• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வறுமையில் லேப் டாப்பை விற்ற Squid Game இயக்குநர்!

வறுமையில் லேப் டாப்பை விற்ற Squid Game இயக்குநர்!

Squid Game இயக்குநர்

Squid Game இயக்குநர்

2013-ல் அவர் இயக்கிய படம் மிஸ் கிரானி. தென்கொரியா மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் படம் பேசப்பட்டது.

  • Share this:
    ஸ்குயிட் கேம் சென்ற மாதம் நெட்பிளிக்ஸில் வெளியான வெப் தொடர். தென்கொரியாவில் தயாரானது. இந்த வெப் தொடர் வெளியான சில தினங்களில் 90 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது. அதிகம் பேர் பார்த்த நெட்பிளிஸ்க்ஸ் வெப் தொடர்களில் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் இப்படியொரு உடனடி வெற்றி எந்தத் தொடருக்கும் அமையவில்லை. இதனை எழுதி, இயக்கியவர் Hwang Dong-hyuk.

    சுமார் 8 குறும்படங்கள் இயக்கிய பின், மை ஃபாதர் படத்தின் மூலம் Hwang Dong-hyuk இயக்குனரானார். 2007-ல் வெளிவந்த அப்படம் சுமாராகவே போனது. அதன் பிறகு அவர் எழுதிய கதைதான் ஸ்குயிட் கேம். யாருக்கும் அந்த கதை பிடிக்கவில்லை. அவர் அணுகிய அனைத்து ஸ்டுடியோக்களும் கதையை நிராகரித்தன. ஒருகட்டத்தில் ஏழ்மை காரணமாக தனது லேப் டாப்பையே அவர் விற்க வேண்டி வந்தது. ஸ்குயிட் கேமை ஓரமாக வைத்து வேறொரு திரைக்கதையை எழுதினார். அது 2011-ல் சைலன்ஸ்டு என்ற பெயரில் வெளிவந்தது.

    அதன் பிறகு 2013-ல் அவர் இயக்கிய படம் மிஸ் கிரானி. தென்கொரியா மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் படம் பேசப்பட்டது. இதன் அதிகாரப்பூர்வ தழுவல்தான் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம். அதன் பிறகு தி ஃபோர்ட்ரெஸ் படத்தை எடுத்தார். அது நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகே அவரது பழைய ஸ்குயிட் கேம் திரைக்கதையை மதிக்க ஆரம்பித்தனர். பத்து வருட காத்திருப்புக்குப் பின், அதனை வெப் தொடராக எடுக்க முன் வந்தனர். இப்போது அந்தத் தொடர் உலக அளவில் பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

    பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, பெரும் தொகையை பரிசாக ஆசைக்காட்டி, ஒரு கும்பல் அவர்களை சிறுவர் விளையாட்டை விளையாட வைக்கிறது. விளையாட்டில் தோற்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். விளையாட்டில் இருந்தல்ல, உலகத்தில் இருந்தே. சாதாரணமாக ஆரம்பித்து, முதல் எபிஸோடின் இறுதியில் அதிரடியாக முடியும் இந்தத் தொடர், அடுத்து என்ன என்று ஆவலை தூண்டும்வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் க்ரைமாக மட்டும் அல்லாமல், வாழ்வா, சாவா என்ற உச்சநிலையில் மனித மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்பதை கூறியிருப்பது இதன் தனிச்சிறப்பு.

    ஸ்குயிட் கேம் போன்ற ஒரு கதை அங்கீகரிக்கப்பட சில வெற்றிகள் தேவைப்படுகிறது. நிராகரிப்பு என்பது ஒருவரது தரத்தை பற்றிய மதிப்பீடு அல்ல என்பதை Hwang Dong-hyuk இன் கதை நமக்கு விளக்குகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: