Telugu Drishyam 2: தெலுங்கு த்ரிஷ்யம் 2 - எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஜீத்து ஜோசப்!

Telugu Drishyam 2: தெலுங்கு த்ரிஷ்யம் 2 - எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஜீத்து ஜோசப்!

ஜீத்து ஜோசப்

எடுத்ததும் தெரியாது கோர்த்ததும் தெரியாது என்பார்களே... அந்த வேகத்தில் தெலுங்கு த்ரிஷ்யம் 2 படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

  • Share this:
    எடுத்ததும் தெரியாது கோர்த்ததும் தெரியாது என்பார்களே... அந்த வேகத்தில் தெலுங்கு த்ரிஷ்யம் 2 படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2013 டிசம்பரில் வெளியானது. ஒரு க்ரைம் த்ரில்லரை குடும்பப் பின்னணியில் எடுக்க முடியும், குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அதை தர முடியும் என்பதை இப்படம் நிரூபித்தது. அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் த்ரிஷ்யம் ரீமேக்கானது.

    தமிழில் கமல், கௌதமி நடிக்க ’பாபநாசம்’ என்ற பெயரில் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க, ஸ்ரீப்ரியா இயக்கினார். கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர், இயக்கம் பி.வாசு. இந்தியில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா. இதில் இந்தி தவிர்த்து மற்ற அனைத்து மொழிகளிலும் படம் ஹிட்.

    த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. படத்துக்கு எதிர்பார்க்காத வரவேற்பு. படம் வெளியான அதே வேகத்தில் ரீமேக் வேலைகளும் ஆரம்பித்தன. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க, இந்தமுறை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கன்னடத்தில் பி.வாசு, ரவிச்சந்திரன், நவ்யா நாயர் என அதே கூட்டணி. இந்தி, தமிழில் இன்னும் ரீமேக் வேலைகள் ஆரம்பமாகவில்லை.

    த்ரிஷ்யம் 2 பிப்ரவரியில் வெளியானது. அதன் பிறகே தெலுங்கு த்ரிஷ்யம் 2 படத்தை இயக்க ஆரம்பித்தார் ஜீத்து ஜோசப். ஹைதராபாத், கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது நாயகன் வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப். நம்ப முடியாத வேகத்தில் படத்தை எடுத்துவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கிறது தெலுங்குப் பட உலகம்.

    கமல் சம்மதித்தால் தமிழில் பாபநாசம் 2 எடுக்க தயார் என்று ஜீத்து ஜோசப் கூறியிருக்கிறார். பாபநாசத்தில் கமல் ஜோடியாக நடித்த கௌதமி இப்போது அவரை பிரிந்துவிட்டார். ஒருவேளை பாபநாசம் 2 எடுக்கப்பட்டால் சுயம்புலிங்கம் வேறு மனைவியுடன் தான் நடித்தாக வேண்டியிருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: