Home /News /entertainment /

1991 மற்றும் 2021 ஏப்ரலில் வெளியான திரைப்படங்கள் - ஓர் சுவாரஸ்ய ஒப்பீடு

1991 மற்றும் 2021 ஏப்ரலில் வெளியான திரைப்படங்கள் - ஓர் சுவாரஸ்ய ஒப்பீடு

சின்னதம்பி - கர்ணன்

சின்னதம்பி - கர்ணன்

அன்று வருடத்துக்கு ஒரு படமாவது 200 நாள்களைத் தாண்டும். வருடத்துக்கு இரண்டோ, மூன்றோ படங்களை திரையரங்குகள் மாற்றினால் போதும்.

  ஒவ்வொரு ஆண்டும் சினிமா தொழில்நுட்பம் மாறிக் கொண்டிருக்கிறது. சினிமா வர்த்தகத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன், டிடிஹெச், ஓடிடி குறித்து யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அன்றைய சினிமா வர்த்தகம் முழுக்க திரையரங்குகளை சார்ந்தே இருந்தது. அவ்வளவு ஏன், ஒரு நோய்த் தொற்றால் உலகமே முடங்கிப் போகும் என்று யாரேனும் நினைத்திருக்கக்கூடுமா?

  முப்பது வருடங்களுக்கு முன் 1991 ஏப்ரல் மாதம் என்னென்ன தமிழ்ப் படங்கள் வெளியாகின, அவற்றில் எவை வெற்றி பெற்றன. இந்த வருட ஏப்ரலில் வெளியாகியிருக்கும் படங்களுக்கும் அவற்றிற்கும் என்ன வித்தியாசம்? ஒரு சுவாரஸிய தொகுப்பை பார்ப்போம்.

  1991-ல் சினிமா பார்ப்பது ஒரு கொண்டாட்டம். குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்று சினிமா கொட்டகையில் குழல் ஒலிபெருக்கி முழங்கும்போது குழந்தை, குட்டிகளுடன் கும்பலாக கிளம்புவார்கள். குடும்பத் தலைவிகள் கணவனை வேலைக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு, பதினோரு மணிக் காட்சிக்கு செல்வது அன்று சாதாரண நிகழ்வு.

  1991 ஏப்ரல் 12-ஆம் தேதி, தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிகம் ஓடிய திரைப்படங்களில் ஒன்றான சின்னதம்பி வெளியானது. பிரபு, குஷ்பு, ராதாரவி, மனோரமா, கவுண்டமணி, செந்தில் நடித்த சின்னதம்பி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. கிராமங்களில் கட்டுச்சோற்றுடன் காத்திருந்து படத்தைப் பார்த்துச் சென்றார்கள். பிரபுவை உச்ச நட்சத்திரமாக்கிய படம் இது.

  சின்னதம்பி வெளியானதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 13-ம் தேதி, கஸ்தூரி ராஜாவின் என் ராசாவின் மனசிலே வெளியானது. அதுவும் கிராமத்துப் படம். குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதில் நாயகி அந்தஸ்து பெற்றிருந்தார். ராஜ்கிரண் எலும்பு நொறுங்க கோழிக்கறி தின்று, எதிரிகளின் எலும்புகளை நொறுக்கினார். அவரின் முரட்டு சுபாவமும், மீனாவின் பயந்த குணமும் பாலும் டிகாஷனுமாக கலந்து, ரசிகர்களின் ரசனைக்கு சுவை கூட்டியது. இவ்விரு படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசை. போவோமா ஊர்கோலம் ஒலிக்காத திருவிழாவோ, குயில் பாட்டு ஒலிக்காத திருமணமோ அன்று தமிழகத்திலேயே இல்லை.

  அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி (ஏப்ரல்14) விஜயகாந்தின் எவர்கிரீன் ஹிட் கேப்டன் பிரபாகரன் ரிலீஸ். திரையிட்ட இடங்களில் எல்லாம் கூட்டம் அள்ளியது. ஆக்ஷன் படங்களில் அதுவொரு மைல்கல். ஆட்டமா பாடலைப் பார்க்கவும், மன்சூர் அலிகான் என்ற அறிமுக வில்லனின் மிரட்டலை ரசிக்கவும், விஜயகாந்தின் அனாயசமான சண்டைக்கு கைத்தட்டவும் ரசிகர்கள் மறுபடி மறுபடி திரையரங்கில் குவிந்தனர்.

  யோசித்துப் பாருங்கள், அடுத்தடுத்த மூன்று தினங்களில் மூன்று பம்பர் ஹிட் படங்கள். திரையரங்குகள் அன்று எப்படி இருந்திருக்கும்? அதே நாளில் பாக்யராஜின் பவுனு பவுனு தான் வெளியானது. 1988-ல் இது நம்ம ஆளு வெற்றிக்குப் பிறகு, ஆராரோ ஆரிரரோ, அவசர போலீஸ் 100 என சறுக்கிக் கொண்டிருந்த பாக்யராஜுக்கு ஆறுதல் வெற்றியாக, பவுனு பவுனு தான் அமைந்தது. ஏப்ரல் பதினெட்டாம் தேதி, அன்றைய தேதியில் பாக்யராஜின் போட்டியாளர் டி.ராஜேந்தரின் சாந்தி எனது சாந்தி வெளியானது. எண்பதுகளில் உச்சத்தில் இருந்த இவ்விரு சகலகலாவல்லவர்களும் படிப்படியாக கீழிறங்க ஆரம்பித்ததின் தொடக்கமாக 1991 அமைந்தது.

  1991 ஏப்ரலில் வெளியான முக்கிய திரைப்படங்களில் ஒன்று பாசிலின் கற்பூரமுல்லை. அமலா நடித்த இந்தத் திரைப்படம் சுமாராகப் போனாலும் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. மொத்தத்தில் ஒரே மாதத்தில் மூன்று பம்பர்ஹிட்கள், இரு 100 நாள் படங்கள். இப்போது நாம் யோசித்துப் பார்க்க முடியாத வெற்றி சதவீதம்.

  முப்பது வருடங்கள் கழித்து, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறோம். இந்த ஏப்ரலில் சுல்தான், கர்ணன் இரண்டும் லாபம் சம்பாதித்தன. அன்று சின்னதம்பி ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. என் ராசாவின் மனசிலே 200 தினங்களை கடந்தது. கேப்டன் பிரபாகரன் 175 நாள்கள். சின்னதம்பியை வெளியிட்ட திரையரங்குகளுக்கு ஒரு வருடத்துக்கு வேறு படமே தேவைப்படவில்லை. அன்று வருடத்துக்கு ஒரு படமாவது 200 நாள்களைத் தாண்டும். வருடத்துக்கு இரண்டோ, மூன்றோ படங்களை திரையரங்குகள் மாற்றினால் போதும்.

  ஆனால் இன்று? யார் படமாக இருந்தாலும் 25 நாள்கள் தாண்டினால் அதிசயம். வாரத்துக்கு ஏழு படம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த குறுகிய காலத்திலும் லாபம் பார்த்துவிடுகிறார்கள். காரணம் திரையரங்குகளின் எண்ணிக்கை. சென்னையில் அன்று அதிகபட்சம் ஆறு அல்லது ஏழு திரையரங்குகளில்தான் ரஜினி படமே வெளியாகும். இன்று மாயஜாலில் மட்டும் ஒரு நாளில் 70 காட்சிகள் ஓட்டுகிறார்கள்.

  முப்பது வருடங்களில் சினிமா வர்த்தகம் மாறியிருக்கிறது. நடிகர்கள் மாறியிருக்கிறார்கள். குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ஒலிக்கையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி இன்று இல்லை. குச்சி ஐஸும், குருவி ரொட்டியும் தந்த நிறைவு ஐநாக்ஸ் பாப்கார்னுக்கு இல்லை. திரையரங்குகள் தொழில்நுட்பத்தில் உயரத்திலும், மனதளவில் வெகுதொலைவில் விலகியும் போயிருக்கிறது.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Tamil Cinema

  அடுத்த செய்தி