Home /News /entertainment /

தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் வந்த கதை… தென்னகத்து திரைவானிற்கு ஏவிஎம் அளித்த குழந்தை நட்சத்திரம்

தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் வந்த கதை… தென்னகத்து திரைவானிற்கு ஏவிஎம் அளித்த குழந்தை நட்சத்திரம்

விக்ரம் - களத்தூர் கண்ணம்மா படங்களில் கமல்ஹாசன்

விக்ரம் - களத்தூர் கண்ணம்மா படங்களில் கமல்ஹாசன்

… இந்த நேரத்தில் ஏவிஎம் நிறுவனத்தாரின் குடும்ப மருத்துவர் சாரா ராமச்சந்திரனுடன் ஆறு வயது கமலஹாசன் படத்தின் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் வருகிறார்…

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
1960 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் தேதி கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா வெளியானது. அதாவது கமல் என்ற நடிகர் திரையில் அறிமுகமாகி 62 வருடங்கள் நேற்று நிறைவுபெற்று இன்று 63 வது ஆண்டு தொடங்குகிறது. களத்தூர் கண்ணம்மா படம் ஆரம்பித்ததிலிருந்து முடிந்ததுவரை நடந்த நிகழ்வுகளை தொகுத்தால் அதுவே சுவாரஸியமான ஒரு திரைப்படமாக இருக்கும்.ஏவி மெய்யப்ப செட்டியார் தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வந்த அவரது மகன்கள்  சரவணன், மெய்யப்பன், குமரன் மூவருக்கும் தனியாக ஏவிஎம் பேனரில் படம் செய்யலாம் என்று ஆசை. நேரடியாக அப்பாவிடம் கேட்க பயம். அம்மா ராஜேஸ்வரி வழியாக அப்பாவிடம் கேட்கிறார்கள். அவரும் சரி என்கிறார்.

இப்போது கதை வேண்டும். பலரிடம் கதை கேட்டும் திருப்தியில்லை. இந்த நேரம் ஜாவர் சீத்தாராமன் ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் பட்டுவும் கிட்டுவும் என்ற கதையை சொல்கிறார். கதையை கேட்டவர் அதனை படமாக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். அந்த கதை சரவணனுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்துப்போக, அதையே படமாக்குவதாக மெய்யப்ப செட்டியாரிடம் கூறுகிறார்கள். அவரும் ஒத்துக் கொள்கிறார்.
ஏவிஎம் நிறுவனம் தங்களுக்கென்றே படம் செய்ய கொஞ்சம் பேரை வைத்திருந்தது. ஆனால், வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த அமரதீபம், ஸ்ரீதரின் கதையில் உருவான உத்தம புத்திரன் ஆகிய படங்களை எடுத்த டி.பிரகாஷ் ராவை இயக்குநராக போட வேண்டும் என்று சரவணனும் மற்றவர்களும் விரும்பினர். அதற்கு முதலில் மெய்யப்ப செட்டியார் உடன்படவில்லை. அவர்கள் கம்பெனியில் தொடர்ச்சியாக படம் இயக்குகிறவர்களுக்கு பதினைந்தாயிரம் சம்பளம். பிரகாஷ் ராவ் முப்பதாயிரம் கேட்கிறவர்.கடைசியில் மகன்களின் விருப்பத்துக்கு அவர் சம்மதிக்க, பிரகாஷ் ராவ் இயக்கத்தில் பட்டுவும் கிட்டுவும் களத்தூர் கண்ணம்மா என்ற பெயரில் ஜெமினி, சாவித்ரி நடிப்பில் தொடங்கியது.
படத்தில் வரும் செல்வம் கதாபாத்திரத்தில் நடிக்க டெய்சி இரானியை பத்தாயிரம் ரூபாய் முன்பணம் தந்து ஒப்பந்தம் செய்திருந்தனர். டெய்சி இரானி ஐம்பதுகளில் குழந்தை நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தவர். விஜயா பிலிம்ஸ் தயாரித்த யார் பையன் படத்தில் சிறுமி டெய்சி இரானி சிறுவன் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்திருந்தனர்.இந்த நேரத்தில் ஏவிஎம் நிறுவனத்தாரின் குடும்ப மருத்துவர் சாரா ராமச்சந்திரனுடன் ஆறு வயது கமலஹாசன் படத்தின் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் வருகிறார். ராஜேஸ்வரி அம்மா அவரை மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்துகிறார். துறுதுறுவென இருக்கும் கமலஹாசனை அவருக்குப் பிடித்துப் போகிறது. யார் பையன் படத்தில் டெய்சி இரானி நடித்தது போல் நடிக்கச் சொல்லி கேட்க, அதே போல் கமலஹாசனும் நடித்துள்ளார். இரானியைவிட கமலின் நடிப்பு செட்டியாருக்குப் பிடித்துப்போக, இந்தப் பையனையே நம் படத்தில் நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறார்.இரானிக்கு முன்பணம் கொடுத்ததால் மற்றவர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால், செட்டியாரோ புதுப்பையன், நல்லா நடிக்கிறான். இந்தப் படத்துக்கு இரானியைவிட இவன்தான் சரியாக இருப்பான் என்று பிடிவாதமாக கமலை நடிக்க வைத்தார்.

களத்தூர் கண்ணம்மாவில் இடம் பெறும், கண்களின் வார்த்தைகள் புரியாதோ பாடலை படமாக்கும் போது மாம்பழ சீசன் முடிந்திருந்தது. இதனால் மாமரத்தில் செயற்கையாக செய்த மாம்பழங்களை தொங்கவிட்டிருந்தனர். சிறுவன் கமல் ஆசையோடு அதனை பறித்த பிறகே அது டூப் மாங்காய் என்று தெரிந்திருக்கிறது. ஆக, சினிமாவில் எல்லாமே டூப் என்று அவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கண்ணம்மா அவருக்கு உப்புமா ஊட்டுகிற காட்சியில் சாப்பிடுவது போல் பாவனை செய்துவிட்டு, காட்சி முடிந்ததும் வாயில் ஒதுக்கி வைத்திருந்த உப்புமாவை வெளியே துப்பியிருக்கிறார். கேட்டதற்கு உப்புமாவும் டூப்தானே என்று கேட்டிருக்கிறார்.களத்தூர் கண்ணம்மா என்றதும் பால்வடியும் முகத்துடன் கமல், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடும் காட்சியே நினைவுவரும். சுமார் 3 நிமிடங்கள் வரும் பாடலில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே இயக்குநர் படமாக்கியிருந்தார்.கமலின் நடிப்பைப் பார்த்த மெய்யப்ப செட்டியார் முழுப்பாடலையும் எடுக்கச் சொல்ல இயக்குநருக்கும் செட்டியாருக்கும் பிரச்சனையானது. தனது வேலையில் செட்டியார் தலையிடுகிறார் என படம் எட்டாயிரம் அடிகள் எடுக்கப்பட்ட நிலையில் பிரகாஷ் ராவ் கோபித்துக் கொண்டு படத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு பீம்சிங் படத்தை முடித்துக் கொடுத்தார். படத்தின் டைட்டிலில் பிரகாஷ் ராவின் பெயரைப்போட பீம்சிங் சம்மதித்த போதும் பிரகாஷ் ராவ் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
களத்தூர் கண்ணம்மா வெளியாகி 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.படத்தில் கமலின் நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக புகழ்ந்தன. அவர் எதிர்காலத்தில் பெரியாளாக வருவார் என்று மெய்யப்ப செட்டியார் அப்போதே கணித்திருந்தார். அதனால், படத்தின் டைட்டிலில் மாஸ்டர் கமலஹாசன் என்று வெறுமனே போடாமல், தென்னகத்து திரைவானிற்கு ஏவிஎம் அளிக்கும் புதிய குழந்தை நட்சத்திரம் என ஹைலைட் செய்து கமலஹாசன் பெயரை குறிப்பிட்டிருந்தனர்.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் மவூரி அம்மாயி என்ற பெயரில் 'டப்' செய்து வெளியிட்டனர். பிறகு 1969 இல் மூக நோமு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். 1962 இல் ஏவிஎம் பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மாவை இந்தியில் ரீமேக் செய்தனர். பிறகு சிங்களத்திலும் அப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், எதிலும் கமலைப் போல் சிறப்பான நடிப்பை மற்ற குழந்தை நட்சத்திரங்களால் தர முடியவில்லை.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி