Home /News /entertainment /

எம்ஜிஆரின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இயக்குநர்

எம்ஜிஆரின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இயக்குநர்

மாதவன் மற்றும் எம்.ஜி.ஆர்

மாதவன் மற்றும் எம்.ஜி.ஆர்

படத்தின் வெற்றியின் காரணமாக அடுத்தப் படத்தையும் தனக்கு இயக்கித்தர வேண்டும் என எம்ஜிஆர் கேட்க, முடியாது என்று மறுத்தார் மாதவன். கடைசிவரை அவர் எம்ஜிஆரை வைத்து படம் இயக்கவில்லை. அதேநேரம் சிவாஜி நடிப்பில் எங்க ஊரு ராஜா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை என சூப்பர் ஹிட் படங்களாக எடுத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
எம்ஜிஆர், சிவாஜி இருவரும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் கொடிகட்டிப் பறந்தாலும் இருவரது ஆளுமைகளும் வித்தியாசமானது. கதை, கதாபாத்திரம் தாண்டி எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர் சிவாஜி கணேசன். படப்பிடிப்பு அன்று உடன் நடிக்கும் நாயகி யார் என்பதை சொன்னாலும் அவருக்கு பாதகமில்லை.

எம்ஜிஆர் அப்படியல்ல. ஒரு படத்தின் அனைத்துத்துறைகளும் தனது ஆளுகைக்கு கீழ் இருக்க வேண்டும் என நினைப்பவர். அனைத்திலும் அவரது விருப்பமே செயல்வடிவமாகும். அதற்கு உடன்பட மறுப்பவர்கள் படத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் இல்லை எம்ஜிஆர் வெளியேறிவிடுவார்.

எம்ஜிஆரின் இந்த ஆளுமையைத் தாண்டி அவரிடம் உரிமையுடன் கருத்து முரண்படுகிறவர்கள் இருவர். ஒருவர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பதேவர், இன்னொருவர் ஆர்.எம்.வீரப்பன். இவர்கள் தவிர ஒரு இயக்குநரும் எம்ஜிஆரிடம் கருத்து முரண்பட்டிருக்கிறார். அவர் பி.மாதவன். இவர் டி.ஆர்.ரகுநாத், ஸ்ரீதர் ஆகியோரிடம் பணிபுரிந்துவிட்டு 1963 இல் மணி ஓசை படத்தின் மூலம் இயக்குநரானார். இவரது திறமையை கேள்விப்பட்ட சிவாஜி தனது நண்பரின் தயாரிப்பில் மாதவனுக்கு படம் இயக்க வாய்ப்பளித்தார். அந்தப் படம்தான் சிவாஜி நடித்த அன்னை இல்லம்.

அந்த நேரத்தில் ஆர்.எம்.வீரப்பன் தென்காசியைச் சேர்ந்த சங்கரன், ஆறுமுகம் என்ற சகோதரர்களுடன் சேர்ந்து எம்ஜிஆரின் தாய் சத்யா பெயரில் சத்யா மூவிஸை தொடங்கினார். முதல் படத்தை இயக்கும் பொறுப்பு மாதவனிடம் அளிக்கப்பட்டது. எம்ஜிஆர் நாயகன். அந்தப் படம்தான் தெய்வத்தாய்.

தெய்வத்தாயின் படப்பிடிப்பின் போது எம்ஜிஆருக்கும், மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எல்லாம் வழக்கமான எம்ஜிஆரின் ஆளுமைப் பண்புதான். எடிட்டிங் உள்ளிட்ட விஷயங்களில் எம்ஜிஆர் தலையிடுவது மாதவனுக்கு பிடிக்கவில்லை. என்னுடைய வேலைகளில் தலையிட்டால் இந்தப் படத்திலிருந்து வெளியேறிவிடுவேன் என்றார் மாதவன். அவரது திறமை மற்றும் ஆர்.எம்.வீரப்பனின் வற்புறுத்தல்கள் காரணமாக தெய்வத்தாயில் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்தார். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.



படத்தின் வெற்றியின் காரணமாக அடுத்தப் படத்தையும் தனக்கு இயக்கித்தர வேண்டும் என எம்ஜிஆர் கேட்க, முடியாது என்று மறுத்தார் மாதவன். கடைசிவரை அவர் எம்ஜிஆரை வைத்து படம் இயக்கவில்லை. அதேநேரம் சிவாஜி நடிப்பில் எங்க ஊரு ராஜா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை என சூப்பர் ஹிட் படங்களாக எடுத்தார்.

ஒருவர் மாஸ் ஹீரோவாகும் போது தனது விருப்பத்தின்படி படங்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியும். அதே நேரம் திறமைசாலிகளிடம் தம்மை அப்படியே ஒப்படைக்கும் குணமும் வேண்டும். அது இருந்ததால் சிவாஜிக்கு பல வெற்றிப் படங்கள் கிடைத்தன. எம்ஜிஆருக்கு பி.மாதவனிடமிருந்து ஒரேயொரு படம்தான் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, MGR

அடுத்த செய்தி