சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளது தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம். தாயைப் பிரிந்த ரகு என்ற யானை குட்டியை பொம்மன் - பெள்ளி தம்பதி எவ்வாறு பராமரித்து வளர்த்தார்கள் என்பதை 47 நிமிட ஆவண குறும்படமாக இயக்கியிருந்தார் இயக்குநர் கார்த்திகி கான்சல்வேஸ். உதகையில் பிறந்து கோவையில் பயின்ற கார்த்திகி தான் எடுத்துக் கொண்ட முதல் முயற்சியிலேயே சர்வதேச அரங்கில் விருது பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல.
யானையைப் பராமரித்து வளர்த்த பொம்மனிடம் பேசினோம். இப்போ கூட தர்மபுரில 3 யானை கரண்ட் ஷாக் அடிச்சு செத்துடுச்சு இல்ல, அது சம்பந்தமா நான் தர்மபுரிக்கு வந்திருக்கேன் என்று பேசத் தொடங்கிய பொம்மன், “நாங்க காட்டுநாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவங்க. முதுமலை புலிகள் காப்பகத்துல எங்க தாத்தா, அப்பா, இப்போ நானுன்னு மூணு தலைமுறையா யானையை பராமரிக்குற வேலை செய்றோம்.
நான் 1984-ல இங்க வேலைக்கு சேர்ந்தேன், இப்போ கிட்டத்தட்ட 40 வருஷமாச்சு. கிருஷ்ணகிரி மாவட்டத்துல இருக்க தேன்கணிக்கோட்டைங்கற இடத்துல இருந்து 2017-ம் வருஷம் ஒரு குட்டி யானையை வனத்துறை அதிகாரிகள் என் கிட்ட கொடுத்தாங்க. அந்த யானைக்கு ரகுன்னு பேர் வச்சு நல்லா பாத்துக்கிட்டேன். ரகு என் கிட்ட வரும் போது, அதோட அம்மாவை பிரிஞ்சு உடம்புல நிறைய காயங்களோட வந்தான். அது இனி பிழைக்கிறது கஷ்டம்ன்னு சொன்னாங்க. எப்படியாச்சும் காப்பாத்திடணும்ங்கற நம்பிக்கைல நிறைய முயற்சி எடுத்தேன். அந்த நம்பிக்கை வீண் போகலை.
யானையைப் பார்த்துக்க உதவியா பெள்ளி வந்தா. அவளுக்கு சத்தியமங்கலத்துல இருந்து அம்முங்கற குட்டி யானையை கொடுத்து பாத்துக்க சொன்னாங்க. கொஞ்ச நாள் கழிச்சு நானும் பெள்ளியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரகுவையும், அம்முவையும் எங்க புள்ளைங்களா வளர்த்தோம். இப்போ அவங்க ரெண்டு பேரும் எங்கக் கூட இல்ல, பெரியவங்களாகி காட்டுக்கு போயிட்டாங்க.
அம்மா இல்லாத குட்டியை வளர்த்து பெரியாளாக்கி திரும்ப காட்டுக்கு அனுப்பிடுவோம். ஒருவேளை கொஞ்சம் பெரிய யானையா இருந்தா காட்டுக்குள்ளயே விட்ருவோம். குட்டி யானையை வளர்க்குறதுக்குன்னு தனியா ஒரு கூண்டு இருக்கு, அங்க வச்சு டிரெயினிங் கொடுப்போம். சில சமயம் காட்டு யானைகள் வெளில வந்து கலாட்டா பண்ணும். அப்போ எங்களை கூப்பிடுவாங்க, நாங்க போய் காட்டுக்குள்ள விரட்டி விடுவோம். இதுமட்டுமில்லாம, புலி விரட்ட கூப்பிட்டா, அதுக்கும் போவோம்” என்றார்.
பேச்சிலேயே யானைக்கும் தனக்கும் உள்ள பிணைப்பை உணர்த்திய பொம்மனிடம் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் பற்றி கேட்டோம். “இந்தப் படத்தை எடுத்த கார்த்திகியை எனக்கு ரொம்ப நாளா தெரியும். அவங்களும் அவங்க ஃப்ரெண்ட்ஸும் அடிக்கடி முதுமலைக்கு வருவாங்க. ஒருநாள் நாங்க ரகு கூட இருக்கும் போது, உங்களையும் இந்த குட்டி யானையையும் வச்சு, நாங்க ஒரு படம் எடுக்குறோம்ன்னு சொன்னாங்க. கிட்டத்தட்ட 2 வருஷமா அப்பப்போ வந்து படம் எடுத்தாங்க. ஆனா இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்குன்னு அப்போ எங்களுக்கு தெரியாது. ஆஸ்கர் விருது கிடைச்சிருக்குன்னு நிறைய பேர் ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் இயக்குநர் கார்த்திகி தான். நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருந்தோம். இன்னைக்கு உலகம் முழுக்க தெரிஞ்சிருக்கோம்ன்னா அதுக்கு காரணம் அவங்க தான். கார்த்திகிக்கு ரொம்ப நன்றி” எனத் தெரிவித்தார்.
கடந்த 2022, டிசம்பர் 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கும் ரகு என்ற குட்டி யானைக்கும் இடையே உள்ள பிணைப்பை உணர்வுப்பூர்வமாக கண்முன் நிறுத்தியது. இந்தப் படத்தை கார்த்திகி கான்சல்வேஸ் இயக்கி இணை தயாரிப்பாளராகவும் பங்கு பெற்றார். அவருடன் இணைந்து குனீத் மோங்கா, டக்ளஸ் பிளஸ், அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
இன்று நடந்த 95-வது அகாடமி விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான பிரிவில் விருது வென்று வியப்படைய வைத்துள்ளது தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oscar Awards