RRR: ரிலீஸாவதற்கு முன்பே 850 கோடி வசூல் செய்த ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்?

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராம் சரணின் ஆச்சார்யா பட வேலைகள் காரணமாக மீண்டும் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டதால் 2022 ஜனவரியில் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

  • Share this:
இந்தியாவில் இந்திப் படங்களின் சந்தை பெரியது. இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அவற்றிற்கு மார்க்கெட் உண்டு. இந்திய பாக்ஸ் ஆபிஸில் இந்திப் படங்கள் கோலோச்சியிருந்த காலத்தில் பாகுபலி வெளியானது. இந்திப் படங்களின் வசூலை பாகுபலி கலகலக்க செய்தது. பாகுபலி 2 திரைப்படத்தின் இந்தி பதிப்பு 500 கோடிகளை கடந்து வசூலித்தது. 500 கோடிகளை கடந்த முதல் இந்திப் படம் என்ற பெருமை அதற்கு கிடைத்தது. பாகுபலி 2 படத்தின் தெலுங்கு, தமிழ், மலையாள வசூல் தனி. 500 கோடி என்பது இந்தி பதிப்பின் வசூல் மட்டும். கான், கபூர் என எந்த இந்தி சூப்பர் ஸ்டாரின் படமும் 400 கோடிகளை எட்டியதில்லை என்பதிலிருந்து பாகுபலி 2 இந்தி பாக்ஸ் ஆபிஸில் ஏற்படுத்திய சேதாரத்தை புரிந்து கொள்ளலாம்.

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இந்தியாவே எதிர்பார்க்கிறது. பாகுபலி போன்ற ஒரு பிரமாண்ட படத்தை எடுத்தவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற ஆர்வம். எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும் வகையில் இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை எடுத்துள்ளார் ராஜமௌலி.

தெலுங்கு மாகாணத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போரிட்டவர்கள் அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமரம் பீம். இதில் முதல்நபர் இந்து, இரண்டாவது நபர் முஸ்லீம். சீத்தாராம ராஜு வேடத்தில் ராம் சரண் தேஜா நடிக்க, கொமரம் பீம் வேடத்தில் ஜுனியர் என்டிஆர். ராம் சரணை ராமனைப் போல சித்தரிக்கிறது படம். அவர் அக்னி அவதாரம். கொமரம் பீம் குளிர். கடலைப் போல. இவர்களுடன் அஜய் தேவ்கான், அலியாபட், சமுத்திரகனி என ஏராளமானவர்கள் நடிக்கின்றனர். பாகுபலியைப் போன்று ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். 2018 நவம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

ஆர்ஆர்ஆர் படத்தை இந்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி 8) வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா முதல் அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போக, இந்த வருடம் அக்டோபர் 13-ம் தேதி படத்தை வெளியிடுவது என்று தீர்மானித்தனர். இரண்டாவது அலை மற்றும் ராம் சரணின் ஆச்சார்யா பட வேலைகள் காரணமாக மீண்டும் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டதால் 2022 ஜனவரியில் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

யானைக்கு முன்பே மணியோசை கேட்பது நடைமுறை. படம் முடிவடையும் நிலையில் இருக்க, பட வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. படத்தின் உத்தேச வியாபாரம் குறித்து ஆந்திராவிலிருந்து வரும் பத்திரிகைகள் எழுதியுள்ளன. மொத்தம் 850 கோடிகளுக்கு ஆர்ஆர்ஆர் விலை பேசப்பட்டிருப்பதாக அவை பட்டியலிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் திரையரங்கு உரிமை 230 கோடிகள்.
தமிழக திரையரங்கு உரிமை 50 கோடிகள்.
கர்நாடகா திரையரங்கு உரிமை 43 கோடிகள்.
கேரளா திரையரங்கு உரிமை 10 கோடிகள்.
இந்தி திரையரங்கு உரிமை 140 கோடிகள்.
வெளிநாட்டு உரிமை 77 கோடிகள்.
மொத்தம் 550 கோடிகள்.

ஆர்ஆர்ஆர் படத்தின் பட்ஜெட் 400 கோடிகள் என்கிறார்கள். உலக அளவில் திரையரங்கு உரிமையின் வழியாக 550 கோடிகள் வரும் என்கிறார்கள். இன்னொரு முக்கியமான வருவாய் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை. ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து மொழி டிஜிட்டல், சேட்டிலைட் உரிமை 300 கோடிகளுக்கு மேல் (சுமார் 325 கோடிகள்) விலை பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் கானின் ராதே படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை ஸீ தொலைக்காட்சி 190 கோடிகளுக்கு வாங்கியது. சல்மான் படத்தைவிட ஆர்ஆர்ஆர் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்தி பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த சல்மான் கான் படம் டைகர் ஜிந்தா ஹேய். 2015-ல் வெளியான இந்தப் படம் 339 கோடிகளை வசூலித்தது. ராஜமௌலியின் பாகுபலி 2 வசூலித்தது 510 கோடிகள். சல்மான் கான் பட வசூலைவிட மிக அதிகம். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில், ராதே படம் 190 கோடிகளுக்கு வாங்கப்பட்டது எனில் ஆர்ஆர்ஆர் 300 கோடிகளுக்கேனும் விற்கப்படும் என கணித்திருக்கிறார்கள். தவிர, ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தி தவிர்த்து தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இந்த உத்தேச கணக்கை வைத்து, ஆர்ஆர்ஆர் வெளியீட்டுக்கு முன்பே 850 முதல் 875 கோடிகள்வரை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். இது நடந்தால் படவெளியீட்டுக்கு முன்பே 450 - 475 கோடி லாபம் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுக்கு வந்து சேரும்.

ஆர்ஆர்ஆர் படம் வெளிவருவதற்குள் கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து, திரையரங்குகள் இயங்க ஆரம்பித்தால் மட்டுமே இந்த வசூல் சாத்தியம். இல்லையெனில் லாபத்தின் சதவீதம் குறையும். ராதே படத்துக்கு ஸீ பேசியிருந்த தொகை 230 கோடிகள். ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் படத்தை வெளியிடலாம் என்று நினைத்தவேளை, அம்மாநிலங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. அதனால், 230 கோடியை 190 கோடியாக குறைத்துக் கொண்டார் சல்மான்.

திரையரங்குகள் முழுமையாக திறந்த பிறகே ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடுவது என்பதில் படத்தின் தயாரிப்பாளர்களும், ராஜமௌலியும் உறுதியாக உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் அடங்க இந்திய மக்களைப் போலவே ஆர்ஆர்ஆர் படமும் காத்திருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: