நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மயில்சாமி, கன்னி ராசி, நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இந்த நிலையில் மயில்சாமியின் மறைவுக்கு சக நடிகர் சார்லி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய நடிகர் சார்லி, மயில்சாமியும் நானும் முதல் சந்திப்பிலே நண்பர் ஆகிவிட்டோம் என்றார், தீவிர சிவ பக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்றே மறைந்துவிட்டார் என்றும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965ஆம் ஆண்டு பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பிரபலமாகி
1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவைத் தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்ற இவரின் இழப்பு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayilsamy, Tamil cinema news