கவனிக்கப்படாதது. ஆனால், முக்கியமானது. எழுத்தாளர் பொன்னீலனின் உறவுகள் கதையைத் தழுவி இந்தப் படத்தை மகேந்திரன் எடுத்தார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படத்தைத் தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய படம் பூட்டாத பூட்டுக்கள். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், இளையராஜாவின் இசையில் பூட்டாத பூட்டுக்கள் படத்தை தொடங்கினார். இதில் ரஜினி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. அவருடன் அப்போதைய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஜெயனும் நடிப்பதாக சொல்லப்பட்டது. விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.
ஆனால், பூட்டாத பூட்டுக்கள் படத்தில் நடிக்க ரஜினி தயக்கம் காட்டினார். படத்தில் வரும் பிரதான வேடங்கள் இரண்டும் தனக்குப் பொருந்தாது என்று கருதினார். அதனால், அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு ஜெயன் மற்றும் சுந்தர்ராஜுவை வைத்து அந்தப் படத்தை மகேந்திரன் இயக்கினார். ரஜினி தயங்கும் அளவுக்கு அப்படி என்ன கதை?
உப்பிலி ஊரின் கட்டுமஸ்தான் இளைஞன். அவளது அழகான மனைவி கன்னியம்மா. திருமணமாகி பல வருடங்களாகியும் இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. குழந்தையில்லாத மனைவியின் துக்கம் உப்பிலியை வாட்டுகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லாததற்கு காரணம் உப்பிலி. தனது குறையை சரி செய்ய அவன் பல்வேறு வைத்தியங்கள் செய்கிறான். ஆனால், எதுவும் பலனளிப்பதில்லை.
கன்னியம்மா சாமியாரிடம் பரிகாரம் கேட்டு, பூஜை, மண் சோறு என்று பக்தி வழியில் விடை தேடுவாள். இந்த நேரத்தில் ஊருக்கு புதிதாக வரும் தியாகுவுக்கும், கன்னியம்மாவுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. ஊருக்கே இந்த சேதி தெரிய, தியாகுவின் ஊருக்கு கன்னியம்மா கிளம்பிச் செல்கிறாள். திருமணமான அவளை தியாகு ஏற்க மறுக்க, பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகிறாள்.
மனைவியின் நடத்தையால் முதலில் கோபம் கொண்டாலும், உப்பிலி ஒருகட்டத்தில் அவள் மீதான அன்பால் அவளைத் தேடத் தொடங்குகிறான். கடைசியில் அவள் இருக்குமிடம் தெரிகிறது. கன்னியம்மா திருப்பி அழைத்து வரப்படுகிறாள். ஆனால், என்னை தள்ளி வை, நான் போகிறேன் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள். செய்வதறியாத உப்பிலி, தியாவிடம் உதவிக்கு வருகிறான். உப்பிலி கடற்கரையில் தியாகுவிடம் பேசும் காட்சியையும், தியாகு கன்னியம்மாவிடம் பேசும் இறுதிக் காட்சியையும் கவித்துவமாக படமாக்கியிருப்பார் மகேந்திரன். படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக அஞ்சுவும், காஜா ஷெரீஃபும் நடித்திருந்தனர்.
படத்தில் உப்பிலிதான் நாயகன். அவனோ குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவன். ஊராரின் கிண்டலுக்கு ஆளாகிறவன். இன்னொரு பிரதான கதாபாத்திரம், அடுத்தவன் மனைவியை பெண்டாளும் தியாகு. இந்த இரண்டுமே தனது இமேஜுக்கு சரிவராது என்று ரஜினி தயங்கியதில் நியாயம் இருக்கிறது. அதேநேரம், மலையாளத்தில் அன்றைக்கு ஆக்ஷன் ஹீரோவாக அதகளம் செய்து கொண்டிருந்த ஜெயன் உப்பிலி கதாபாத்திரத்தில் நடித்தது ஆச்சரியம். அவரது ஆக்ஷன் இமேஜுக்கு தீனிபோட படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறிய சண்டைக் காட்சியும் மகேந்திரன் வைத்திருந்தார்.
கன்னியம்மாவாக நடித்த சாருலதாவை அசோக் குமாரின் கேமரா படம் பிடித்திருந்தவிதம் பேரழகு. அதோடு இளையராஜாவின் இசையும் சேர்ந்து நல்ல அனுபவத்தை தந்தன. ரஜினி படத்தில் நடிக்க தயங்கியதன் நியாயம் மகேந்திரனுக்கு புரிந்ததால் அந்த வருடமே அவரை வைத்து ஜானி படத்தை எடுத்தார். பூட்டாத பூட்டுக்கள் ஓடாத அதேநேரம் ஜானி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Also read... மதுரையின் வெள்ளிவிழா நாயகன் என்று சிவாஜியை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
பூட்டா பூட்டுக்களின் ஆரம்ப விளம்பரத்தில் ரஜினி, ஜெயன், சாருலதா மூவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பிறகு எடுத்த திரைப்படத்தில் உப்பிலி கதாபாத்திரத்தில் ஜெயன் நடித்தார். அதனால், ஆரம்பத்தில் மகேந்திரன் ரஜினிக்கு ஒதுக்கியது உப்பிலி கதாபாத்திரமா இல்லை தியாகு கதாபாத்திரமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. எதுவாக இருந்தாலும் ரஜினியின் அன்றைய இமேஜுக்கு இந்த இரண்டில் எந்த கதாபாத்திரத்தை செய்திருந்தாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். ரஜினி அதனை உணர்ந்து கொண்டு விலகியதால் அவருக்கு ஜானி என்ற ஜாக்பாட் கிடைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.