• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: விமர்சனங்களை வெற்றிக்கான விதைகளாக மாற்றிய விஜய்!

Thalapathy Vijay: விமர்சனங்களை வெற்றிக்கான விதைகளாக மாற்றிய விஜய்!

விஜய்

விஜய்

Thalapathy Vijay: திருமலை தொடங்கி வைத்த விஜய்யின் ஆட்டம் அடுத்தடுத்த வெற்றிகளால் அவரை ஒரு முழுமையான ஸ்டார் அந்தஸ்தை எட்ட வைத்தது.

  • Share this:
தமிழ் திரை ரசிகர்களை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். ஆம்.. இந்த நடமாடும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் திரையில் ரசித்து கொண்டாடிய திரை நட்சத்திரங்களுக்கு கொடுத்த பட்டங்கள் எண்ணற்றவை. திரையில் நடக்கும் காட்சிகளை தங்கள் வாழ்க்கையிலும் பொருத்தி பார்க்கும் மனநிலை கொண்ட தமிழ் திரை ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களுக்கு வித விதமான பட்டங்கள் கொடுத்து உள்ளம் மகிழ்ந்தனர். திரையில் மின்னும் நட்சத்திரங்களின் பெயர்களை கூறுவதை விட அவர்களின் பட்டங்களை சொல்லி பூரிப்படைந்தான் தமிழ் ரசிகன். இந்த வரிசையில் சொல்லி அடித்த கில்லியாய் இன்றைய தலைமுறையினரிடம் ’தளபதி’ என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

மக்களின் வாழ்க்கையில் நீங்காத அங்கமாக விளங்குகிறது `சினிமா'. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்புது திரைப்படங்களும் திறமையான நடிகர்களும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பது என்பது, கடும் சவாலான விஷயம் தான். இந்தச் சாதனையை சர்வசாதாரணமாக நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய். ’நாளைய தீர்ப்பி'ல் அறிமுகமாகி தனது தந்தையால் 'இளைய தளபதி' ஆக்கப்பட்டு தற்பொழுது ரசிகர்களால் 'தளபதி'யாக உயர்ந்து நிற்கும் விஜய், கடந்து வந்த பாதைகள் ஏராளம். அதை அலசிப் பார்க்கும் ஒரு சிறப்புத் தொகுப்புதான் இது.

தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் தனது 18-வது வயதில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் கதானாயகனாக அறிமுகமானார் விஜய். இத்திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார் விஜய். ஆரம்ப காலகட்டங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான விஜய், காலம் செல்ல செல்ல தனது முதிர்ச்சியான நடிப்பை கொடுக்க ஆரம்பித்தார். ‘செந்தூர பாண்டி' திரைப்படத்தில் ‘இளைய நட்சத்திரம் விஜய்’ என்று தான் டைட்டில் கார்டு விஜய்க்கு போடப்பட்டது.. அடுத்து விஜய் நடிப்பில் ‘ரசிகன்’ திரைப்படம் வெளியாகவிருந்தது. அக்காலகட்டத்தில், ரஜினியிகாந்த் நடித்த ‘தளபதி’ என்ற பெயர் ஊர் முழுக்க பெரும் பரபரப்பில் இருந்தது. விஜய்யும் இயல்பில் ரஜினிகாந்தின் ரசிகராக இருந்தார். எனவே விஜய்யின் ரசிகர்கள், 20 வயது இளைஞனான விஜய்க்கு ‘இளைய தளபதி’ என பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள்.தனது தந்தை புகழ் பெற்ற இயக்குனர் என்பதால் எளிதாக திரைத்துறைக்குள் நுழைந்து விட்டாலும் அதன் பின்பு விஜய் பெற்ற வெற்றிகளோ, இன்று அடைந்திருக்கும் புகழோ அவருக்கு எளிதாகவோ இயல்பாகவோ கிடைத்திடவில்லை. விஜய் தனது சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்திருக்கிறார், பின்பு குதிரையென எழுந்தும் இருக்கிறார். 90-களின் ஆரம்பத்தில் தனது தந்தையின் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்தாலும் குடும்பங்களால், பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே அதுவரை இருந்தார் விஜய்.. கவர்ச்சியும், ஆபாச வசனக்களும் நிறைந்ததாகவே இருந்தது அவரது திரைப்படங்கள். இத்தனை விமர்சனங்களிலிருந்தும் விஜய்யை மீட்கும் வண்ணம் 1996-ஆம் வருடம் வெளியானது 'பூவே உனக்காக'.விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் அதன் பின்னர் பல ஆண்டுகள் விஜய்யைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக, தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்த வெற்றித் திரைப்படமாக அமைந்தது.. திருமண வீடுகளெங்கும் 'ஆனந்தம் ஆனந்தம்..பாடு்ம்..மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…' பாடலும் காதலர்கள் மனங்களெங்கும் 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என ஒலித்து முழுமையாக மக்களிடம் விஜய்யைக் கொண்டு சேர்த்தது ‘பூவே உனக்காக’.’பூவே உனக்காக’ திரைப்படத்தின் வெற்றி ஒரு முழுமையான கதாநாயகனாக விஜய்யை மக்களிடம் சேர்த்தது. இதன் தொடர்ச்சியாக அமைந்தவை தான் பின்னர் வந்த ’காதலுக்கு மரியாதை’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படங்கள். விஜய்யின் திரைப்பயணத்தில் அவரை இளைஞர்களிடமும் குடும்பங்களிடமும் மேலும் அழுத்தமாக கொண்டு சேர்த்த திரைப்படமாக அமைந்தது ’துள்ளாத மனமும் துள்ளும்’. விஜய்யின் நடிப்பு திறனுக்கு ஆகச்சிறந்த தீனியாக அமைந்தது இந்த ’துள்ளாத மனமும் துள்ளும்’. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அங்கீகாரத்தையும் ரசிகர் வட்டத்தையும் பெற உதவிய படமும் கூட. விஜய் திரைப்படமென்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் எனும் அடுத்த நிலைக்கு விஜய்யை கொண்டு சென்ற படமாகவும் அமைந்தது ’துள்ளாத மனமும் துள்ளும்’.காதல் படங்கள், குடும்பப் படங்கள், காமெடி படங்கள் என பல வெற்றிகளைக் கொடுத்த விஜய்க்கு அப்பொழுது வரை ஆக்சன் என்ற ஒன்று அமையவேயில்லை. தனது தந்தையின் இயக்கத்தில் விஜய் நடித்த பல திரைப்படங்கள் விஜய்யை ஆக்சன் ஹீரோவாக முன்னிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தான். ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விஜய்யின் பட போஸ்டர்களோ பாடல்களோ வெளிவரும்போதே அவை ஆக்சன் படம் போல இருந்தால், 'படம் அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் பேசக்கூடிய அளவுக்கு இருந்தது விஜய்யின் சினிமா கிராஃப். இதற்கு உதாரணங்களாக அமைந்தது விஜய் நடித்த ஆக்சன் திரைப்படங்களான நெஞ்சினிலே, பகவதி, தமிழன், புதியகீதை போன்ற திரைப்படங்கள். ஆகவே, 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்டது. இந்த நிலையில் தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தது 'திருமலை'.

திருமலை தொடங்கி வைத்த விஜய்யின் ஆட்டம் அடுத்தடுத்த வெற்றிகளால் அவரை ஒரு முழுமையான ஸ்டார் அந்தஸ்தை எட்ட வைத்தது. இதில் விஜய்யின் மார்க்கெட்டை உச்சம் தொட வைத்த திரைப்படமாக அமைந்தது ‘கில்லி’. முழுக்க முழுக்க விஜய்யை அனைவரும் ரசிக்கும் ஒரு ஸ்டாராக மாற்றியது கில்லி திரைப்படம். தமிழ் சினிமாவில் வந்த மிக முக்கியமான மசாலா படங்களில் கில்லி முதன்மையானது. விஜய்யின் துறுதுறுப்பும், சண்டை போடும் போது கூட அசாதாரணமாக சிரிக்க வைக்கும் நகைச்சுவையை கையாளும் திறமையும், திரையில் அனைவரையும் ஈர்க்கும் திறமையும் சேர்ந்த கூட்டு கலவையாகி மாஸ் ஹீரோ அந்தஸ்தக்கு உயர்ந்தார் விஜய்.கில்லிக்கு அடுத்து வந்த காலகட்டங்களில் விஜய்க்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதை தக்கவைக்க தொடர்ந்து ஒரே மாதிரியான மசாலா படங்களில் நடித்து வந்தார் விஜய். இதில் 2008 முதல் 2010 வரை, தொடர் சறுக்கல்களை சந்தித்தார்.. அவர் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' போன்ற திரைப்படங்கள் அவருக்குத் தோல்வியைத் தந்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அவரது 50-வது படமான `சுறா' பெரும் தோல்வியடைந்தது. ஒரே மாதிரியான கதைக்களம், தோற்றம் எனப் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய்க்கு, அடுத்த திரைப்படமான `காவலன்' பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் திரை ஓட்ட களத்தில் விஜய்யை முன்னணியில் நிறுத்தியது.தமிழ் சினிமா கதாநாயகர்களில் தான் ஒரு சொல்லி அடிக்கும் கில்லி என `வேலாயுதம்', `நண்பன்' போன்ற திரைப்படங்களின் வெற்றி மூலம் மீண்டும் நிரூபித்தார் விஜய். இந்த நேரத்தில் தான் விஜய் - ஏ. ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான `துப்பாக்கி' வெளியானது. விஜய் இதற்குமுன் செய்த அனைத்து திரைப்படங்களின் சாதனையை முறியடித்து, பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது இந்த துப்பாக்கி. விஜய் நடிப்பில் `100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம்' என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது.துப்பாக்கியின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `தலைவா'. தன் அரசியல் ஈடுபாட்டை இத்திரைப்படம் மூலம் வெளிப்படுத்தினார் விஜய். தலைவா என்ற பெயருகேற்றால் போல் Time to lead என்ற வசனத்தால் சில சிக்கல்களை சந்தித்தது இப்படம். விஜய்யின் திரைப்படங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பது இந்த படம் மூலம் ஆரம்பமானது. அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்தபோது, ' டைம் டூ லீட்' என்கிற டேக் லைனுடன் 'தலைவா' பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு படம் வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. இந்தப் பிரச்சனையை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக பல நாட்கள் கழித்து 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தாமதமாக திரைக்கு வந்தாலும் இத்திரைப்படம் அவரது ரசிகர்களால் வெகுவாகவே கொண்டாடப்பட்டது.தமிழ் நாட்டில் கொடிகட்டி பறந்த ரஜினியை எப்படி ஷங்கர், சிவாஜி மூலம் இந்திய அளவிலான சூப்பர் ஸ்டாராக மாற்றி, பின் எந்திரன் மூலம் உலக அளவிற்கு கொண்டு சென்றாரோ, அதே போல் விஜய்யின் திரைவாழ்க்கையை இந்திய அளவில் பேசப்படும் ஒரு நடிகராக மாற்றியது முருகதாஸின் கத்தி திரைப்படம்.
விவசாயிகள் பிரச்சனை, கதை திருட்டுப் புகார் என இந்தப் படத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தாலும் 2014-ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக, `கத்தி' வெளியாகி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.துப்பாக்கியைத் தொடர்ந்து கத்தி படமும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்து விஜய்யை அசைக்க முடியாத வசூல் சக்ரவர்த்தியாக மாற்றியது. ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய கூர்மையான வசனங்களும் அதற்கு இணையாக விஜய்யின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று விஜய்யை இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டாராக கொண்டு சேர்த்தது.அதுவரை தயங்கியும், யோசித்தும் அரசியல் பஞ்ச்களை பேசி வந்த விஜய், கத்தி திரைப்படத்திற்கு பிறகு நேராகவே அடிக்க ஆரம்பித்தார். அந்த அடியில் முதலில் சிக்கியது ’மெர்சல்’ திரைப்படம். ஆம்.. 'மெர்சல்' வெளியானபோது பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும், அதைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் காட்டிய எதிர்ப்பு இத்திரைப்படத்திற்கு கவனத்தையும் வெற்றியையும் பெற்றுத் தந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி வரி குறித்த வசனம் தொடங்கி பல காட்சிகளை நீக்கச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் ஜிஎஸ்டி வரி குறித்த வசனம் தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி மெர்சலை பெரும் வெற்றியடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் ’ தளபதி’ என முதன் முதலாக விஜய்க்கு டைட்டில் கார்டு போடப்பட்டது இந்த படத்தில் தான். இளைய தளபதி விஜய், தளபதி விஜய்யாக உருவெடுத்தார்.’மெர்சல்’ திரைப்படத்தில் ஆரம்பமான விஜய்யின் அரசியல் ஆட்டம் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் திரைப்படத்திலும் தெறித்தது. தொடர்ந்து விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் நாள் ரசிகர்களின் திருவிழா நாளானது. விளைவு இந்த படமும் 250 கோடி வரை வசூல் செய்து விஜய்யை தென்னக அளவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்த்தியது.விஜய்யின் கேரியரில் முதல் 100 கோடி படம் கொடுத்தவர் முருகதாஸ் என்றால் முதல் 300 கோடி படம் கொடுத்த சிறப்பை அடைந்தார் அட்லி. இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளியாகி 300 கோடி வரை வசூல் செய்து இந்தி படங்களின் வசூலையே ஓரங்கட்டி மிரட்டியது.1992-ம் ஆண்டு வெறும் நடிகராகவே அறியப்பட்ட விஜய் என்ற பெயர் இன்று எத்தனையோ ரசிகர்கள் மனதில் தலைவன் என்று அழைக்கப்படும் அளவிற்கும்.. தளபதி என அழைக்கப்படும் அளவிற்கும்.. உயர்ந்துள்ளார் என்றால் இந்த விதை அவ்வளவு எளிதாக தூவப்பட்டது இல்லை… மாறாக கடின உழைப்பே தமிழ் சினிமாவின் தளபதியாக அவரை மாற்றியது என்றால் அதில் துளியும் சந்தேகமில்லை.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: