OTT-Theatres: ஓடிடி-யா? திரையரங்கா? தொடரும் யுத்தம்!

ஓடிடி - திரையரங்கு

கொரோனாவுக்கு முன்பு, தமிழில் வருடத்துக்கு 200 படங்கள் சராசரியாக தயாரிக்கப்பட்டன. அவை அனைத்தும் திரையரங்கை நம்பி எடுக்கப்பட்டவை.

  • Share this:
திரையரங்குகள் ஒரே நேரத்தில் இரு எதிரிகளை எதிர்கொள்கின்றன. ஒன்று கொரோனா, இரண்டாவது ஓடிடி. முதல் எதிரியால் இரண்டாவது எதிரி ஊக்கம் பெறுவது, திரையரங்கின் நிலையை இன்னும் மோசமாக்குகிறது.
தொலைக்காட்சி, டிடிஹெச் என திரையரங்கு இதுவரை சந்தித்த எதிரிகளைப் போல் அல்ல ஓடிடி. கொரேனா பேரிடர் காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், அசுரகதியில் ஓடிடி வளர்ந்து வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு வரை இந்தியாவில் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கொரேனா பேரிடரால் வீட்டுக்குள் முடங்கிப் போன மக்கள் பெருவாரியாக ஓடிடியில் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் பார்க்க ஆரம்பித்துள்ளனர். நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி + ஹாட் ஸ்டார், ஸீ 5 போன்ற ஓடிடி தளங்கள் கடந்த மாதங்களில் பல மடங்கு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. கொரோனா நிலைமை சீராகி, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களை விடுங்கள், தயாரிப்பாளர்கள் இனி திரையரங்குகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்களா என்ற சந்தேகத்தை பலரும் முன்வைக்கின்றனர். இதற்கு காரணம் இல்லாமலில்லை.

சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் நேரடியாக வெளியாகி, தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்தது. பூமி, மாறா, டெடி, பரமபத விளையாட்டு என பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. ஓடிடி தளங்களின் லாபம் ஒரு படத்தை மட்டும் மையப்படுத்தியது இல்லை. இந்தப் படத்தால் இத்தனை கோடி நஷ்டம் என்று, தயாரிப்பாளர்களிடம், திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் நஷ்டஈடு கேட்பது போல் ஓடிடி தளங்கள் செய்வதில்லை. பேசிய பணம் கிடைத்துவிடும். தமிழில் தயாரான படத்தை சப்டைட்டிலுடன் வெளியிடுகையில் அல்லது பிற மொழியில் 'டப்' செய்கையில் வேற்றுமொழி ரசிகர்களும் அப்படத்தைப் பார்க்க முடியும். கர்ணன், அசுரன் போன்ற படங்களை அப்படி பல லட்சம் வேற்றுமொழி ரசிகர்களை சென்றடைந்துள்ளன.

அடுத்த மாதம் தனுஷின் ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், த்ரிஷாவின் ராங்கி, கர்ஜனை, மிர்ச்சி சிவாவின் சுமோ, சமுத்திரகனியின் வெள்ளையானை என படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளன. வெள்ளை யானை தொலைக்காட்சியிலும் வெளியாகிறது. ராதாமோகனின் மலேசியா டூ அம்னீசியா திரைப்படம், ஸீ 5-ல் மே 28-ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் இரண்டு டஜன் படங்கள் ஓடிடி வெளியீட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியிலும் இதே தான் நிலை. அக்‌ஷய் குமார் தனது பெல்பாட்டம் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முன் வந்துள்ளார். திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வழியில்லை. வெளியாக வேண்டிய படங்கள் வரிசையாக இருக்கின்றன. ஓடிடி என்றால் ஓடிடி என்ற மனநிலைக்கு அக்ஷய் குமாரே வந்திருக்கிறார் என்றால் மற்றவர்கள் நிலையை சொல்ல வேண்டியதில்லை. பெல்பாட்டத்தை கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்று சொன்னவர்கள்தான் இப்போது கரைந்து ஓடிடி ஜோதியில் கலந்திருக்கிறார்கள்.

ஆனால், சிலர் தங்கள் படங்களை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர். குறிப்பாக பிரமாண்டமாக படத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள், தங்களது உழைப்பு சில அங்குல பெட்டிக்குள் முடங்கிப் போவதை அவர்கள் விரும்பவில்லை. ராஜமௌலி தனது ஆர்ஆர்ஆர் படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளார். அதேபோல் மோகன்லால் தனது மரக்கார் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட விரும்புகிறார். ஓடிடி தளங்கள் தனது படத்தை வாங்க பேச்சுவார்த்தைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களும் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டவை. திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் முழுவீச்சை ரசிகர்கள் ரசிக்க இயலும். பிரபாஸின் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா, ரஜினியின் அண்ணத்த என்று முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கு வெளியீட்டையே விரும்புகின்றன. ஆனால், இரண்டாம், மூன்றாம்கட்ட நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகும் போது, குறிப்பிட்ட தொகையை முன்னமே பெற்றுவிடுகின்றன என்பதுடன் ரசிகர்களையும் சென்று சேர்கிறது. திரையரங்கு என்றால் அவர்கள் முட்டி மோத வேண்டியிருக்கும். வசூலிக்கும் பணத்தில் கால் பங்கு கைக்கு வந்தால் அதிசயம்.

கொரோனாவுக்கு முன்பு, தமிழில் வருடத்துக்கு 200 படங்கள் சராசரியாக தயாரிக்கப்பட்டன. அவை அனைத்தும் திரையரங்கை நம்பி எடுக்கப்பட்டவை. விளைச்சல் அதிகம் என்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்த்து மற்ற படங்களுக்கு (சராசரியாக 175 படங்கள்) விநியோகஸ்தர்கள் வைப்பதே விலை. அவர்கள் விரும்பும்போதே படங்கள் வெளியாகும். அவர்கள் விரும்புகிற நாள்வரையே திரையரங்கில் அவை இருக்கும். இந்த அதிகாரப்போக்கை ஓடிடி ஓரளவு தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்களை இனி திரையரங்கை மட்டும் நம்பி எடுக்க வேண்டியதில்லை. தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக ஓடிடியும் உள்ளது. விநியோகஸ்தர்கள், திரையரங்குகளின் எதேச்சதிகாரத்தை இது ஓரளவு கட்டுப்படுத்தும்.

கொரோனா பேரிடம் முடிந்து திரையரங்குகள் முழுமையான இயக்கத்துக்கு வருகையில் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். அதையே அவர்கள் விரும்புவார்கள். அந்தப் படங்களை விநியோகஸ்தர்களாலோ, திரையரங்குகளாலோ கட்டுப்படுத்த முடியாது. இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களை அவர்கள் கட்டுப்படுத்த முயன்றால், அவர்கள் திரையரங்குகளை தவிர்த்து ஓடிடியை நாடலாம். ஆக, ஓடிடியின் வளர்ச்சி திரைத்துறையில் கோலோச்சியிருக்கும் எதேச்சதிகாரத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது. கொரோனாவால் விளைந்த அபூர்வ நல்விளைவுகளில் இது ஒன்று.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: