கடந்த 1997 டிசம்பரில் வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை காதல் கடலில் மூழ்கடித்த திரைப்படம் ‘டைட்டானிக்’. 25 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், படத்தில் இடம்பெற்ற ஜாக்-ரோஸ் இடையிலான காதல், ரசிகர்கள் மனதில் என்றேன்றும் பனித்துளியாகவே நிலைத்திருக்கிறது.
இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு தன் முதல் பயணத்தை தொடங்கியது. கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை கவிழ்க்க முடியாது என்று கூறினார் டைட்டானிக் கப்பலின் கேப்டன். ஆனால், முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே ஜல சமாதி அடைந்தது டைட்டானிக். இந்த சோகமான சம்பவத்தை மையப்படுத்தி, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய காதல் காவியமே டைட்டானிக் ஆக வரலாற்றில் இடம்பிடித்தது.
டைட்டானிக் கப்பலின் பிரமாண்டத்தை பதிவு செய்ததாகட்டும், பனிப்பாறை மீது கப்பல் மோதும் போது நெஞ்சைப் பதற வைக்கும் போராட்டமாகட்டும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி டைட்டானிக் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாக இருந்தது சில்லென்ற ஒரு காதல் கதை. ரோஸ் என்ற உயர் சமூக பெண்ணுக்கும், ஜாக் என்ற அடித்தட்டு பையனுக்கும் இடையே கப்பலில் மலர்ந்து அட்லாண்டிக் கடலின் குளிரில் முடிந்த அந்த காதல் கதையில், ஒட்டுமொத்த உலகமும் கொஞ்சம் கிறங்கித் தான் போனது.
பிரமாண்ட கப்பலின் மேல் தளத்தில் நாயகி கேட் வின்ஸ்லெட்டும், நாயகன் டிகாப்ரியோவும் கைகளை ஒன்றாக பறவை போல் விரித்து நிற்கும் அந்தத் தருணம் உலக ரசிகர்கள் மனதில் மறையாத காட்சியாக பதிந்து போயிற்று. 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். மூழ்கும் கப்பலைப் பற்றிய உண்மைக் கதை என்றாலும், காதலை உன்னதமாக பதிவு செய்ததன் மூலம், 25 ஆண்டுகள் அல்ல..... நூறாண்டுகள் கடந்தாலும் ஒரு மூழ்காத ஷிப் ஆகவே டைட்டானிக் திகழும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Titanic