The Family Man season 2: தி பேமிலி மேன் சீரிஸின் சிறப்பம்சம் என்ன?

த ஃபேமிலி மேன் 2

இந்தியாவில் மிகுந்து வரும் முஸ்லீம் வெறுப்பையும், அந்த வெறுப்பே தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை உந்தித் தள்ளுகிறது என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளது நல்ல பேலன்ஸ்.

 • Share this:
  பலருக்கும் தெரிந்தது தான், எனினும் ஒரு சின்ன அறிமுகம். தி பேமிலி மேன் இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ். 2019-ல் வெளியானது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் என்று தெரிந்த நடிகர்கள். அமேசான் பிரைம் இதனை வெளியிட்டது.

  சினிமாவை எடுத்துக் கொண்டால் மலையாளமும், தமிழும், தெலுங்கும், கன்னடமும் இந்திப் படங்களை ஓவர்டேக் செய்கின்றன. விசாரணை, அசுரன், கைதி போன்ற படங்களைப் பார்த்து வட இந்தியர்கள், இது தாண்டா படம் என பாராட்டுகிறார்கள். யூடியூபில் இந்தப் படங்களின் இந்தி டப்பிங்குகள் உள்ளன. படத்தைப் பார்க்காமல் கமெண்டை ஸ்க்ரோல் செய்து பாருங்கள். வட இந்தியா பூரித்துப் போயிருப்பதை காணலாம். இன்னொரு ரகசியம், இன்றைய தேதியில் உலகின் சிறந்த த்ரில்லர் எது என்று இந்தி பேசுகிறவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்மூர் ராட்சசன் முதலிடம் பிடிக்கும். படம் பார்த்து கிறங்கிப் போயிருக்கிறார்கள்.

  அப்படியே யு டர்ன் அடித்து வெப் சீரிஸுக்கு வந்தால் அவர்கள் டாக்டரேட்டுக்கு தயாராகிறார்கள். நாம் இப்போது தான் ஆனா ஆவன்னா எழுதிப் பழகிறோம். பெருமையாக சொல்லிக் கொள்ள நம்மிடம் நல்ல வெப் சீரிஸ்கள் இல்லை. அவர்கள் டஜன் கணக்கில் வைத்துள்ளார்கள். சேக்ரட் கேம்ஸ், கிரிமினல் ஜஸ்டிஸ், பாதாள் லோக், ஜம்தாரா, டெல்லி கிரைம்ஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். ஹாலிவுட், கொரிய வெப் சீரிஸ்களுக்கு இணையாக அடித்துக் கிளப்புகிறார்கள். இந்த பட்டியலில் 2019-ல் இணைந்த வெப் சீரிஸ், தி பேமிலி மேன். இன்று அதன் இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லரை வெளியிடுகிறது அமேசான் ப்ரைம். விரைவில் இரண்டாவது சீஸன் வெளியாகும்.

  தி பேமிலி மேன் இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர். இதே ஜானரில் வந்த பிற த்ரில்லர்களிடமிருந்து இதனை வித்தியாசப்படுத்துவது எது? கேள்விக்கான பதில் அதன் பெயரிலேயே உள்ளது. தி பேமிலி மேன். நாயகனின் குடும்ப உறவை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

  மனோஜ் பாஜ்பாய் தேசிய புலானாய்வுத் துறையின் ஓர் அங்கமான TASC இல் (Threat Analysis and Surveillance Cell) பணிபுரியும் அதிகாரி. இது இந்த சீரிஸுக்காக கற்பனையாக உருவாக்கப்பட்ட பிரிவு. தீவிரவாதத்தை கண்காணிப்பதும், அதனை களைவதும், உலகின் பல பகுதிகளில் உள்ள தங்கள் ஏஜென்ட்களை ஒருங்கிணைப்பதும், உத்தரவிடுவதும் இவர்களது பணி. ஆபத்தான வேலை என்று மனோஜ் பாஜ்பாயின் மனைவி ப்ரியா மணிக்கு தெரியும். வேலை அங்கதான், ஆனா, இப்போ டெஸ்க் வொர்க்தான் என்று சமாளிக்கிறார் மனோஜ் பாஜ்பாய். இந்த சின்ன பொய்யை மெயின்டெயின் செய்ய, வேலைக்கும், குடும்பத்துக்கும் நடுவில் இழுக்கப்படுகிறார். அதனை அவர் சமாளிக்கிறவிதம் அப்ளாஸ் ரகம்.

  திருமணத்துக்குப் பின் பூசிய உடம்புடன் ப்ரியாமணி தி பேமிலி மேனின் ஒரு தூணாகவே வருகிறார். குழந்தைகள் இருவரும் கலக்குகிறார்கள். அதிலும் மகளாக வரும் சிறுமியின் துருதுரு நடிப்பு மனதில் பெவிகாலாக ஒட்டிப்போகிறது. அவள் வருகிற காட்சிகளில் மனோஜ் பாஜ்பாய் பின்னுக்கு போய்விடுகிறார்.

  டெல்லியில் மிகப்பெரிய உயிர்பலியை ஏற்படுத்துவது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம். அதனை செயல்படுத்த வருகிறவர்களை போலீஸ் சுற்றி வளைக்கிறது. அதில் அப்பாவியாக இருக்கிறான் மூஸா (நீரஜ் மாதவ்). ஆனால், அவன்தான் அந்த ஆபரேஷனின் மூளை என தெரிய வருகையில் அவன் தப்பித்துவிடுகிறான். தீவிரவாதிகளின் நோக்கம், விஷ வாயு தாக்குதல். நாயகனும் அவனது டீமும் அதனை முறியடிக்கிறது. ஆனால், தீவிரவாதிகளிடம் பிளான் 'பி' ஒன்று இருக்கிறது. கெமிக்கல் பிளான்ட் ஒன்றை கையகப்படுத்தி, அதில் விஷ வாயுவை வெடிக்க வைப்பது. போபால் போன்றதொரு அழிவை உருவாக்குவது. தீவிரவாதிகளின் பிளான் 'பி' ஐ ஏறக்குறைய முறியடிக்கையில், விஷயம் கைமீறிபோவதாக முதல் பாகத்தை முடித்துள்ளனர்.

  மும்பை, டெல்லி, கொச்சி, காஷ்மீர், லடாக் என பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இஸ்தான்புல், சிரியா உள்பட பல வெளிநாடுகளில் கதை நடப்பதாக புனையப்பட்டுள்ளது. இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாம் தரம். ஸ்ரீநகர் காட்சிகளில் ராணுவ அதிகாரியாக சந்தீப் கிஷன் வருகிறார். ஸ்கோர் செய்வது மனோஜ் பாஜ்பாய். மகள் தவறு செய்துவிட, பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரை வரச்சொல்வதும், பாதி மீட்டிங்கில் கடமை அழைக்கிறது என அவர் கிளம்பிச் செல்வதும், அந்தப் பிரச்சனையை சமாளிக்க, தனது அதிகாரத்தை மனோஜ் பாஜ்பாய் பயன்படுத்துவதும் புன்னகை எபிசோடுகள்.

  இந்த களேபரத்தை மனைவியிடம் அவர் மறைக்கிற விதம், வேலையில ஜேம்ஸ் பாண்டா இருந்தாலும் வீட்ல வெறும் ரப்பர் பேண்ட்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது. ப்ரியாமணிக்கு வேறொருவருடன் ஏற்படும் நெருக்கமும், அதனைத் தொடர்ந்து கணவன் மனைவிக்கு நடுவில் உருவாகும் மௌன பூசலும் அழாகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 'நீங்களும், அம்மாவும் டைவர்ஸ் பண்ணுனீங்க...' என்று மகள் எச்சரிக்கும் இடம் க்யூட்.

  முஸ்லீம்கள் தான் தீவிரவாதிகள். அதேநேரம், இந்தியாவில் மிகுந்து வரும் முஸ்லீம் வெறுப்பையும், அந்த வெறுப்பே தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை உந்தித் தள்ளுகிறது என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளது நல்ல பேலன்ஸ். உதாரணமாக, பீஃப் கொடுக்க வரும் முஸ்லீம் மாணவர்களை பாம் வைக்க வந்ததாக தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டு, அந்தத் தவறை மறைக்க, மாணவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இடம் நிஜத்தின் பிரதிபலிப்பு.

  தீவிரவாதம், குண்டு வெடிப்பு, கொலை என்ற காட்டாற்றில் குடும்பம், உறவுகள் என்ற படகை வெற்றிகரமாக மிதக்கவிட்டிருக்கிறார்கள். இதனை இயக்கியவர்கள் ராஜ் & டி.கே. என்று அழைக்கப்படும் ராஜ் நிதிமொரு மற்றும் கிருஷ்ணன் டி.கே. ஆந்திராவாசிகளான இவர்கள் அதிகமும் இயக்கியது இந்திப் படங்கள். சயிப் அலிகான் நடிப்பில், இந்தியாவின் முதல் ஸாம்பி திரைப்படம் என்ற டேக் லைனுடன் வெளிவந்த கோ கோவா கான் திரைப்படம் இவர்கள் இயக்கியதே. தி பேமிலி மேனுடன் சிக்ஸர் விளாசியிருக்கிறார்கள். இரண்டாவது இன்னிங்ஸும் அதே ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்று நம்புவோம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: