ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாஜி ரசிகர்கள் வியப்பு, வாத்தியார் ரசிகர்கள் கொதிப்பு - அன்றே தொடங்கிய வசூல் போட்டி

சிவாஜி ரசிகர்கள் வியப்பு, வாத்தியார் ரசிகர்கள் கொதிப்பு - அன்றே தொடங்கிய வசூல் போட்டி

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்

ஒரு படத்தின் வசூல் நிலவரங்கள் வெளியாகும் போது பிற நடிகர்களின் படங்களின் வசூல் நிலவரங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்களும், விமர்சகர்களும் மோதிக் கொள்வது வாடிக்கை.

  • News18
  • 4 minute read
  • Last Updated :

விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 60 கோடிகளையும், கேரளாவில் 20 கோடிகளையும், கர்நாடகாவில் 11 கோடிகளையும், ஆந்திரா, தெலுங்கானாவில் 10 கோடிகளையும், வடமாநிலங்களில் 2 கோடிகளையும் உலக அளவில் 200 கோடிகளையும் முதல் நான்கு தினங்களிலேயே படம் கடந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. படத்தை தயாரித்தவர்கள் சொன்னால் தவிர இந்த நம்பர்களை நம்புவதில் பலனில்லை. ஆனாலும், படம் பம்பர்ஹிட் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒரு படத்தின் வசூல் நிலவரங்கள் வெளியாகும் போது பிற நடிகர்களின் படங்களின் வசூல் நிலவரங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்களும், விமர்சகர்களும் மோதிக் கொள்வது வாடிக்கை. விக்ரம் படத்திற்கும் அப்படி நடந்து வருகிறது. கமலின் ஒரு படம்தான் வசூல் சாதனை செய்திருக்கிறது. ரஜினியின் எல்லா படங்களுமே வசூல் சாதனை படைத்தவை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இரண்டு பேரும் கொஞ்சம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இப்போ விஜய்தான் டாப், அவரது பிகில்தான் நம்பர் ஒன் வசூல் படம் என விஜய் ரசிகர்கள் வாதிடுகிறார்கள். அப்படியானால் வலிமை வசூலை என்ன சொல்வது? இந்த வருடத்தில் உலக அளவில் 200 கோடியை கடந்த படம் அஜித்தினுடையது. தயாரிப்பாளரே சொல்லிட்டார் என்று அஜித் ரசிகர்களும் இந்த விவாதத்தின் குறுக்கே ஓடுகிறார்கள்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த பிறகே இதுபோன்ற போட்டிகள் நடப்பதாக இளைய தலைமுறை ரசிகர்களும், விமர்சகர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த வசூல் போட்டி ஐம்பதுகளிலேயே இருந்துள்ளது. முக்கியமாக அறுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கிடையே கடும் வசூல் போட்டி நடந்துள்ளது. இவர்கள் படங்கள் வெளியாகும் போது, இந்தத் திரையரங்கில், இத்தனை நாள்களில், இத்தனை காட்சிகளில் இத்தனை ரூபாய் வசூலானது என்று பத்திரிகை விளம்பரத்திலேயே போடுவார்கள். மற்ற படங்களைவிட எங்க படம்தான் டாப் வசூல் என இதன் மூலம் நிரூபிக்கவும், தங்கள் படத்தின் மகத்துவத்தை பிரகடனப்படுத்தவும் செய்வார்கள். இந்தப் போட்டியில் எம்ஜிஆர், சிவாஜி இருவரது ரசிகர்களும், அவர்களை வைத்து படம் தயாரித்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

சிவாஜியின் ராஜா திரைப்படமும், எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் திரைப்படமும் வெளியான போது இதுபோன்ற வசூல் போட்டி நடந்தது. 'சிவாஜியின் ராஜாவுக்கு இமாலய வசூல்! ரிக்ஷாக்காரன் முறியடிப்பு!' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டனர். செய்தி முழுக்க நவரசம்தான். 'தமிழ்ப்பட உலகில் பரபரப்பு! பாலாஜிக்கு மகிழ்ச்சியால் இரத்தக் கொதிப்பு! சிவாஜி ரசிகர்கள் வியப்பு! வாத்தியார் ரசிகர்கள் திகைப்பு!' என்று ரைமிங்காக வாத்தியார் ரசிகர்களை ஓட்டியிருந்தனர். எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? சென்னை தேவி பாரடைசில் ராஜா திரைப்படம்  பத்து நாளில் ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் வசூல் செய்து ரிக்ஷாக்காரனின் வசூலை முறியடித்ததாம்/ அதற்குத்தான் இந்த குதூகலகம்.

ஒரு படம் எத்தனை நாள் ஓடியது என்பது மட்டும் அன்றைய கணக்கல்ல. எத்தனைக் காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது என்பதும் ஒரு கௌரவ கணக்காக கருதப்படும். எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும்கூட இந்த அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. இதனால், அரங்குகள் நிறையாத போது ரசிகர்களே டிக்கெட்டுகளை வாங்கி கிழித்துப் போட்டு, அரங்கு நிறைந்த காட்சிகளாக கணக்கு காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கும். தங்கள் தலைவரின் படம் ஒடும் தியேட்டர் வாசலில் ஹவுஸ்ஃபுல் போர்ட் எப்போதும் தொங்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் அன்று தயாராக இருந்தார்கள்.

நாம் எப்போதும் சொல்வது போல், தமிழ்ப் படங்களின் துல்லியமான வசூல் கணக்கை ஒருவராலும் சொல்ல இயலாது குத்து மதிப்பாக, இந்தப் படம்தான் வசூலில் முன்னிலை என்று சொல்லலாம். அதன்படி இங்கே ஒரு பட்டியல் இருக்கிறது. 1973 இல் வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், அதற்கு முன் தமிழ் சினிமாவில் இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தது. ஆறு வருடங்கள் உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது.

1979 இல் வெளியான சிவாஜியின் திரிசூலம் அந்த வசூல் சாதனை முறியடித்தது. அதனை சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். திரிசூலத்தின் வசூல் சாதனையை ஏவிஎம்மின் சகலகலாவல்லவன் 1982 இல் முறியடித்தது. கமலின் அதிகபட்ச வசூலாக மட்டுமின்றி தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூலாகவும் அது அமைந்தது. ஏழாண்டுகள் அந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை. கமலின் அபூர்வ சகோதரர்கள் படம்தான் அந்த வசூலை முறியடித்தது. அதன் பிறகு ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் வசூல் சாதனையை நிகழ்த்தின. எந்திரன், சிவாஜி, 2.0 படங்கள் அயல்நாடுகளில் தமிழ் சினிமாவின் சந்தையை விஸ்தரித்தன.

உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற பெருமையை பல வருடங்கள் கமலின் இந்தியன் திரைப்படம் தக்க வைத்திருந்தது. 1996 இல் வெளியான இந்தப் படம் உலக அளவில் சுமார் 60 கோடிகளை வசூலித்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இந்தியனின் இந்திப் பதிப்பு ஹிந்துஸ்தானி 16 கோடிகளை வசூலித்தது.

இந்த சாதனை 14 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. ரஜினியின் 2.0 சென்னையில் 25 கோடிகளை கடந்து வசூலித்ததே இன்றும் தொட முடியாத சாதனையாக உள்ளது. இதேபோல் தமிழகத்தில் அதிகம் வசூலித்த படம், இந்திய அளவில் வசூலித்த படம், உலக அளவில் வசூலித்த படம் என எந்தப் பிரிவை எடுத்தாலும் ரஜினி நடித்தப் படங்களே டாப் 10 இல் அதிகம் இடம்பிடிக்கும். இரண்டாவது இடத்தில் விஜய் இருக்கிறார். இதனை வைத்தும் இவர்கள்தான், இந்தப் படங்கள்தான் டாப் என்று சொல்லிவிட முடியாது. திருப்பூர்சுப்பிரமணியம் சொன்னது போல், தசாவதாரம் அன்றைய காலகட்டத்தில் கோவையில் 6 கோடிகள் சூலித்தது. அன்று டிக்கெட் கட்டணம் 50 ரூபாய். இன்று 150 ரூபாய். அதாவது தசாவதாரம் இன்று வெளியாகியிருந்தால் அதன் வசூல் 18 கோடிகள். இதேபோல் அன்றைய ரஜினி, விஜயகாந்த் படங்களின் வசூலையும் இன்றைய மதிப்புடன் ஒப்பிட்டால் இளம் நடிகர்களின் படங்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.

Also read... ஆடு நாயகனாக நடித்த சூப்பர்ஹிட் தமிழ்ப் படம்!

ஆக, வசூல் சாதனை என்பது அப்போதைய ஒரு கணக்கு மட்டுமே அதற்காக தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளர்களும் கவலைப்படலாம். ரசிகர்களும், விமர்சகர்களும் அடித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sivaji ganesan, Entertainment, MGR