கோலிவுட் சினிமாவில் உள்ள சிறு நடிகர்கள் தொடங்கி, ரஜினி - கமல் என முன்னணி நடிகர்களின் படங்கள் வரை நடித்தவர் மயில்சாமி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார். மயில்சாமி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
குறிப்பாக கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒரு நபராக நடித்திருந்தார். இதன் பிறகு கமல் நடிப்பில் வெளியான வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களில் சிறுசிறு படங்களில் நடித்தார். அதே போல் ரஜினியுடன் பணக்காரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் மயில்சாமியின் சினிமா கனவிற்கு 1990க்கு பிறகு வெளியான திரைப்படங்கள் அடையாளத்தை கொடுத்தன. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, 90களுக்கு பின் வெளியான படங்கள் அடையாளத்தை கொடுத்தன. சினிமாவில் நடித்து வந்தாலும் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி மயில்சாமிக்கு என தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்களும் நல்ல பெயரை பெற்று தந்தன. நகைச்சுவை மட்டும் அல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். முழு நீள நகைச்சுவை மட்டுமல்லாமல் ஒரு காட்சியில் வந்தாலும் அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் ஒரு ஆளுமையாக மயில்சாமி மாறினார்.
முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல், அறிமுக நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்கள் என பலரின் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி துணிச்சலான அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வந்தார். சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவ்வாறு அவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
நடிகர் மயில்சாமிக்கு கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதன் பிறகு ஆரோக்கியத்துடன் இருந்த மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று திரும்பும் வழியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த மயில்சாமி மரணமடைந்தது குடும்பத்தாரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayilsamy, Tamil cinema news