எம்ஜிஆர் நடிப்பில் 1953 இல் பணக்காரி வெளியானது. ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. அன்னா கரீனினா 1877 இல் எழுதப்பட்ட நாவல். இன்று உலக கிளாசிக் நாவல்களை வரிசைப்படுத்தினால் அதில் இந்த நாவல் டாப் 5 க்குள் வரும். எக்காலத்திலும் வரும் என்பதுதான் இதன் சிறப்பு. இதனை லவ் என்ற பெயரில் 1928 இல் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுத்தனர். பிறகு 1935 இல் அன்னா கரீனினா என்ற பெயரிலேயே மறுபடியும் படமாக்கினர். அதனைத் தழுவி பல மொழிகளில் படம் செய்தனர். தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பணக்காரி என்ற பெயரில் படமாக்கினர்.
அந்தக் காலத்தின் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி பணக்காரியில் பிரதான வேடத்தில் நடித்தார். கதைப்படி அவர்தான் பணக்காரி. அவரது கணவராக நாகைய்யா நடித்தார். இவர் தனது மனைவியை ராணுவத்தில் பணிபுரியும் தனது நண்பர் எம்ஜிஆருக்கு அறிமுகம் செய்து வைப்பார். டி.ஆர்.ராஜகுமாரி - எம்ஜிஆர் இடையே ஆழமான நட்பு உருவாகும். இதனை நாகைய்யா சந்தேகிப்பார். இதில் எம்ஜிஆருக்கு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
படத்தின் பின்னடைவுக்கு அப்போதைய நமது மக்களின் சென்டிமெண்டும் ஒரு காரணம். குறிப்பாக, நாகைய்யா எம்ஜிஆரை தனது மனைவிக்கு அறிமுகம் செய்து வைக்கையில் டி.ஆர்.ராஜகுமாரியும், எம்ஜிஆரும் கை குலுக்கிக் கொள்வார்கள். கணவன் முன்னிலையில் இன்னொரு ஆடவனுடன் மனைவி கை குலுக்குவதா என்று அப்போது சர்ச்சை எழுந்தது. அதேபோல், சி.சி.வி.பந்துலு, மகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வரும் டீச்சரை உஷார் செய்வார். ரிக்கார்டை போட்டு, மகளை ரிகர்சல் பார்க்கச் சொல்லிவிட்டு இருவரும் சரசத்தில் இறங்குவார்கள். அந்தபழுதடைந்த ரிக்கார்ட் திடீரென ஒரே இடத்தில் நின்று மறுபடி மறுபடி ஒரே விஷயத்தை இசைக்க, பந்துலுவின் மனைவி ஓடி வருவார். பந்துலுவும், டீச்சரும் கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள். இதனை ரசினைக்குறைவான காட்சி என பத்திரிகைகள் கண்டித்தன.
பணக்காரி என்ற பெயருக்கு நேர் எதிர்மறையாக படம் நஷ்டத்தை தந்தது. பணக்காரியை தயாரித்த, விநியோகித்த, திரையிட்ட மூன்று தரப்பினரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்தப் படத்திற்கு முன்பு திக்குறிச்சி சுகுமாரன் நாயர், பி.எஸ்.சரோஜா நடிப்பில் பிச்சைக்காரி என்ற படம் வெளியாகியிருந்தது. வேம்பு இயக்கிய அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால், பிச்சைக்காரியால் பணக்காரரானோம், பணக்காரியால் பிச்சைக்காரர்களானோம் என திரையுலகுக்குள் பேசிக் கொண்டனர்.
1953, பிப்ரவரி 12 வெளியான பணக்காரி, தற்போது 70 வருடங்களை நிறைவு செய்து, 71 வது வருடத்தில் நுழைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, MGR