முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கும் பிரபல இயக்குநர்

முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கும் பிரபல இயக்குநர்

முந்தானை முடிச்சு

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கின் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் படமானது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சசிகுமார் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்க இருக்கும் இந்தப் படத்துக்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுத இயக்குநர் யார் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சுந்தரபாண்டியன் பட இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.



முந்தானை முடிச்சு படத்தில் இணைந்தது குறித்து ட்வீட்டியிருக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன், “மீண்டும் எனது குரு சசிகுமார் உடன் இணைந்து பணியாற்றுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பாக்யராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சசிகுமாருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: