பிறமொழி படங்களின் ரிலீசால் தமிழ் படங்களின் வசூல் பாதிப்பு!

பிறமொழி படங்களின் ரிலீசால் தமிழ் படங்களின் வசூல் பாதிப்பு!
  • Share this:
சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த வாரத்தில் ஒரே நேரத்தில் பிற மொழி படங்கள் குவிந்ததால் தமிழ் படங்களின் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளியாகும் பிற மொழி படங்களுக்கு சென்னை பாக்ஸ் ஆபீஸில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என சப் டைட்டில் உதவியுடன் சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் பிற மொழிப் படங்கள் வார இறுதி நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதை அவ்வப்போது காண முடியும்.

இதன் உச்சமாக கடந்த சில வாரங்களாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் தமிழ் படங்களை ஓரங்கட்டும் அளவுக்கு பிற மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் வரிசையில் ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் வெளியானது. முதல் நான்கு நாட்களில் மட்டுமே ஒரு கோடியே 60 லட்சம் வரை வசூல் செய்த இப்படம் கடந்த வார பாக்ஸ் ஆபீஸில் தமிழ் படங்களை ஓரங்கட்டி முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

இதேபோல் திகில் படமான அனெபெல் கம்ஸ் ஹோம் படமும் சென்னை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களும் தற்போது ஒரேநேரத்தில் சென்னையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான கபிர் சிங் படமும் ஆயுஷ்மன் குர்ரன்னா நடித்துள்ள ஆர்டிகல் 15 படமும் சென்னையில் கணிசமான திரையரங்குகளில் வெளியாகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுபோக சமந்தாவின் ஓ பேபி, டாய் ஸ்டோரி 4, அலாதீன் என டஜன் கணக்கில் பிற மொழி படங்கள் சென்னையில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இதனால் தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதோடு தமிழ் படங்களுக்கு பெரிய திரை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விமர்சகர்களிடம் பாராட்டுக்களை பெற்ற ராட்சசி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை விட பிற மொழி படங்களின் காட்டில்தான் சென்னையில் வசூல் மழை பொழிந்துள்ளது.இதனால் பிற மொழி படங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர தயாரிப்பாளர் சங்கம் புதிய வரையரையை கொண்டு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்