• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prabhu Deva: இயக்குநராக பிரபுதேவா கடந்து வந்த பாதை!

Prabhu Deva: இயக்குநராக பிரபுதேவா கடந்து வந்த பாதை!

பிரபுதேவா

பிரபுதேவா

பிரபுதேவா மொத்தம் பதினைந்து படங்கள் இயக்கியுள்ளார். இதில் ரா ராஜ்குமார் படத்தின் கதை மட்டும் அவர் எழுதியது.

  • Share this:
1986-ல் மௌனராகம் படத்தில் முகம் காட்டிய பிரபுதேவா இன்று முன்னணி இயக்குனர். அன்று புல்லாங்குழல் வாசிக்கும் சிறுவனாக பனிவிழும் இரவு பாடலில் அறிமுகமான அவர், நடன இயக்குநர், நடிகர் என படிப்படியாக முன்னேறி இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறார். இயக்குனராக அவரது பயணம் மூன்று மொழிகளை உள்ளடக்கியது.

2000 வரை நடிகர் பிரபுதேவா நன்றாகவே போய்க் கொண்டிருந்தார். அவ்வப்போது சில வெற்றிகள் கிடைத்தன. 2001-க்குப் பிறகு மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. 2002, 2003 ஆண்டுகளில் எந்த வெற்றியும் இல்லை. அப்போதுதான் இயக்கத்தின் பக்கம் கவனத்தை திருப்பினார். அசத்தலான நடன இயக்குனர், திறமையான நடிகர் அதற்காக இயக்குனர் வாய்ப்பை யாரும் தர மாட்டார்களே, காத்திருந்தார். கடைசியில் ஒக்கடு படத்தை தயாரித்த எம்.எஸ்.ராஜு வாய்ப்பளித்தார். அப்படி பிரபுதேவாவின் முதல் படம் Nuvvostanante Nenoddantana வெளியானது. சித்தார்த், த்ரிஷா நடிப்பில் படம் ஹிட். தமிழில் இதை ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

முதல்படமே சூப்பர் ஹிட்டாக, எம்.ராஜுவே பிரபுதேவாவின் இரண்டாவது படத்தையும் தயாரித்தார். எம்.ராஜுவே கதையும் எழுதினார். பௌர்ணமி என்ற பெயரில் பிரபாஸ் நடித்த அப்படம் சுமாராகவே போனது. அந்த நேரத்தில் தெலுங்கு போக்கிரியை தமிழில் இயக்கும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கு கிடைத்தது. இங்கு போக்கிரி குறித்து சொல்ல வேண்டும். புரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் 2006-ல் போக்கிரி வெளியானது. படம் பம்பர் ஹிட். அதுவரை தெலுங்கு சினிமா உருவாக்கி வைத்திருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் தகர்த்தது. நம்பர் ஒன் இடத்தில் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக போக்கிரி அமர்ந்திருந்தது.

போக்கிரியை அதே பெயரில் தமிழில் பிரபுதேவா இயக்கினார். படம் ஹிட்டாக, அதேவருடம் சிரஞ்சீவி நடிப்பில் சங்கர்தாதா சிந்தாபாத் படத்தை இயக்கினார். அதுவும் வெற்றி. 2009-ல் போக்கிரி கூட்டணி மீண்டும் இணைந்தது. விஜய்யை வைத்து வில்லு படத்தை இயக்கினார். பாடல்களும், காமெடியும் ஹிட்டான அளவுக்கு படம் வரவேற்பை பெறவில்லை. இதற்குள் இயக்குனர் பிரபுதேவா இந்திய அளவில் பிரபலமடைந்திருந்தார். தொடர் சறுக்கலில் இருந்த சல்மான் கானுக்கு ஒரு வெற்றி தேவைப்பட, பிரபுதேவாவை அழைத்து வாய்ப்பு தந்தார். அதுதான் வான்டட். படம் அதிரி புதிரி ஹிட். நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பிரபுதேவாவை மொய்க்கத் தொடங்கினர். சம்பளம் எகிறியது. அடுத்து தமிழில் எங்கேயும் காதல், வெடி படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இரண்டுமே சுமார். இயக்குனர் பிரபுதேவா அவ்வளவுதான் என்று பலரும் விமர்சித்த போது, அடுத்தப் படத்தை இந்தியில் இயக்கினார். அக்ஷய் குமார் ஹீரோ. படம், ரவுடி ரத்தோர்.

2012 காலகட்டத்தில் அக்ஷய் குமாரின் படங்கள் எழுபது, எண்பது கோடி வசூலித்தன. அவரது மார்க்கெட்டுக்கு அது லாபம். அந்த நேரம் ரவுடி ரத்தோர் வெளியாகி, 100 கோடியை தாண்டியது. அக்ஷய் குமாரின் முதல் 100 கோடி திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இந்தி பட உலகின் மோஸ்ட் வான்டட் இயக்குனரானார் பிரபுதேவா. முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருந்தவேளை அறிமுக நடிகர் க்ரிஷ் குமாரை வைத்து ராமையா வஸ்தாவையா படத்தை இயக்கினார். ஏன் இந்த முடிவு? க்ரிஷ் குமார் பிரபல டிப்ஸ் நிறுவனத்தின் வாரிசு. மகனை நடிகனாக்க தந்தை லம்பாக பணத்தை இரைத்தார். படமும் ஓடியது.
2013-ல் பிரபுதேவாவின் மார்க்கெட் உச்சத்திலிருந்தது. 25 கோடிகள் அப்போது அவருக்கு சம்பளம் தரப்பட்டதாக தகவல்கள் உண்டு. 2013-ல் ஷாகித் கபூர் நடிப்பில் ராம்போ ராஜ்குமார் படத்தை எடுத்தார். ராம்போ எங்க டைட்டில் என்று ஹாலிவுட் நிறுவனம் பிரச்சனை செய்ய, படத்தின் பெயரை ரா ராஜ்குமார் என மாற்றினர். படம் ப்ளாப்.

அடுத்து 2014-ல் அஜய் தேவ்கான் நடிப்பில் ஆக்ஷன் ஜாக்சன். தெலுங்கில் ஹீரோ வில்லனை ஓங்கி அடித்ததும் வில்லன் தரையில் விழுந்து பந்து போல் மேலே எகிறி வருவான் அல்லவா... அந்த ஸ்டைல் சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் ஜாக்சனில் வைத்திருந்தார். படம் ப்ளாப். அதையடுத்து அக்ஷய் நடிப்பில் சிங் இஸ் பிளிங். இரண்டு படங்கள் அடுத்தடுத்த தோல்வி என்பதால், சிங் இஸ் பிளிங்கின் படப்பிடிப்பை நிறுத்தினார் அக்ஷய். கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தாமதமாக படம் வெளியானது. படம் ப்ளாப். விண்ணுக்கு எகிறிய இயக்குனர் பிரபுதேவா விரைவிலேயே மண்தொட்டார்.

2015-ல் சிங் இஸ் பிளிங் தோல்விக்குப் பிறகு நான்கு வருடங்கள் பிரபுதேவா படம் இயக்கவில்லை. 2019-ல் சல்மான் கான் அழைத்து தபாங் 3 வாய்ப்பு தந்தார். அதுவும் சுமாராகவே போனது. ஆனாலும், பிரபுதேவா மீது சல்மான் நம்பிக்கை இழக்கவில்லை. இரு வருடங்கள் கழித்து ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய் படத்தை தந்தார். ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் படத்தை குறை சொல்கின்றனர். பதினாறு வருடங்களில் இயக்குனராக உச்சியை தொட்டு அதேவேகத்தில் தரைக்கு திரும்பியுள்ளார் பிரபுதேவா. இந்த நெடிய ரோலர் கோஸ்டர் பயணத்தில் பல சுவாரஸியங்கள் உண்டு.

பிரபுதேவா மொத்தம் பதினைந்து படங்கள் இயக்கியுள்ளார். இதில் ரா ராஜ்குமார் படத்தின் கதை மட்டும் அவர் எழுதியது. பௌர்ணமி தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜுவின் கதை. தபாங் 3 கதையை எழுதியவர் சல்மான் கான். ஆக்ஷன் ஜாக்சன் கதையை எழுதியிவர் முகில். பிற 11 படங்களும் வேறு படங்களின் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்மற்ற தழுவல்கள்.

முதல் படம் Nuvvostanante Nenoddantana சல்மான் கானின் மேனே பியார் கியா படத்தின் மேலோட்டமான தழுவல். போக்கிரி, வான்டட் தெலுங்கு போக்கிரியின் ரீமேக். சங்கர்தாதா ஜிந்தாபாத் இந்தி லகே ரகோ முன்னாபாயின் தழுவல். வில்லு இந்தி சோல்ட்ஜர் படத்தின் ரீமேக். எங்கேயும் காதல் பில்லி வைடரின் லவ் இன் தி ஆஃப்டர்நூனை இன்ஸ்பிரேஷனாக வைத்து எழுதியது. வெடி தெலுங்கில் கோபிசந்த் நடித்த சௌரியம் படத்தின் தழுவல். ரவுடி ரத்தோர் தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய விக்ரமார்க்குடுவின் தழுவல். சிங் இஸ் பிளிங்க் கொரிய படமான மை வொய்ப் இஸ் ஏ கேங்ஸ்டர் 3 படத்தின் மேலோட்டமான தழுவல். சமீபத்தில் வெளியான ராதே படம் கொரிய படமான அவுட் லாவ்ஸ் படத்தின் தழுவல்.

இந்த புள்ளி விவரங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கிய அம்சம், பிரபுதேவா எழுதிய கதையும், அவருக்காக பிறர் எழுதிய கதையும் ஓடவில்லை. பிற மொழிகளிலிருந்து அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட கதைகளும் ஓடவில்லை (முதல் படம் மட்டும் விதிவிலக்கு). முறையாக அனுமதி பெற்று ரீமேக் செய்த போக்கிரி, வான்டட், ரவுடி ரத்தோர் மட்டுமே ஸ்கோர் செய்திருக்கின்றன.

இதனால் அறியப்படும் நீதி என்னவெனில், வெற்றி பெற்ற, நல்ல தெலுங்கு கமர்ஷியல் படங்களை முறைப்படி அனுமதி வாங்கி தமிழ், இந்தியில் ரீமேக் செய்தால் இழந்தை இடத்தை இயக்குனர் பிரபுதேவா மீண்டும் பிடிக்கலாம்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: