தமிழகத்தில் தியேட்டர்களை தொடர்ந்து இயக்க முடிவு

கோப்புப் படம்

திரையரங்குகளை மூடாமல் தொடர்ந்து இயக்குவது என திரையரங்க உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் 6 மாதங்களுக்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டன. பின்னர் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால் போதுமான மக்கள் வராததால் திரையரங்குகளை இயக்க முடியாத சூழல் இருந்ததாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து ஜனவரி மாதத்தில் வெளியான மாஸ்டர், அதன் பின்னர் வெளியான கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் ஆகிய படங்கள் திரையரங்குகளை நோக்கி மக்களை வரவழைத்தன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசு திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் நடத்தலாமா அல்லது மூடிவிடலாமா என்பது குறித்து இன்று காலை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது திரையரங்குகள் முழுமையாக அழிந்து விடாமல் இருக்க 50 சதவீத இருக்கைகள் உடன் தொடர்ந்து திரையரங்குகளை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை கட்டாய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் இரவுக்காட்சி திரையிட முடியாது. ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகப் போவதில்லை. ரிலீஸை தள்ளி வைப்பதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: