கருப்பு - வெள்ளை முதல் 3 டி தொழில்நுட்பம் வரை கண்ட ரஜினிகாந்த்...! இதுவரை பெற்ற விருதுகள் என்னென்ன?

கருப்பு - வெள்ளை முதல் 3 டி தொழில்நுட்பம் வரை கண்ட ரஜினிகாந்த்...! இதுவரை பெற்ற விருதுகள் என்னென்ன?
  • News18
  • Last Updated: November 3, 2019, 10:22 AM IST
  • Share this:
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 40 ஆண்டுகால திரைப் பயணத்தில் எண்ணற்ற உயரிய விருதுகளை வாங்கி குவித்திருக்கும் ரஜினியின் திரை பயணத்தை அலசும் ஒரு சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.

ரஜினி.. இந்த மூன்றெழுத்துக்கு தமிழக ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம் காலம் கடந்தும் இன்றும் துளியும் குறையவில்லை. இதை பறைசாற்றும் விதமாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது அறிவித்து கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மிக உயரியதாக கருதப்படும் இந்த கோவா சர்வதேச திரைப்பட விழா தனது பொன்விழா ஆண்டை எட்டியுள்ளது. இதனை இதனை கொண்டாடும் விதமாக ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படுகிறது.


ஏற்கெனவே இதே கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 2014-ல் Indian film personality விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் ரஜினிகாந்த். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அட்சி அமைந்த உடன் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த கையோடு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் விருது அறிவிப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். பெருமைமிகு இந்த விருதை பெறுவது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கவுவரம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான முத்து படம் அதுவரை வேறெந்த இந்திய நடிகரும் வெளிநாடுகளில் செய்யாத மகத்தான சாதனையை நிகழ்த்திக் காட்டியது.

கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி ஈஸ்ட்மெண் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம் ஆகும்.

ரஜினிகாந்த்


40 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த் கலைமாமணி தொடங்கி பத்மவிபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளை வாங்கியுள்ளார். 1978-ல் முதல்முறையாக முள்ளும் மலரும் படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்ற ரஜினிகாந்த், தொடர்ந்து மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என 6 முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

2000-ம் ஆண்டு ரஜினிகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு. 2016-ம் ஆண்டு மோடி அரசு இவருக்கு இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கவுரவித்தது. இதே ஆண்டில் ஆந்திர அரசின் வாழ்நாள் சாதனையாளருக்கான நந்தி விருதையும் இவர் பெற்றார்.

ரஜினிகாந்த்


இவைதவிர்த்து 2007-ம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நடிகர், 2011-ல் ஸ்டைலிஸ் நடிகர் மற்றும் கடந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர், 2013-ல் 25 வாழும் பிரபலங்களில் ஒருவர் என ரஜினிக்கு நான்கு முறை விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

இப்படி பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள ரஜினியின் மணி மகுடத்தில் மற்றோரு வைரக்கல்லாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ICON OF GOLDEN JUBILEE விருதும் அலங்கரிக்கவுள்ளது. நவம்பர் 20-ம் தேதி கோவாவில் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியிலேயே இவ்விருது ரஜினிக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also See...

First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading