Home /News /entertainment /

தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்ட டி. ராஜேந்தர்

தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்ட டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர்

ரஜினி, கமல், விஜயகாந்த் என முப்பெரும் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த போது தனி ஆளாக இவர் இயக்கிய ’உயிருள்ள வரை உஷா’, ’ உறவைக் காத்த கிளி’, ’மைதிலி என்னை காதலி’ என அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்தன.

 • News18
 • Last Updated :
  நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்டு இன்றும் தனக்கு எண்டே இல்லை என நிரூபித்துக் கொண்டிருக்கும் டி.ராஜேந்தரின் திரைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பு.

  முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் வெற்றி பெற்றவர் டி,ராஜேந்தர். இவரின் முதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது தடம் பதித்த ‘ஒரு தலை ராகம்’. அசல் கல்லூரியை, மாணவர்களை, அவர்களின் இயல்பான நடை, உடை, பாவனைகளுடன் உலவவிட்டது இந்த ஒருதலை ராகம். காதலும், கண்ணீரும் சம பங்கு கலந்த இத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது.

  தொடர்ந்து டி.ஆர் இயக்கிய ’வசந்த அழைப்புகள்’ , ’ரயில் பயணங்களில்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். காதல் கதைகளை படமாக தந்தவர் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இயக்கிய ’தங்கைகோர் கீதம்’ திரைப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பெரிதும் வரவேற்பை பெற்றன. இதில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார் டி.ராஜேந்தர்.

  ரஜினி, கமல், விஜயகாந்த் என முப்பெரும் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த போது தனி ஆளாக இவர் இயக்கிய ’உயிருள்ள வரை உஷா’, ’ உறவைக் காத்த கிளி’, ’மைதிலி என்னை காதலி’ என அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்தன. இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் எதுகை, மோனை வசனத்தில் ஆரம்பித்து தங்கச்சி செண்டிமெண்ட், நெகட்டிவ் கிளைமேக்ஸ் என தமிழ் சினிமாவிற்கு புது ட்ரண்டையே உருவாக்கியது.

  Also read... மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான மறக்க முடியாத திரைப்படங்கள்!

  இப்போது விஜய், அஜித் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு பிதாமகனே டி.ஆர்தான் என சொன்னால் அது மிகையில்லை. ”வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி.. உன் உடம்ப பிச்சி போட்டுடுவ ப்ச்சி”, ” கும்தலக்கடி கும்மா இப்போ வாங்கிகடா சும்மா”, ” அடங்காளி படுத காளி சீன் காளி வாடா என் தக்காளி” என்பது போன்ற பஞ்ச்கள் அப்போதைய இளைஞர்களை கொண்டாட வைத்தது.

  “முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல முடியும்ங்கறவன் தான் டி.ஆர்” என்று அவர் சொன்ன வார்த்தைகளுக்கு தகுதியான டி.ஆர் ஒரு அட்டகாச டி.ஆர்..., அட்ராக்ட் டி.ஆர்,… அதிசய டி.ஆர்...., ஆல் இன் ஆல் டி.ஆர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Entertainment, T Rajendar

  அடுத்த செய்தி