Thalapathy Vijay: விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கும் வம்சி பைதிபள்ளி!

Thalapathy Vijay: விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கும் வம்சி பைதிபள்ளி!

விஜய்

வம்சி விஜய்யை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்துப் போயிருக்கிறது.

  • Share this:
    நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துவரும் விஜய், அடுத்து வம்சி பைதபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அடுத்தப் படத்தை தீர்மானிப்பது விஜய் ஸ்டைல். இரண்டு படங்களுக்கு நடுவில் இடைவெளி எடுப்பதில்லை. எப்போதாவது ஒன்றோ இரண்டோ வாரங்கள். குடும்பமாக ஒரு சுற்றுலா. திரும்பி வந்தால், பள்ளிக்கு செல்லும் சமர்த்து மாணவன் போல் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருப்பார்.

    தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனையடுத்து விஜய் யார் தயாரிப்பில், யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி இருந்தது. தற்போது ஆந்திரா அவரை அடித்துச் சென்றிருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குனர் இருவருமே ஆந்திராக்காரர்கள்.

    2007-ல் பிரபாஸை வைத்து முன்னா படத்தை இயக்கியவர் வம்சி பைதபள்ளி. (நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் வம்சி வேறு). அவர் இயக்கிய ஜுனியர் என்டிஆரின் பிருந்தாவனம் அங்கு பம்பர் ஹிட். தமிழில் அதனை அஜித் அல்லது விஜய் நடிப்பில் ரீமேக் செய்தால் இன்றும் 100 பிளஸ் கோடிகள் அள்ளலாம். அதையடுத்து யவடு, ராம் சரண், அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்கள். இதையும் ரீமேக் செய்யலாம். ஜான் வூ இயக்கிய ஹாலிவுட் திரைப்படம் Face Off-ஐ கொஞ்சம் ஞாபகப்படுத்தும். ஆனாலும் என்ன, ஆந்திரா ப்ளேவரில் யவடு அனைத்தையும் மறக்கச் செய்யும். பைதபள்ளி கடைசியாக இயக்கியது மகர்ஷி. மகேஷ்பாபு நடித்தது. சுமாராகவே போனது. சொல்ல மறந்துவிட்டோம். தோழா படத்தை இயக்கியதும் இவர் தான்.

    வம்சி, விஜய்யை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்துப் போயிருக்கிறது. தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு மூலம் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. சொல்லாமலே யூகித்திருப்பீர்கள். தில் ராஜுதான் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாராக உள்ளது.
    மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: