இன்று முன்னணி நடிகர்களுக்கு தான் சூப்பர் ஸ்டார், கலைஞானி, புரட்சி தளபதி, தளபதி, தல என்றெல்லாம் பட்டப்பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. முன்பு நகைச்சுவை நடிகர்களுக்கும், குணச்சித்திர நடிகர்களுக்கும் தாராளமாக பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. அந்த விஷயத்தில் யாரும் கஞ்சத்தனம் பார்த்ததேயில்லை. பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டியே இந்தப் பட்டப் பெயர்கள் வழங்கப்படும். அல்லது நடிக்கும் படங்களை வைத்து.
சிவாஜி கணேசனின் இயற்பெயர் கணேசன். சிவாஜி என்று பட்டப் பெயர் கணேசனுடன் ஒட்டி கொண்டதற்கு காரணம் பெரியார். சுயமரியாதை மாநாட்டில் சத்ரபதி சிவாஜி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். சிவாஜியாக நடித்தது கணேசன். அதாவது சிவாஜி கணேசன். நாடகத்திற்கு தலைமை தாங்கிய பெரியார், நாடகத்தில் வீர சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை வியந்து பாராட்டி, இனி நீ கணேசன் அல்ல சிவாஜி கணேசன் என்று சொல்ல சிவாஜி அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது. தமிழ்நாட்டில் கணேசன் என்று சொன்னால் பக்கத்துவீட்டு, எதிர்த்த வீட்டு கணேசன்கள்தான் நினைவுக்கு வருவார்கள். சிவாஜி என்றால் ஒரே ஒருவர் தான் நினைவுக்கு வருவார். அவர் நடிகர் சிவாஜி கணேசன். அந்தளவுக்கு பட்டப்பெயர் பெயரைவிட முக்கியமானது.
தேங்காய் சீனிவாசனும் சீனிவாசன் என்ற பெயரில் தான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தேங்காய் சீனிவாசனின் தந்தை ராஜவேலு முதலியார் நாடக நடிகர். தந்தை வழியில் தனயனுக்கும் நடிப்பு ஆசை ஊற்றெடுத்தது. ஆரம்ப கல்விக்கு பிறகு சென்னை ஐசிஎப் பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், அங்கிருந்த ட்ராமா ட்ரூப்பில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். வெளியே அவர் நடித்த முதல் நாடகம் அவரது தந்தை நடத்திய கலாட்டா கல்யாணம் என்ற நாடகமாகும். அதன்பிறகு கே.கண்ணனின் நாடக குழுவில் இணைந்து தொடர்ச்சியாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் ஒரு நாடகத்தின் பெயர் கல்மனம். அந்த நாடகத்தை பார்க்க வந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நகைச்சுவை நடிப்பை அள்ளி வீசிய சீனிவாசனின் நடிப்பில் மயங்கி, இனி நீ சீனிவாசன் அல்ல தேங்காய் சீனிவாசன் என்று சொல்ல அந்த பட்டப்பெயர் அவருடைய பெயரிலேயே நிலைத்தது. தங்கவேலுவின் குரு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இதற்கு முன் ராமசாமி என்ற நடிகரை புளிமூட்டை ராமசாமியாக்கினார். குருவை தொடர்ந்து சிஷ்யன் சீனிவாசனை தேங்காய் சீனிவாசனாக்கினார்.
நாடகத்தின் மூலம் தேங்காய் சீனிவாசனுக்கு பெயர் மட்டும் கிடைக்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவரது நாடகத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பெர்னாண்ட்ஸ் தனது ஒரு விரல் என்ற திரில்லர் திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பளித்தார். 1965-ல் வெளியான அந்தத் திரைப்படம் தான் தேங்காய் சீனிவாசனின் முதல் திரைப்படமாகும். அதில் குற்றங்களை துப்பறிகிறவராக தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தார். ஒரு விரல் என்றதும் சிலருக்கு சந்தேகம் தட்டியிருக்கும். ஆம், கிருஷ்ணராவ் தான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்தது. இது அவரது முதல் படம் என்பதால் கிருஷ்ணராவ் என்ற அவரது பெயருடன் ஒரு விரல் என்ற ப(ட்)டப்பெயர் ஒட்டி, ஒருவிரல் கிருஷ்ணராவாக மாறினார். வடிவேலுகூட இதனை ஒரு படத்தில் குறிப்பிட்டு பேசியிருப்பார்.
முதல் படத்திலிருந்தே தேங்காய் சீனிவாசனுக்கு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் மிகவும் பெயர் வாங்கித் தந்த திரைப்படம் காசேதான் கடவுளடா. ஏவிஎம் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் போலி சாமியாராக நடித்திருந்தார். 1972இல் இந்தத் திரைப்படம் வெளியானது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பலரும் சிறப்பாக நடித்திருந்தாலும் தேங்காய் சீனிவாசனின் போலி சாமியார் வேடம் தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இந்தப் படத்தை அதே பெயரில் மிர்ச்சி சிவா நடிப்பில் ரீமேக் செய்கிறார்கள்.
தேங்காய் சீனிவாசனுக்கு பெயர் வாங்கித் தந்த இன்னொரு திரைப்படம் கே.பாலசந்தரின் தில்லு முல்லு. ரஜினி நடித்த படம். கண்டிப்பான முதலாளியாக தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார். அவரது கண்டிப்பு நமக்கு சிரிப்பை வரவழைக்கும். அந்தளவுக்கு சிறப்பான நடிகர். 2013-ம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை இந்திய சினிமாவின் மிகச் சிறந்த 25 நடிப்புகள் என்ற பட்டியலில் தேங்காய் சீனிவாசனின் தில்லு முல்லு படத்தின் நடிப்பையும் சேர்த்திருந்தது.
எஸ்பி முத்துராமனின் மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் அவர் வில்லனாக நடித்தார். அதன் பிறகு நிறைய படங்களில் வில்லனாகத் தோன்றினார். அவர் எதிராளியை மிரட்டும் போதும் நமக்கு சிரிப்பு பீறிடும். அந்தளவுக்கு ஒரு வெள்ளந்தித்தன்மை அவரது வில்லன் நடிப்பிலும் இருப்பதைப் பார்க்கலாம்.
Also read... ரஜினி உள்பட யாருமே உதவி செய்யவில்லை - தயாரிப்பாளர் ஜிவி தற்கொலை குறித்து பேசிய கே.டி. குஞ்சுமோன்
அவர் நாயகனாக நடித்த முதல் படம் கலியுக கண்ணன். இது அவர் நடித்து வந்த ஸ்ரீ கிருஷ்ண விஜயம் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். முதலில் சிவாஜிகணேசன் தான் நடிப்பதாக இருந்தது. என்னை விட தேங்காய் சீனிவாசன் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜி விலகிக் கொள்ள, தேங்காய் சீனிவாசன் நாயகனாக நடித்தார். அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. நன்றிக்கரங்கள், ஸ்ரீ ராமஜெயம், போர்ட்டர் பொன்னுசாமி, அடுக்கு மல்லி ஆகிய படங்களிலும் இவர் நாயகனாக நடித்துள்ளார். எல்லா நடிகர்களையும் போலவே நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போது அந்தத் தவறை தேங்காய் சீனிவாசனும் செய்தார். தவறு என்றால் படம் தயாரிப்பது. 1987 இல் கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை சிவாஜியை வைத்து தயாரித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை. தோல்வி கண்டது. பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இந்நிலையில் 1987 நவம்பர் 9 மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் தனது 50 வது வயதில் மரணமடைந்தார்.
தேங்காய் சீனிவாசன் என்ற நடிகரை இன்றைய தலைமுறைக்கு குறைவாகவே தெரியும். அவர் சிறந்த நடிகர், நகைச்சுவையில் அவரது பாணி தனித்துவமானது என்பதை அவரது காலத்திலேயே பலரும் நம்பவில்லை. அவர்களில் பலரும் தில்லுமுல்லு படத்தின் ரீமேக்கில் தேங்காய் சீனிவாசன் நடித்த வேடத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பைப் பார்த்த பிறகே தேங்காய் சீனிவாசனின் தனித்துவத்தையும், பெருமையையும் உணர்ந்து கொண்டனர். காசேதான் கடவுளடா படத்தையும் இப்போது ரீமேக் செய்கிறார்கள். இந்த படம் வரும் போது, தேங்காய் சீனிவாசன் நடித்த போலி சாமியார் வேடத்தில் யார் நடித்திருக்கிறார்களோ, அவர்களது நடிப்பை பார்க்கும் போது, பழைய தலைமுறை மீண்டும் ஒருமுறை தேங்காய் சீனிவாசனை நன்றியுடன் நினைவு கொள்ளும். அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று.