வரலாற்றை திரிக்கிறதா தலைவி? விமர்சகர்கள் காட்டம்!

தலைவி

ஜெயலலிதா மிகவும் நல்லவர், அவரை எம்ஜிஆர் தனது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் எனும்விதமாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் விமர்சகர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தலைவி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை முன்னதாகப்  பார்த்த வடஇந்திய விமர்சகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர். தமிழக அரசியல் குறித்து அதிகம் தெரியாதவர்கள் அவர்கள். அதேநேரம், தமிழக விமர்சகர்கள் படத்தில் வரலாற்றை ஏ.எல்.விஜய் திரித்துவிட்டார் என காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

1989 ஆண்டு சட்டசபையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசிக்க எழுகிறார். கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஜெயலலிதா தகராறு செய்கிறார். முதல்வர் கருணாநிதி கையில் இருக்கும் நிதிநிலை அறிக்கை பிடுங்கி கிழித்தெறியப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் தனது சேலையை இழுத்து மானபங்கம் செய்ததாக தலைவிரி கோலத்தில் சட்டசபைக்கு வெளியே வந்து ஜெயலலிதா புகார் செய்கிறார். அதை செய்தது துரைமுருகன் எனவும் கூறுகிறார். இந்த நிகழ்வு தமிழக மக்கள் மனதில் ஜெயலலிதா மீது பச்சாதாபாத்தை ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1991 தேர்தலின் போது, ராஜீவ்காந்தி படுகொலையில் திமுக அநியாயமாக பழிசுமத்தப்பட, அந்த அலையில் முதல்வராகிறார் ஜெயலலிதா. அதன் பிறகு அவர் நடத்திய காட்டாச்சியால் மக்கள் ஜெயலலிதா ஆட்சி மீது வெறுப்பாகிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால், கடவுளாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என்கிறார் ரஜினிகாந்த். இது வரலாறு

1989 சட்டசபை நிகழ்வு படத்தில் முதலில் வருகிறது. ஆனால், உண்மைக்கு மாறாக, கருணாநிதி அருகில் இருக்கும் துரைமுருகனாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஜெயலலிதாவிடம் எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறது. பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா முன்னோக்கிவர, துரைமுருகன் கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி சேலையை உருவுகிறது. இனிமேல் இந்த சட்டசபையில் முதல்வராகத்தான் நுழைவேன் என்று சபதம் செய்து வெளியேறும் ஜெயலலிதா தனது சபதத்தை எப்படி நிறைவேற்றினார் என்பது தலைவி படத்தின் கதை.

நம் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வையே பொய்யாக திரித்து தலைவியை .எல்.விஜய் எடுத்துள்ளார், இது மகா மோசடி என விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1989 இல் நடந்த சட்டசபை நிகழ்வில் முதல்வர் கருணாநிதிக்கு பின்னால் நான்காவது வரிசையில் துரைமுருகன் அமர்ந்திருந்தார். மேலும், அன்று கலவரம் நடக்க காரணம் ஜெயலலிதா முதல்வர் நிதிநிலை அறிக்கை வாசிக்கக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டதும், அதிமுகவினர் அவர் கையிலிருந்த அறிக்கையை கிழித்ததுமே ஆகும். அதனை மறைத்து, எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும்விதமாக கேட்டதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது.

Also read... படமாகும் கிரிக்கெட் தாதா கங்குலியின் வாழ்க்கை வரலாறு...!

ஜெயலலிதா மிகவும் நல்லவர், அவரை எம்ஜிஆர் தனது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் எனும்விதமாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் விமர்சகர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். கருணாநிதியை அதிகம் விமர்சித்தால் படத்துக்கு பிரச்சனை ஏற்படும் என பயந்தா தெரியவில்லை, திமுகவுக்கு பதில் ஆர்.எம்.வீரப்பனை ஜெயலலிதாவின் வில்லனாக படம் சித்தரித்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இடையே விரிசல் ஏற்பட வீரப்பன் காரணம் என்பதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜெயலலிதாவே எம்ஜிஆருடனான பிணக்குக்கு காரணம் என்பது வரலாறு.

சத்துணவு திட்டத்தை மேற்பார்வையிடும் பொறுப்பை எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு தந்து, அவர் எல்லா மாவட்டத்துக்கும் வருவார், அவரை மாவட்ட கலெக்டர்கள் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். இது கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. சாந்தசீலன் ஐயர் என்ற மாவட்ட ஆட்சியாளர் தனது கார் கதவை திறந்துவிடவில்லை என்று ஜெயலலிதா தகராறு செய்கிறார். அது பத்திரிகைகளில் வருகிறது. அதனைத் தொடர்ந்து கோபத்தில் தனக்களித்த பொறுப்பை ராஜினாம செய்கிறார் ஜெயலலிதா. சில தினங்கள் கழித்து அவரை சமாதானம் செய்து எம்ஜிஆர் மீண்டும் கட்சிக்கு அழைத்து வருகிறார். இது போல் ஒருமுறையல்ல பலமுறை நடந்திருக்கிறது.   

இந்த உண்மைகள் எதுவும் தலைவி படத்தில் இல்லை மாறாக ஜெயலலிதாவுக்காக எம்ஜிஆர் உள்பட அனைவரையும் ஜெயலலிதாவின் எதிரிகளாக சித்தரித்துள்ளார் .எல்.விஜய் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜெயந்தன்,  "தலைவி சர்வ நிச்சயமாக ஜெயலலிதாவின் பயோபிக் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய வெகுசில உண்மைச் சம்பவங்களை மட்டும் வேறு வழியேயில்லாமல் கைவசம் வைத்துகொண்டு, இஷ்டத்துக்கு பொய்களை கலந்து உருவாக்கியிருக்கும் சுவாரஷ்யமான காதல் கதை" என விமர்சித்திருப்பதுடன் தலைவியா தலைவலியா என கேட்டுள்ளார். இவரைப் போல் பலரும் படத்தை விமர்சித்துள்ள நிலையில், சாதாரண ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், படம் அவர்களுக்குப் பிடித்துள்ளதா என்பது சில தினங்களில் தலைவி வசூலில் தெரிந்துவிடும்.
Published by:Vinothini Aandisamy
First published: