Home /News /entertainment /

தமிழின் முதல் ஆக்ஷன் நாயகி 'பாரிஸ் பியூட்டி' கே.டி.ருக்மணி

தமிழின் முதல் ஆக்ஷன் நாயகி 'பாரிஸ் பியூட்டி' கே.டி.ருக்மணி

கே.டி.ருக்மணி

கே.டி.ருக்மணி

1937 இல் வெளிவந்த மின்னல் கொடி திரைப்படம் தமிழின் முதல் முழுநீள சண்டைப் படம் என்ற பெருமையை பெற்றது. இதில் பிரதான வேடத்தில் நடித்து, தமிழ் சினிமா சரித்திரத்தில் அழியாத இடம்பிடித்தார் கே.டி.ருக்மணி.

 • News18
 • Last Updated :
  தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இரு ருக்மணிகள் இருந்தார்கள். ஒருவர் குமாரி ருக்மணி என்கிற ருக்மணி. இவர் நடிகை லட்சுமியின் தாயார். நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டி. இன்னொருவர் 'பாரிஸ் பியூட்டி' என்றழைக்கப்பட்ட கே.டி.ருக்மணி. இந்த இரு ருக்மணிகளையும் பெரும்பாலானவர்கள் குழப்பிக் கொள்வதுண்டு.

  கே.டி.ருக்மணியின் தாய் தனபாக்யம் என்பதைத் தவிர கே.டி.ருக்மணியின் குடும்பப் பின்னணி குறித்து அதிக தகவல்கள் இல்லை. அந்தக் காலத்தில் இவர் 'பாரிஸ் பியூட்டி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்தக்காலத்தில் சினிமாவுக்கு வந்த அனேக கலைஞர்களைப் போல கே.டி.ருக்மணிக்கும் கலைப்பித்து நாடகத்தின் மூலம் வந்தடைந்தது. பத்து வயதிலேயே பார்த்த நாடகத்தின் நடனங்களை ஆடிக்காட்ட ஆரம்பித்துள்ளார். மௌனப்படங்கள் காலத்திலேயே அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவரது முதல் மௌனப்படம் பேயும் பெண்மணியும். பிறகு ராஜா சாண்டோவின் விப்ரநாராயணா, சி.வி.ராமனின் விஷ்ணு லீலா ஆகிய மௌனப் படங்களிலும் தோன்றினார்.  கே.டி.ருக்மணியின் அழகு காரணமாக அவரை ரசிகர்கள் 'பாரிஸ் பியூட்டி' என்ற பெயரில் அழைத்தனர். தமிழில் முதல் முழுநீள சண்டைப் படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குநர் கே.அமர்நாத் ருக்மணியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ருக்மணியின் தாயார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. கத்திச் சண்டை, குதிரை சவாரி என ரிஸ்க்கான காட்சிகள் நிறைந்ததால் தனது மகளுக்கு விபத்து ஏதேனும் நேர்ந்தால் என்னாவது என்று பயந்தார்.

  அமர்நாத் அப்போதைய ஆங்கிலப் படங்களில் நடிகைகள் செய்திருந்த சண்டைக் காட்சிகளை அவர்களிடம் விளக்கி ஒருவழியாக சம்மதம் வாங்கி ருக்மணியை நடிக்க வைத்தார். அவரது தாயார் பயந்தது போலவே குதிரை சவாரி செய்கையில் தவறி விழுந்து ருக்மணி அடிபட்டுக் கொண்டார். இனிமேல் ருக்மணியால் நடிக்க முடியாது என அவரது அம்மா கறாராக கூறினாலும், ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கியிருந்ததால் வேறு வழியின்றி உடல்நிலை தேறி வந்ததும் நடித்துக் கொடுத்தார் ருக்மணி.

  Also read... 50 மற்றும் 60களின் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் ஒரு பார்வை

  1937 இல் வெளிவந்த மின்னல் கொடி திரைப்படம் தமிழின் முதல் முழுநீள சண்டைப் படம் என்ற பெருமையை பெற்றது. இதில் பிரதான வேடத்தில் நடித்து, தமிழ் சினிமா சரித்திரத்தில் அழியாத இடம்பிடித்தார் கே.டி.ருக்மணி. இந்தப் படத்தில் அவர் இரட்டைச்சடை போட்டு நடித்திருந்தார். அதற்கு முன்பு எந்த நடிகையும் இரட்டைச்சடை போட்டு நடித்ததில்லை என்பதால் அதுவும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு அன்று பேசுபொருளானது.

  ருக்மணி பாரிஜாத புஷ்பஹாரம் (1932), தூக்குத் தூக்கி (1935), மனோகரா (1936), மின்னல் கொடி (1937), பரமசூரமோகினி (1937),சாமுண்டீஸ்வரி (1937), பாக்கியலீலா (1938), பக்தா குமரன் (1939)வீர்ரமணி (1939), ஜெயக்கொடி (1940), திருமங்கை ஆழ்வார் (1940)பொன்னருவி (1947) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  அந்தக்காலத்தில் நடிகைகளுக்கு மதிப்பேயில்லை, அவர்களுக்கென மேக்கப் போட யாரும் இருப்பதில்லை, இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டிய இடத்தில் ஐநூறு ரூபாய்தான் சம்பளமாக தருவார்கள். மலிவான உடைகளே நடிகைகளுக்கு கிடைக்கும் என அந்தக்கால சினிமா கஷ்டங்களை ருக்மணி பதிவு செய்துள்ளார். இந்த சிரமங்களை கடந்தே அவர் பாரிஸ் பியூட்டியாகவும், மின்னல் கொடி என்ற, அனுஷ்கா, விஜயசாந்திக்கு முன்னோடியான ஆக்ஷன் ஹீரோயினாகவும் வலம் வந்திருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Entertainment

  அடுத்த செய்தி