சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் அமலாக்கத்துறை தொடர் விசாரணை- வழக்கில் நடப்பது என்ன?

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

  • Share this:
ஜூன் 14 -ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக மும்பை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மும்பை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்காததால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூச்சுத் திணறலால் இறந்தார் எனவும் தெளிவாக தற்கொலைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.ஜூன் 18 -ம் தேதி சுஷாந்த்தின் காதலி என சொல்லப்படும் ரியா சக்கரபோர்த்தியிடம் மும்பை போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தான் சுஷாந்தோடு இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் அவர் இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிரிந்ததாகவும் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் இறப்பு குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.ஜூலை 28-ம் தேதி சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பீகார் பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதியப்பட்டது. தனது மகனின் வங்கி கணக்கு விபரங்களை நிர்வகித்த ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 15 கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை மாற்றிக் கொண்டதாக கே.கே.சிங் புகாரில் கூறியிருந்தார்.

ரியா தன் மீதான வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வாய்மை நிச்சயம் வெல்லும் என ரியா வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி காவல்துறையினரின் விசாரணைக்கு ரியா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் ரியா காணாமல் போய்விட்டதாகவும் பீகார் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பீகார் காவல்துறைக்கு மும்பை காவல்துறையிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் பீகார் போலீசார் தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.

ரியா மற்றும் சுஷாந்துக்கு இடையேயான வங்கி பரிமாற்றங்கள் 48 பக்க அறிக்கையாகவும், அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல் 13 பக்க அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டது. தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பீகார் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பீகார் அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு சிபிஐ-க்கு மாற்ற அனுமதியளிக்கப்பட்டது. மும்பை காவல்துறையும் பீகார் காவல்துறையும் வழக்கு தொடர்பான அறிக்கைகளை மூன்று நாள்களுக்குள் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆகஸ்ட் 8-ம் தேதி சுஷாந்த் தன் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றை ரியா வெளியிட்டார். அவரின் தண்ணீர் பாட்டில் ஒன்றை வெளியிட்டு இதைத் தவிர சுஷாந்தின் உடைமைகள் எதுவும் தன்னிடம் இல்லை என பதிவிட்டார்.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ரியா சக்கரபோர்த்தி, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், தொழில் மேலாளா் சுருதி மோடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ரியாவின் வரவு, செலவு, முதலீட்டில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. கடந்த சனிக்கிழமை மதியம் முதல் சுமார் 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் ரியாவின் சகோதரர் சோவிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியா, அவரது தந்தை, சகோதரர் ஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்பேரில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக் ஆகியோர் வந்தனர்.

சிறிது நேரத்தில் ரியாவின் மேலாளர் சுருதி மோடியும் விசாரணைக்கு ஆஜரானார். மதியம் 2 மணிக்கு சுஷாந்துடன் ஒரே வீட்டில் வசித்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் விசாரணைக்கு ஆஜரானார்.

ரியாவின் வருமானம், முதலீடுகள், தொழில், நடிப்பு அது சார்ந்த விவகாரங்கள், தொடர்புகள் சுற்றியே அமலாக்கத்துறையினர் அனைவரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

5 பேரிடமும் பெறப்பட்ட தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். ஒரே நாளில் ரியா உள்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சுஷாந்த் வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளதால், தன்னை அரசியல் சதிகளுக்கு பலிகொடுத்துவிடக்கூடாது என்றும் தன்னை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ரியா பிரமானபத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading