ஷங்கர் இயக்கிய படங்களில் முதல்வனுக்கு முக்கியமான இடம் உண்டு. கச்சிதமாக அமைந்த அரசியல் படம் என்பதுடன், தனித்துவமான கதையை கொண்டது முதல்வன் திரைப்படம்.
ஒருநாள் முதல்வர் என்ற அதன் கான்செப்டே வித்தியாசமானது. கதை கேட்கும் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முதல்வன் போன்ற கதையை தான் எதிர்பார்க்கிறார்கள். சந்தர்ப்ப சூழலால் ஒருநாள் முதல்வராகும் ஹீரோ, அந்த ஒருநாளில் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் கதை எனும் போதே எதிர்பார்ப்பு பற்றிக் கொள்கிறதல்லவா. கதை என்றால் இதுபோல் நாலு வரியிலேயே ஒரு ஃபயர் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த கதை உருவான விதம் சுவாரஸியமானது.
ஷங்கரின் முதல் படம் ஜென்டில்மேன் அளவுக்கு இரண்டாவது படம் காதலன், விமர்சனரீதியாக பாராட்டை பெறவில்லை என்றாலும், அதன் பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் படத்தை வெற்றிப்படமாக்கின. அதனையடுத்து அவர் இயக்கிய இந்தியன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பம்பர் ஹிட்டானது. அதையடுத்து எடுத்த ஜீன்ஸ் திரைப்படத்தில் உலக அழகியும், உலக அதிசயங்களும் இருந்தாலும் படம் சுமாராகவே போனது.
தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்த ஷங்கருக்கு ஏற்பட்ட முதல் சறுக்கல். அடுத்தப் படத்தை எப்படியாவது சூப்பர் படமாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் கதைக்காக அவரது டீமே கதை விவாதத்தில் ஈடுபட்டது. எதுவும் தகையவில்லை. கதையை தயார் பண்ணிட்டு சொல்லுங்க, திரைக்கதை பண்ணிரலாம் என்று எழுத்தாளர் சுஜாதா சென்றுவிட்டார். வெளியூரில் அறை போட்டு யோசித்தும் ஒன்றும் படியவில்லை.
இந்த நேரத்தில, அமெரிக்காவிலுள்ள நகரம் ஒன்றின் மேயராக இந்தியாவைச் சேர்ந்த விஐபி ஒருவரை நியமித்திருக்கிறார்கள். மேயருக்கான தங்கச் சாவியை தந்து ஒருநாள் மேயராக கௌரவிப்பது அங்கு வழக்கம். இந்த செய்தியை பத்திரிகையில் படித்தவர்கள் அதுபற்றி விளையாட்டாக பேசியிருக்கிறார்கள். ஒருநாள் மேயரானவர், அந்த ஒருநாளில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அவர் கட்டடத்தை இடிக்கச் சொன்னால் இடித்து தான் ஆக வேண்டும். விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கையில் தான் பிளாஷ் அடித்திருக்கிறது. ஒருநாள் மேயர் போல, ஒருநாள் முதல்வர் இங்கு சாத்தியமா என்று கேள்வி பிறக்க, உடனே சுஜாதாவுக்கு போன் அடித்துக் கேட்டிருக்கிறார்கள்.
பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருந்தால் ஒருநாள் முதல்வர் சாத்தியமே என்று சொல்ல, மளமளவென ஏன் எதற்கு எப்படி என காரண காரியங்களை கோர்த்து முதல்வன் கதையை உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். வயதான கிழவர் ஒருவர் தப்பு செய்யிறவங்களை குத்துகிறார் என்ற ஒருவரியை வைத்து உருவானதே இந்தியன் படத்தின் கதை. அதுபோல ஒருநாள் முதல்வர் என்ற ஒருவரியை வைத்து உருவாக்கியது தான் முதல்வன் திரைப்படம். அந்த ஒரு வரி இன்ஸ்பிரேஷனுக்கு காரணமாக அமைந்தது அமெரிக்காவில் வழக்கத்தில் உள்ள ஒரு நடைமுறையும், அது பத்திரிகையில் செய்தியாக வந்ததும் தான்.
நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?
அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் முதல்வர் படத்தின் கதைக்கும் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். எந்த சம்பந்தமும் இல்லை. அதேநேரம் சம்பந்தம் இருக்கிறது.
ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
1962-ல் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் கலாசார தூதுவராக சிவாஜி கணேசன் அமெரிக்கா சென்றார். கலாசார தூதுவராக அமெரிக்கா சென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். அப்படி அமெரிக்கா சென்ற அவர் நயகரா நீர்வீழ்ச்சி இருக்கும் நயகரா நகருக்கு சென்ற போது, அவருக்கு தங்கச் சாவியை அளித்து, அந்நகரத்தின் ஒருநாள் மேயராக்கி கௌரவித்தனர். இந்த கௌரவத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் சிவாஜி கணேசன். முதல் இந்தியர் ஜவஹர்லால் நேரு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.