• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல், டைம் லூப் திரைப்படங்கள்...!

தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல், டைம் லூப் திரைப்படங்கள்...!

மாநாடு

மாநாடு

ஒரே கதையை மாறி மாறி சுட்டு படம் எடுக்கும் காப்பி லூப் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழில் இருந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் புதிய வார்த்தை டைம் லூப். மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு டைம் லூப் பற்றிய தேடல் அதிகரித்துள்ளது. டைம் லூப் டைம் ட்ராவலில் இருந்து மாறுப்பட்டது.

நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவன் எந்திரத்தின் உதவியினாலோ இல்லை அமானுஷ்ய சக்தியினாலோ இறந்தகாலம் அல்லது எதிர்காலத்துக்கு செல்வது டைம் ட்ராவல். டைம் ட்ராவல் குறித்த அடிப்படை விதி இது. இதற்குள் ஏராளமான துணை விதிகளை திணித்து படத்தை சுவாரஸியப்படுத்துவார்கள். உதாரணமாக, நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவர் இறந்தகாலத்துக்குச் சென்று, அப்போது நடந்த ஒரு நிகழ்வை மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கேற்ப, நிகழ்காலத்திலும் மாற்றங்கள் நிகழும்.தென்கொரி வெப் தொடரான Tunnel இதற்கு சிறந்த உதாரணம். இந்த வருடம் வெளியான The Tomorrow War திரைப்படத்தில் எதிர்காலத்தில் உள்ளவர்கள் நிகழ்காலத்திற்கு வந்து, நிகழ்காலத்தில் இருப்பவர்களை எதிர்காலத்துக்கு அழைத்துப்போய், ஏலியன்களுடன் சண்டையிட வைப்பார்கள். கிறிஸ்டோபர் நோலன் டைம் ட்ராவல் கான்செப்டில் மேலும் சில சிக்கலான விதிகளை சேர்த்து  Tenet  படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பார். டைம் ட்ராவலை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் வெளியான இன்று நேற்று நாளை முக்கியமான முயற்சிடைம் ட்ராவலின் அடுத்தக்கட்டமாக இன்னொருவகை திரைக்கதை எழுதப்பட்டது. அதில் ஒருவர் நிகழ்காலத்தில் இருப்பார். அவரை எதிர்காலத்தில் அல்லது இறந்த காலத்தில் இருப்பவர் தொடர்பு கொள்வார். அதாவது இருவேறு காலகட்டங்களில் இருக்கும் கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வார்கள். இதற்கு சிறந்த உதாரணம் 2000 இல் வெளிவந்த கொரிய திரைப்படமான  Il Mare.  இதனை The Lake House என்ற பெயரில் கியானு ரீவ்ஸ், சான்ட்ரா புல்லக் நடிப்பில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்தார்கள்.இதுபோன்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தில் காதலை உணர்வுப்பூர்வமாகச் சொல்வது கடினம். இந்தப் படம் அதை சாதித்தது. முக்கியமான படம். கண்டிப்பாகப் பார்க்கலாம். கொரியாவின் பிரபலமான Signal வெப் தொடர் இதே திரைக்கதை யுக்தியில் எடுக்கப்பட்டதே. இதில் இறந்தகாலத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கேற்ப நிகழ்காலத்தில் நிகழ்வுகள் மாறும். சமீபத்தில் வெளியான The Call கொரிய படமும் இந்தவகைப்பட்டதே.டைம் லூப் இவற்றிலிருந்து மாறுபட்டது. ஒருநாள் நடக்கும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த நாளிலிருந்து வெளியே முடியாமல் அந்த நாளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும். 2014 இல் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான Edge Of Tomorrow திரைப்படத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் மிகச்சிறந்த உதாரணம் என்றால் 2017 இல் வெளியான கொரிய திரைப்படம்A Day.  இந்தப் படத்தில் ஒரு மருத்துவர் செமினார் ஒன்றை முடித்துவிட்டு விமானத்தில் சொந்த ஊர் திரும்புவார். காரில் தனது மகளைப் பார்க்கச் செல்கையில் , அவளை சந்திப்பதற்கு சற்று முன்பாக நடக்கும் விபத்தில் அவரது மகள் கொல்லப்படுவாள். அவளுடன் ஒரு பெண்ணும் இறந்து போவாள். மருத்துவர் கண்விழித்துப் பார்க்கையில் மறுபடி நிகழ்வுகள் முதலில் இருந்து ஆரம்பிக்கும். அதாவது விமானத்திலிருந்து அவர் இறங்குவதிலிருந்து. ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் மறுபடி நிகழ்வதைப் பார்க்கையில் அவரது மனம் சுறுசுறுப்படையும். எப்படியாவது மகளை காப்பாற்ற வேண்டும் என்று காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்புவார்.ஆனால், அவர் செல்வதற்குள் விபத்து நடந்துவிடும். இப்போது மீண்டும் முதலில் இருந்து. ஒருகட்டத்தில் விபத்தில் இறந்த பெண்ணின் கணவன், விபத்தை ஏற்படுத்தியவன் ஆகியோரும் தன்னைப் போல அதேநாளில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவரும். அவன் ஏன் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி மருத்துவரின் மகளையும், அந்தப் பெண்ணையும் சாகடிக்கிறான் என்பதற்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கும்.

இந்தப் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து ஜாங்கோ என்ற பெயரில் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், சென் ஸ்டுடியோஸ் ரவீந்திரன் ரவியும் எடுத்துள்ளனர். இதன் ட்ரெய்லர் வெளியான உடனே A Day தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிந்து அவர்கள் நஷ்டஈடு கேட்டிருப்பதாக கேள்வி

Also read... விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தா ஒப்பந்தமான இரு படங்கள்...!

சமீபத்தில் ஆஹா ஓடிடியில் இதேபோல் ஒரு வெப் தொடர் வெளியானது. லூசியா, யு டர்ன் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய பவன் குமார் இயக்கியிருந்தார். பெயர் குடி யெடமைதே. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்திலும் ஒருநாள் நிகழ்வு மீண்டும் மீண்டும் வரும். அதற்கேற்ப அமலா பாலும், அதே நாளில் மாட்டிக் கொண்டிருக்கும் உணவு டெலிவரி செய்யும் நாயகனும் தங்கள் நகர்வுகளை மாற்றிக் கொள்வார்கள். இந்த டைம் லூப் திரைக்கதையில் மாநாடு படத்தை வெங்கட்பிரபு எடுத்திருக்கிறார். இது A Day படத்தின் தழுவல் என சிலர் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆனால், A Day படத்தை அப்படியே சுட்டது ஜாங்கோ. ட்ரெய்லரிலேயே அதனை கண்டு கொள்ளலாம்

ஒரே கதையை மாறி மாறி சுட்டு படம் எடுக்கும் காப்பி லூப் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழில் இருந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: