Home /News /entertainment /

1984 போபால் விஷவாயு மரணங்களைச் சொல்லும் தி ரயில்வே மென்

1984 போபால் விஷவாயு மரணங்களைச் சொல்லும் தி ரயில்வே மென்

தி ரெயில்வே மேன்

தி ரெயில்வே மேன்

போபால் பேரழிவில் தங்கள் உயிரைத் தந்து பலரது உயிர்களை காப்பாற்றிய முகம் தெரியாத அந்த ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வெப் தொடரை எடுப்பதாக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் வெப் தொடர்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. தங்களின் முதல் வெப் தொடராக அவர்கள் தி ரயில்வே மென் தொடரை தயாரிக்கிறார்கள்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இயங்கி வந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 1984 டிசம்பர் 2-ஆம் தேதி விஷ வாயு (methyl isocyanate) கசிந்தது. இந்த விஷ வாயு சுவாசித்தவர்களில் 3200-க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக கொல்லப்பட்டனர். ஒருவார காலத்தில் மரண எண்ணிக்கை 8000 ஆக உயர்ந்தது.

பிறகு வந்த வாரங்களில் மேலும் 8000 பேர் மரணித்திருக்கலாம் என்கிறார்கள். துல்லியமான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வாயுவினால் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவாக இது கருதப்படுகிறது.

இந்த பேரழிவின் போது ரயில் நிலையத்தில் வேலை செய்த ஊழியர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பலபேரை காப்பாற்றினர். தி ரயில்வே மென் வெப் தொடரில் இந்த முகம் தெரியாத ஹீரோக்களின் செயலை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் மாதவன், கேகே மேனன் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கானும் இதில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஷிவ் ரவையல் இந்த வெப் தொடரை இயக்குகிறார்.

போபால் பேரழிவில் தங்கள் உயிரைத் தந்து பலரது உயிர்களை காப்பாற்றிய முகம் தெரியாத அந்த ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வெப் தொடரை எடுப்பதாக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் நடந்து சரியாக 37 வருடங்கள் ஆன நிலையில் நேற்று டிசம்பர் 2 ஆம் தேதி இந்த வெப் தொடரை முறைப்படி அறிவித்தனர். ஒருநாள் முன்னதாக டிசம்பர் 1 படப்பிடிப்பை தொடங்கினர்.

போபால் பேரழிவுக்கு இரண்டு வருடங்கள் கழித்து 1986-ல் அப்போதைய சோவித் யூனியனின் சொர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு பல உயிர்களை காவு வாங்கியது. அதன் பாதிப்பு இப்போதும் தொடர்வதாக கூறப்படுகிறது. அதுபற்றிய சொர்னோபில் மினி சீரிஸ் இதுவரை எடுக்கப்பட்ட வெப் தொடர்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் தி ரயில்வே மென்னும் இடம் பிடிக்கும் என்று நம்புவோம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி