முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'மிஸ்டர் ராமச்சந்திரன்...!' - படப்பிடிப்பில் எம்ஜிஆரை அதட்டிய பிரபல நடிகை

'மிஸ்டர் ராமச்சந்திரன்...!' - படப்பிடிப்பில் எம்ஜிஆரை அதட்டிய பிரபல நடிகை

நாடோடி மன்னன்

நாடோடி மன்னன்

மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுகிறவர் பானுமதி. நடிப்புடன் இயக்கம், தயாரிப்பு, பாடல், இசை, பாடகி என பிற துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய சினிமா எப்போதும் ஆணாதிக்கத்தால் நிறைந்தது. முன்னணி நட்சத்திரங்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்தான் சினிமாவின் முதல்வரிசையில் வீற்றிருப்பார்கள். எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும் அவர் இரண்டாம்பட்சம்தான். விதிவிலக்காக ஆளுமை செலுத்திய சில நடிகைகளும் இருந்திருக்கிறார்கள்;. அதில் முதன்மையானவர்; பானுமதி.

மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுகிறவர் பானுமதி. நடிப்புடன் இயக்கம், தயாரிப்பு, பாடல், இசை, பாடகி என பிற துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். இவருடன் நடிப்பது என்றால் அந்தக்காலத்தில் நாயகர்களே அச்சப்படுவார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்களுடன் நடித்தவர். அவர்களுக்கு பின் வந்த எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும் கொடிகட்டிப் பறந்தார். தமிழைவிட தெலுங்கில் அவர் இன்னும் அதிக பிரபலம்.

முன்னணி நட்சத்திரங்களும் பானுமதிக்கு மரியாதை தருவர். அவர் படப்பிடிப்புத்தளத்தில் இருக்கையில் அவரது அதிகாரம்தான் கொடிகட்டிப் பறக்கும். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையும் ஒரே படத்தில் கையாண்டவர். அந்தவகையில் பாக்யராஜ், டி.ராஜேந்தருக்கெல்லாம் முன்னோடி.

எம்ஜிஆர் முதன்முதலில் தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதியும் நடித்தார். எம்ஜிஆருக்கு இயக்கம் புதிது. ஒரே காட்சியை திருப்தி வராமல் பலமுறை படமாக்குகிறார். இதனை பானுமதி கவனிக்கிறார். பல நாள்கள் இது தொடர்கதையாகிறது. ஒருநாள் இதே போல் பானுமதி படப்பிடிப்புத்தளத்தில் இருக்கையில் ஒரே காட்சியை பலமுறை படமாக்குகிறார் எம்ஜிஆர்.

பொறுமையிழந்த பானுமதி, எழுந்து வந்து, "மிஸ்டர் ராமச்சந்திரன், ஒரே ஷாட்டை எத்தனைமுறை திரும்பத் திரும்ப எடுப்பீங்க? இத்தனை நாள் சொல்ல வேண்டாம்னு இருந்தேன். நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியலை.  இந்தப் படத்துக்கு நீங்களே புரொடியூசர்ங்கிறதுனால எல்லா ஆர்டிஸ்டும் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. அதை உங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க. முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க. வேற யாரையாவது டைரக்டரா போடுங்க. நான் வந்து நடிச்சுத் தர்றேன். இன்னைக்கு எனக்கு மூடு போயிடுச்சி. நாளன் கிளம்பறேன்" என படபடவென பொரிந்துவிட்டு கிளம்பிவிட்டார்.

செட்டில் உள்ள யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. ஏன், எம்ஜிஆரே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு முன்னால் மற்றவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கியிருப்பதுதான் வழக்கம். அதிலும் நடிகைகளுக்கு அவர் தேவதூதர். அவர் சொல்லே மந்திரம். அவர் மறைந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவருடன் நடித்த நடிகைகள் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் பானுமதியின் நடத்தையை நினைத்துப் பாருங்கள். எம்ஜிஆரால் இதனை தாங்கவே முடியவில்லை. இவரை விட்டால் கடைசிவரை பட்டாசு வெடிப்பார் என அவரது கதாபாத்திரத்தை பாதியிலேயே சாகடித்து, சரோஜாதேவியை வைத்து படத்தை முடித்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு எம்ஜிஆர் - பானுமதி காம்பினேஷனே அமையவில்லை.

அன்றைய நாயகிகள் ஹீரோக்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடந்தபோது பானுமதி மட்டும் இப்படி எகிறி அடித்துக் கொண்டிருந்ததன் காரணம், அவரது திறமையும், தன்னம்பிக்கையும். அவரது படங்களில் அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில் அவர்தான் பாடுவார். மற்ற யாரையும் பாட அனுமதிக்க மாட்டார்.

கதை, வசனம், பாடல்கள், இயக்கம், இசையமைப்பு என அனைத்திலும் திறமைவாய்ந்தவர். இவை அனைத்தையும் ஒரே படத்தில் ஏற்றுக் கொண்டு திறம்பட படத்தை எடுத்திருக்கிறார். இதனால்தான் அன்றைய ஹிரோக்கள் பானுமதியை கண்டு அச்சப்பட்டனர்.

Also read... ஜெயிலர் படத்துக்காக அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்... எத்தனை கோடிகள் தெரியுமா?

நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆரே பெரும் பொருட்செலவில் தயாரித்தார். முதல்முறை இயக்கத்தை கையாண்டதில் தயாரிப்பு செலவு இழுத்துக் கொண்டு சென்றது. நாடோடி மன்னன் வெற்றி பெற்றால் நான் மன்னன், தோற்றால் நாடோடி என்று சொல்லித்தான் படத்தை வெளியிட்டார். படம் வெற்றி பெற்றது. எம்ஜிஆரும் திரையுலகின் மன்னர்களில் ஒருவரானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: MGR