தனக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை, வயது முதிர்வு, கொரோனா பெருந்தொற்று காலம் இவற்றைக் காரணம் காட்டி அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வைரலானது. இதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல. அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன்’ என்று கூறினார்.
இதையடுத்து ரஜினிகாந்த் அரசியல் களத்திலிருந்து விலகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதேவேளையில் ரஜினிகாந்த் தனது உடல் நலனில் அக்கறை செலுத்தி இன்னும் நிறைய ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவரது நலம் விரும்பிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார், ரஜினிகாந்த் உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது என்று யோசனை தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் பவர் ஸ்டார், “எல்லாக் கட்சிகளிலும் இருந்து என்னை அழைக்கிறார்கள். எங்கு செல்வது என்று குழப்பமாக உள்ளது. தேசிய கட்சியில் இணைவது தான் நல்லது. பாஜகவில் நான் உறுப்பினர். உரிய பதவி தந்தால் இணைந்து பணியாற்றுவேன். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன். கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய நேரமில்லாததால் குறைந்த வாக்குகள் பெற்றேன். இந்த முறை அதிக வாக்குகள் பெறுவேன். எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன்.
அனுபவமில்லாத விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் யாரையும் மதித்ததில்லை. அவருக்குத் தேவையானதைக் சாதித்துக் கொண்டார். தீபாவளிக்கு என்னுடைய படம் வெளியாகிறது”என்றார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.