையரங்கில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணத்தை உயர்த்த முடியாது என்பது உறுதியானால், பெரிய தொகைக்கு படத்தை வாங்க மாட்டார்கள், படங்களின் பட்ஜெட் கணிசமாக குறையும், மாஸ் நடிகர்களின் சம்பளம் 20 முதல் 40 சதவீதம்வரை குறையும்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு அரசு நிர்யணித்த கட்டணம் வசூலித்தால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாது என்றால், அந்தப் படங்களுக்கு மட்டும் அரசு அனுமதியுடன் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு தரலாம். எத்தனை ரூபாய் கட்டணமோ அத்தனைக்கு முறையாக வரி பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை செய்யாமல் திரையரங்கு கட்டணக் கொள்ளையை தடுக்க முடியாது. திரைப்பட வர்த்தகம் சூதாட்டமாக சீரழிவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: