சிவாஜி கணேசன் நடிப்பில் 1961 ஜுலை 1 ஆம் தேதி வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படம் நேற்று 61 வருடங்களை நிறைவு செய்து இன்று 62 வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த ஸ்ரீ வள்ளி திரைப்படம் ஒரு ரீமேக். இதே பெயரில் 1945 இல் வெளியான படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதில் டி.ஆர்.மகாலிங்கம் நாயகன் முருகனாக நடித்திருந்தார்.
கிட்டப்பாவின் பரம ரசிகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர் பாடினால் பாடுவது கிட்டப்பா என்றே தோன்றுமாம். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு கிட்டப்பா போல் ஆக வேண்டும் என்று ஆசை.
1933 இல் கிட்டப்பா மறைய, 1938 இல் டி.ஆர்.மகாலிங்கம் திரைத்துறைக்கு வந்தார். முதல் படம் ஏவி மெய்யப்ப செட்டியார் பிரகதி பிக்சர்ஸ் பேனரில் எடுத்த நந்தகுமார். படம் தோல்வியடைந்தாலும் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் இனிமையால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில், முருகன், வள்ளி கதையை ஏவி மெய்யப்ப செட்டியார் திரைப்படமாக்கினார். டி.ஆர்..மகாலிங்கம் முருகனாக நடித்தார். படத்தை ஏ.டி.கிருஷ்ணசுவாமியுடன் இணைந்து ஏவி மெய்யப்ப செட்டியாரே இயக்கினார். படம் சூப்பர் ஹிட்டாகி, டி.ஆர்.மகாலிங்கம் சூப்பர் ஸ்டாரானார்.
டி.ஆர்.மகாலிங்கத்துக்கு எஸ்.என்.லட்சுமியுடன் ஏற்பட்ட காதலும், அவருக்காக இவர் படத்தயாரிப்பில் இறங்கி அடுத்தடுத்து நான்குப் படங்கள் தோல்வியடைந்ததும் அவருக்கு பின்னடைவாக அமைந்தன. சினிமாவே வேண்டாம், பாடலும், நாடகமும் போதும் என சென்னையை காலி செய்தார் டி.ஆர்.மகாலிங்கம். அதன் பிறகு, நானே என்னுடைய பாடல்களை பாடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒருசில படங்களில் மட்டும் நடித்தார்.
இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ
1961 இல் ஸ்ரீ வள்ளி படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டனர். முறைப்படி உரிமை வாங்கி நரசு ஸ்டுடியோஸ் வெங்கடேசன், வெங்கட்ராமன் இணைந்து படத்தை தயாரித்தனர். நாயகன் முருகனாக சிவாஜி கணேசன் நடித்தார்.
இதையும் படிங்க - விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்
படத்தில் நாரதர் கதாபாத்திரம் முக்கியம் என்பதால் பாடத் தெரிந்த டி.ஆர்.மகாலிங்கத்தை ஒப்பந்தம் செய்தனர். 1945 இல் நாயகனாக நடித்த அதே படத்தின் ரீமேக்கில் 1961 இல் நாரதனாக சிறிய வேடத்தில் தோன்றினார் டி.ஆர்.மகாலிங்கம். இதுபோல் அபூர்வமாகத்தான் நடக்கும்.
சிவாஜி நடித்த ஸ்ரீவள்ளியை நடிகை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். வள்ளியாக பத்மினி நடித்தார்.
புராண கதைகளிலிருந்து திராவிட இயக்கத்தவரின் சினிமாவால் மக்கள் சமூக படங்களுக்கு மாறிக் கொண்டிருந்த நேரம் என்பதால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், தோல்விப்படமும் அல்ல. இதில் கவனிக்க வேண்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.
தியாகராஜ பாகவதரை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும், பி.யூ.சின்னப்பாவை இரண்டாவது சூப்பர் ஸ்டார் எனவும், டி.ஆர்.மகாலிங்கத்தை மூன்றாவது சூப்பர் ஸ்டார் என்றும் சொல்வர். அப்படிப்பட்டவர் நாயகனாக நடித்த படத்தின் ரீமேக்கில் சின்ன வேடத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
வெறும் 16 வருட இடைவெளியில் இந்த தலைகீழ் மாற்றம். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போன்றவர்கள் பல பத்து வருடங்களுக்குப் பிறகும் நாயகர்களாக, வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்ததும், திகழ்வதும் எத்தனை பெரிய சாதனை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.