தலைவி, குயின் தொடருக்கு தடை கோரிய மனு - நிபந்தனைகளுடன் வெளியிட நீதிமன்றம் உத்தரவு

தலைவி, குயின் தொடருக்கு தடை கோரிய மனு - நிபந்தனைகளுடன் வெளியிட நீதிமன்றம் உத்தரவு
ரம்யா கிருஷ்ணன்
  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவி படம் மற்றும் குயின் வெப் சீரிஸை நிபந்தனையுடன் வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அதேபோல் இயக்குநர் பிரசாத் முருகேசன் - கவுதம் மேனன் இணைந்து குயின் என்ற பெயரில் வெப் சீரிஸை இயக்கியுள்ளனர். எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இத்தொடர் வரும் சனிக்கிழமை வெளியாகிறது.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி திரைப்படம் மற்றும் குயின் வெப் சீரிஸை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்படத்தையும், இணையதள தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தலைவி திரைப்படம், தலைவி என்ற பெயரில் வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.

குயின் வெப் சீரிஸ் இயக்கியிருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக குயின் என்ற புத்தகத்தை தழுவியே எடுக்கப்படுகிறது.2018-ம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு ரூ. 25 கோடி செலவில் தொடரை தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக தீபா கூறுவது பொய் என்றும் 2002-ம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை எனவும், 2016-ல் இறந்த பின் தான் வந்துள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை எனவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபாவின் கதாப்பாத்திரம் இணையதள தொடரில் இடம் பெறவில்லை என்ற கவுதம் மேனன் தரப்பு கொடுத்த உத்தரவாதத்தை ஏற்பதாக தெரிவித்தார். மேலும், தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு (disclaimer) வெளியிட பட நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்து வழக்கை முடித்து வைத்தார்.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்