நமக்கு பொங்கல் எப்படியோ அதேபோல் தெலுங்கு மொழிப் பேசுகிறவர்களுக்கு சங்கராந்தி. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது சங்கராந்தியின் ஸ்பெஷல். இந்த வருடம் மூன்று பிரமாண்ட படங்கள் வெளியாவதால் எந்தப் படத்தை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் தெலுங்கு மாநிலங்களின் திரையரங்கு உரிமையாளர்கள்.
தமிழகத்தைவிட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகம். எனினும் மூன்று முக்கிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் அவர்களுக்கும் நுரை தள்ளிவிடும். முதலாவதாக 2022 ஜனவரி 7 ஆம் தேதி ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் வெளியாகிறது.
பாகுபலி படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ராஜமௌலி. ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. ராம் சரண், ஜுனியர் என்டிஆர் என தெலுங்கின் இரண்டு சென்சேஷனல் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து பீம்ல நாயக் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் இது. பிஜு மேனன் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், பிருத்விராஜ் நடித்த வேடத்தில் ராணாவும் நடித்துள்ளனர். பவன் கல்யாண் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார். அவர் படங்கள் வெளியாவது அங்கு குட்டித் திருவிழா. அதுவும் இந்தப் படத்துக்கு த்ரிவிக்ரம் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜனவரி 14 ஆம் தேதி பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியாகிறது. பான் - இந்தியா திரைப்படம் இது. அதிகபட்ச திரையரங்குகளில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.
இந்த மூன்று படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் திணறிப்போயிருக்கிறது தெலுங்கு திரையுலகம். ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்களின் தேதியை மாற்றவே முடியாது எனும் நிலையில், பீம்ல நாயக்கின் வெளியீட்டை தள்ளி வைக்க மறைமுக நெருக்கடி தரப்படுகிறது. கடைசி நேரத்தில் பீம்ல நாயக் தள்ளிப் போனால் மட்டுமே மற்ற இரு படங்களும் முழுமையான வசூலை பெற முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Telugu movie