தமிழ் சினிமாவும் அதனுடன் பின்னிப் பிணைந்த சென்டிமெண்டும்!

அஜித்

சீஸனல் சென்டிமெண்ட் தமிழ் சினிமாவின் உடன்பிறவா சகோதரி. காமெடிப் படம் ஹிட்டானால், தொடர்ந்து காமெடிப் படங்களாக வரும்.

 • Share this:
  "முருகா எல்லாம் நல்லபடியா நடக்கணும்..." என்று ஆராத்தி காட்டுவதுடன்தான் தமிழின் 90 சதவீத திரைப்படங்கள் ஆரம்பிக்கும். இறை நம்பிக்கை என்பதற்கு மேல், அதுவொரு சென்டிமெண்ட். தப்பித்தவறி வேறு காட்சி வைத்தால் படம் ஓடாமல் போய்விடும் என்ற பயம்.

  இந்த சென்டிமெண்ட் நீங்கள் உதவி இயக்குநராக சேரும் போதே ஆரம்பித்துவிடும். சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எழுதிய கதை, கவிதைகளுடன் சென்றால், அதை வாங்கி கடாசிவிட்டு உங்களின் ஜாதகத்தை கொண்டுவரச் சொல்வார்கள். இயக்குநரின் ஜாதகத்துடன் உங்கள் ஜாதகம் ஒத்துப் போனால், நீங்கள் உதவி இயக்குநர் இல்லையெனில், கெட் அவுட்தான்.

  ஜோசியம், பஞ்சாங்கத்தில் மற்றவர்கள் எலி என்றால், டி.ராஜேந்தர் புலி. வீட்டைவிட்டு எப்போது கிளம்பினாலும் - ஒரு நாளைக்கு நான்கு முறை கிளம்ப வேண்டி வந்தாலும், அத்தனை முறையும் நேரம் பார்ப்பார். நல்லநேரம் தவிர்த்து எந்த நேரத்திலும் அவர் வெளியே காலடி வைப்பதில்லை. இயக்குநர் விக்ரமனுக்கு வேறு சென்டிமெண்ட். புது வசந்தம் படத்தின் கதையை எந்த பேடில் வைத்து எழுதினாரோ, அதைத்தான் கடைசிப் படம் வரை உபயோகப்படுத்தினார். பேடு மாறினால் அதிர்ஷ்டம் போய்விடும் என்ற சந்தேகம்.

  இந்த சென்டிமெண்ட் சீக்குக்கு பதிலடியாக கேமரா முன்னால் பூனையை ஓடவிட்டு படப்பிடிப்பை தொடங்கியது, விதவைகளை நடக்கவிட்டது என்று மன்சூர் அலிகான் சில துணுக்கு நகைச்சுவைகள் செய்தார். நாத்திகம் பேசிய காலத்திலும் கமலின் படங்கள் பூஜையுடனே தொடங்கும். படம் தொடங்கும் போது சின்ன சூடம் கூட கொளுத்தாமல், படப்பிடிப்பு முடிகையில் பூசணிக்காய் உடைக்காமல் தமிழ் திரையுலகில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது மணிரத்னம். ஏவிஎம் பிள்ளையார் தவிர்த்து வேறு யாருக்கு தேங்காய் உடைத்தாலும் படம் தோல்வி என்பது போல் ஏவிஎம் பிள்ளையாரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள் ஏராளம். ரஜினியும் அதில் உண்டு.

  இந்த சென்டிமெண்ட்களை இளம் படைப்பாளிகள் ஓரளவு உடைத்துள்ளனர். கடவுளுக்கு சூடம் காட்டி திரைப்படக் காட்சியை பெரும்பாலும் யாரும் ஆரம்பிப்பதில்லை. பிதாமகனில் சுடுகாட்டில் படத்தை ஆரம்பித்தார் பாலா. அதற்காக சென்டிமெண்ட் சட்டையை திரையுலகம் உரித்து எறிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. திரைப்படங்களுக்குள் சென்டிமெண்ட்கள் திணிக்கப்படவே செய்கின்றன.

  சண்டக்கோழி படத்தில் லாலின் வில்லன் கதாபாத்திரம் பேசப்பட, ஒரு முக்கிய படத்தில் அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்தனர். சண்டக்கோழியில் லாலின் கதாபாத்திரப் பெயர் காசி. இதில் மாசி. உச்சரிப்பு மாறி வெற்றி கிட்டாமல் போனால் என்ன செய்வது?

  "ஆயிரம் ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு, அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுது"ங்கிற மாதிரி, சித்திரம் பேசுதடி ஓடியதற்கு எத்தனையோ காரணம் இருந்தும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் மாளவிகா கட்டியிருந்த மஞ்சள் சேலைதான் காரணம் என்று இவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமா? மிஷ்கினின் அடுத்தடுத்தப் படங்களில் அதேபோலொரு பாட்டும், மஞ்சள் சேலை அழகியும் இடம்பெற்று, ஒருகட்டத்தில் அவரே காண்டாகி கதறுகிறவரை நிலைமை போனதே.

  சீஸனல் சென்டிமெண்ட் தமிழ் சினிமாவின் உடன்பிறவா சகோதரி. காமெடிப் படம் ஹிட்டானால், தொடர்ந்து காமெடிப் படங்களாக வரும். காதல் படங்கள் ஹிட்டானால் தொடர்ந்து காதல் படங்கள். சொல்லாமலேயில் காதலுக்காக நாயகன் நாக்கை அறுத்துக் கொள்ள, காதலிக்காக விதவிதமாக உறுப்புத்தானம் செய்தார்கள். கடைசியில் ஹீரோ இதயத்தையே தானமாக தந்து, இதற்குமேல் தானம் தர ஒண்ணுமேயில்லடா என்றான பிறகே அடங்கினார்கள். இந்த சீஸனல் சென்டிமெண்டின் உச்சம், காமெடி பேய் படங்கள். காஞ்சனா வந்தாலும் வந்தது, ஒரு பவுடர் டப்பா, ஒரு வெள்ளைச்சேலை, கொஞ்சம் சிவப்பு பெயின்டுடன் ஒதுக்குப்புறமான பங்களாவில் செட்டிலாகிவிடுகிறார்கள். திரும்பி வருகையில் ஒரு ஹாரர் காமெடி ரெடி. சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

  தல வந்தாலே படம் ஹிட்டு என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், தலக்கு என்னவோ 'வி' யில் படப்பெயர் ஆரம்பித்தால்தான் ராசி. இது அஜித்தின் நம்பிக்கையா இல்லை அஜித்துக்கு இப்படியொரு சென்டிமெண்ட் இருப்பதாக தயாரிப்பாளரும், இயக்குநரும் சேர்ந்து நம்மை இம்சிக்கிறார்களா தெரியவில்லை. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாஸம் என்று இப்போது வலிமை வரை வந்துவிட்டது. நடுவில் இரண்டு விடுபடல்கள் என்னை அறிந்தால், நேர்கொண்ட பார்வை.

  திரைப்பிரபலங்களின் சென்டிமெண்டை சொல்லிக் கொண்டே போகலாம் என்பதால், சமீபத்திய அப்டேட்டுடன் முடிவுக்கு வருவோம். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று வினோத்திடம் இல்லாத திறமையா? அவருக்கே சென்டிமெண்ட் சிக்கல் என்றால் நம்ப முடிகிறதா. சதுரங்கவேட்டையில் நாயகி கர்ப்பமாக இருப்பார். நாயகன் கடைசியில் திருந்துவதற்கு கர்ப்பமான நாயகி கதாபாத்திரம் உதவியாக இருக்கும். இதுதான் படத்தோட வெற்றிக்கு காரணம் என்று எந்த கொலம்பஸ் கண்டுபிடித்தானோ, அடுத்து வந்த தீரன் அதிகாரம் ஒன்றில் நாயகியை கர்ப்பிணியாக்கியே ஆக வேண்டாம் என்றிருக்கிறார்கள். அந்தப் படமும் ஹிட்டாக, அடுத்து இயக்கிய நேர்கொண்ட பார்வையில் (இதன் ஒரிஜினல் இந்தி பிங்கில் நாயகி கதாபாத்திரமே இல்லை) ஒரு கர்ப்பிணி நாயகி கதாபாத்திரத்தை திணித்து சென்டிமெண்டில் தூக்கியிருந்தார்கள். அடுத்து வரும் வலிமையில் நாயகி கர்ப்பிணியா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆம் என்றால், ஒரு 'அய்யோ'வும், இல்லையென்றால் 'யப்பா' என ஒரு நிம்மதி பெருமூச்சும் விட்டுக் கொள்ளலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: