ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 63 வது நினைவு தினம்

தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 63 வது நினைவு தினம்

தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதர்

சினிமா புகழ் ஒரு மாயை, திரைநட்சத்திரங்களின் புகழ், வான் நட்சத்திரங்களைப் போல எப்போது வேண்டுமானாலும் மின்னி மறையக் கூடியது என்பதற்கு பாகவதரின் வாழ்வே சாட்சி.

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜனின் சுருக்கம்தான் எம்.கே.டி.. 1910 மார்ச் மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவர் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர்.  1934 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார்.

அன்றைய காலகட்டத்தில் நடிகர்களே அவர்களுக்குரிய பாடல்களை பாடிக் கொள்வார்கள். அதனால் சிறந்த குரல்வளம் கொண்டவர்களே கதாநாயக அந்தஸ்துடன் இருந்தனர். பாகவதரின் குரலும், தோளை தொட்டுப் புரளும் தலைமுடியும், கம்பீரத் தோற்றமும் முதல் படத்திலேயே அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த தியாகராஜ பாகவதர் சுமாராக 15 திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். இதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக 1944 ல் வெளியான இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனைப் படைத்தது. அந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று தீபாவளிகளை கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமை அப்படத்திற்கு கிடைத்தது.

தியாகராஜ பாகவதர் அப்போதைய நடிகர்களைப் போல நாடகத்திலிருந்தே சினிமாவுக்கு வந்தார். இயல்பாகவே அமைந்த பாடும் திறன் அதற்கு உதவி செய்தது. நடேசன் ஐயரின் இரசிக இரஞ்சன சபா நடத்திய அரிச்சந்திரா நாடகத்தில் பாகவதர் அரிச்சந்திரனின் மகனாக நடித்தார். அவரது குரல்வளத்தை கண்ட வயலின் வித்வான் பொன்னு ஐயங்கார் அவருக்கு முறைப்படி சங்கீம் கற்றுக் கொடுக்க முன்வந்தார்.

ஒருபுறம் சங்கீதப் பயிற்சி நடக்க, இன்னொருபுறம் நாடகத்துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார் அவருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். இந்த இரண்டும் தியாகராஜ பாகவதரின் சினிமா பிரவேசத்துக்கு உதவி செய்தன.

ஆரம்பகாலத்தில் தியாகராஜ பாகவதர் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்தார். அப்போது பெண் கதாபாத்திரங்களிலும் ஆண்களே நடிப்பார்கள். பாகவதரின் நளினமான உடல்வாகு காரணமாக பெண் வேடங்கள் அவரைத்தேடி வந்தன. நடிப்பு, இசை இரண்டிலும் அபார பயிற்சி பெற்றதைக் கண்ட நடேச ஐயர் அவருக்கு அளித்த பட்டம்தான் பாகவதர். அவரது இயற்பெயர் தியாகராஜனுடன் பாகவதர் என்ற பட்டம் சேர்ந்து தியாகராஜ பாகவதரானார்.

தியாகராஜ பாகவதருக்கு கமலம், ராஜம் என்று இரு மனைவிகள். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம் மஞ்சள் பத்திரிகையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் கலைவாணருடன் சேர்ந்து தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். சிறைவாசம் பாகவதரின் சினிமா புகழை மங்கச் செய்தது. பல வருட சிறைவாசத்துக்குப் பின் விடுதலை பெற்றவரை ரசிகர்கள் மறந்திருந்தனர். கடைசியாக அவர் நடித்த சிவகாமி திரைப்படம் படுதோல்வியடைந்தது.

அதேநேரம், கலைவாணரின் மனைவி மதுரத்தின் முயற்சியும், திராவிட இயக்கத்தின் ஆதரவும் கலைவாணரை சிறை வாழ்க்கைக்குப் பின்னும் சினிமாவில் பிரகாசிக்க உதவின. தங்கத் தட்டில் சாப்பிட்ட பாகவதர் கடைசிக்காலத்தில் வறுமையில் உழன்று, ரசிகர்களின் புறக்கணிப்பால் மனம் நொந்து 1959 நவம்பர் 1 இதே நாளில் மரணமடைந்தார்.

பாகவதர் பிரபலமாக இருந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஏற்பாடு செய்த நாடகத்தில் நடித்தார். பாகவதர் காரணமாக நாடகம் மிகப்பெரிய வெற்றியடைய, ஒரு லட்ச ரூபாயும், தஞ்சை அருகே ஒரு ஊரும் ஆங்கில அரசு அவருக்கு பரிசாக அளித்தது.

ஊரை தானமாக வாங்க மறுத்தவர், ஒரு லட்ச ரூபாயை சுதந்திரப் போராட்டத்திற்காக அளித்தார்.

சினிமா புகழ் ஒரு மாயை, திரைநட்சத்திரங்களின் புகழ், வான் நட்சத்திரங்களைப் போல எப்போது வேண்டுமானாலும் மின்னி மறையக் கூடியது  என்பதற்கு தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் வாழ்வே சாட்சி.

Published by:Musthak
First published:

Tags: Kollywood