ஒருகாலகட்டத்தில் காதலுக்காக கண், காது, நாக்கு, இதயம் என உடல் உறுப்புகளை தானம் செய்யும் கதைகள் தமிழில் பிரபலமாக இருந்தது. இயக்குனர் சசியின் சொல்லாமலே திரைப்படம் இதில் முக்கியமானது. அத்தனை அழகில்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனை, அவன் ஊமை என நினைத்து ஒரு பெண் நெருங்கிப் பழகுகிறாள்.
ஒருகட்டத்தில் அவன் மீது காதல் கொள்கிறாள். அழகில்லாத, தாழ்வுணர்ச்சி கொண்ட அவனுக்கு அவளது காதலைவிட மேலானது உலகில் வேறு எதுவும் இல்லை. ஆனால், அவன் ஊமை இல்லை, அவனால் பேச முடியும், இதுவரை அவன் தன்னை ஏமாற்றி வந்திருக்கிறான் என்பதை அறிந்தால் அந்தப் பெண் அவனைவிட்டு விலகவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், அந்த ஆண், அவள் மீது கொண்ட காதலால், தனது நாக்கைத் துண்டித்து, தான் சொன்ன பொய்யை உண்மையாக்குவான்.
சசி இயக்கிய சொல்லாமலே திரைப்படத்தின் கதையிது. படம் வெற்றி பெற்று, சசி சொல்லாமலே சசி என்று பெயர் எடுத்தார். பூ படம் வரும்வரை அவர் "சொல்லாமலே" சசியாகவே இருந்தார். அப்படம் வெளியான காலகட்டத்தில்தான் காதலிக்காக உறுப்புத்தானம் செய்வது பிரபலமானது. இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்த திரைப்படம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த நீங்காத நினைவு.
இந்தப் படம் 1951-ல் இந்தியில் வெளியான தீதார் படத்தின் தமிழ் ரீமேக். நிதின் போஸ் இயக்கிய இந்திப் படத்தில் திலீப் குமார், நர்கிஸ், அசோக்குமார், நிம்மி ஆகியோர் நடித்திருந்தனர். நிறைவேறாத காதல் கதையான இது இந்தியின் ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாக அமைந்தது.
ஏழை சிறுவன் ஒருவனும், பணக்கார சிறுமி ஒருத்தியும் நண்பர்களாக இருப்பார்கள். இது சிறுமியின் தந்தைக்குப் பிடிக்காது. சிறுமியின் தந்தை ஒருகட்டத்தில் சிறுவனை கடுஞ்சொல் கூறி துரத்திவிடுவார். வருடங்கள் செல்லும். இப்போது இருவரும் இளைஞன் இளைஞியாக இருப்பார்கள். அவன் ஒரு விவசாயியின் வீட்டில் வளர்வான். இன்னொரு விவசாயியின் மகள் அவனை காதலிப்பாள். ஒரு விபத்தில் அவனது பார்வை போய்விடும். அவனும், அவனை காதலிக்கும் பெண்ணும் தெருவில் பாட்டுப்பாடி தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
ஒரு கண் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கச் செய்வார். அவரிடம் இவன் தனது பால்யகால காதல் கதையை கூறுவான். அவளது பெயர் மாலா என்று சொல்லும் போதுதான் மருத்துவருக்கு, தான் காதலிக்கும் மாலாதான் அந்த இளைஞனின் பால்யகால தோழி என்பதை புரிந்து கொள்வார். இதனை இளைஞனும் தெரிந்து கொள்வான். பால்யகால தோழியின் புதிய வாழ்க்கையில் புயல் ஏற்படுத்த விரும்பாத அவன், தன்னைத்தானே குருடாக்கிக் கொண்டு மீண்டும் தெருப்பாடகனாக வாழ்வை தொடர்வான்.
இந்தக் கதையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், கல்யாண் குமார், சி.ஆர்.விஜயகுமாரி, புஷ்பலதா ஆகியோர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்தார். கண்ணதாசன், மருதகாசி, வாலி, கோமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்கள் எழுதினர். வாலி எழுதிய நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும் பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன் பாடினார். வாலி எழுத்தில் டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல் அதுவாகும்.
காதலுக்காக உறுப்பை முடமாக்கிக் கொள்வது, உறுப்புகளை தானம் கொடுப்பது போன்ற கதைகளுக்கு முன்னோடியாக அமைந்த நீங்காத நினைவு படம் 1963 மார்ச் 15 இதே நாளில் வெளியானது. இன்று படம் தனது 60 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema