தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பணிகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என இந்தத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
இருப்பினும் அதிமுக மற்றும் திமுக-வுக்கு இடையே தான் தீவிரப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிக மெனக்கெட்டு வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர், வாஷிங் மெஷின் என இதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது.
அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன் எல்டாம்ஸ் சாலையிலும், அஜித் திருவான்மியூரிலும், சூர்யா, சிவகுமார், கார்த்தி தி.நகரிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அவர் அங்கு வந்த விதம் அனைவரின் பார்வையையும் அவர் மீது திருப்பியது. காரணம் முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டியபடி அங்கு வந்து ரசிகர்களை ஆச்சயத்தில் ஆழ்த்தினார். அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு வேலை பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக அவர் சொல்லியிருக்கிறாரோ என விஜய் ரசிகர்கள் இனையத்தில் விவாதிக்க தொடங்கி விட்டனர். சைக்கிளில் வந்த அவர் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.