தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்தின் தோழி ரியா சக்ரவர்த்தியே மரணத்திற்கு காரணம் என்றும், பணரீதியாகவும், மனரீதியாகவும் தனது மகனுக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார்.
தற்கொலை வழக்கு பதிவு செய்து மும்பை போலீஸ் விசாரித்து வந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு வழக்கு கைமாறியது. இந்நிலையில் கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினார்கள் என்று சுஷாந்த் சிங் குடும்பத்தின் வழக்கறிஞர் கூறியதால் மரண சர்ச்சை நீடித்தது. விஷம் வைத்தும் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை மறு ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் இவற்றை மறுத்துள்ளனர். சுஷாந்த் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார் என மருத்துவர்கள் குழுவின் தலைவரான சுதிர் குப்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி சிபிஐயிடம் எய்ம்ஸ் மருத்துவர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடர சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதற்கு மத்தியில் போதைப் பொருள் விவகாரத்தில் ரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து 20 பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்து வழக்கை தனியாக நடத்தி வருகிறது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.