1959 இல் வெளியான கல்யாணப் பரிசு முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலுடன் படங்களை இயக்கியவர் சி.வி.ஸ்ரீதர். அவரது சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும், அவரது படங்களின் கதைகளில் பங்களிப்பு செலுத்துகிறவராகவும் இருந்தவர் கோபி. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்குப் பின்புறம்தான் ஸ்ரீதரும், கோபுவும் கதை விவாதம் நடத்தும் இடம். அங்குதான் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்களின் கதைகள் உருவாகின.
நெருக்கம் இருந்தால் பிரிவும் இயல்புதானே. ஸ்ரீதர் - கோபு நட்பு ஒருகட்டத்தில் பிரிந்தது. கோபு தனியாக படங்கள் தயாரித்தார். ஆனால், இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பு வற்றாமலே இருந்தது. பத்திரிகை ஒன்றில், கோபுவுடன் மீண்டும் இணைய ஆவலாக இருக்கிறேன் என்று பேட்டி தந்தார் ஸ்ரீதர். அந்த ஒருசொல் அவர்களுக்குள் இருந்த தடுப்புச்சுவரை உடைத்தது. நினைவெல்லாம் நித்யா படத்தின் கதையை இருவரும் இணைந்து உருவாக்கினார்கள்.
அந்தப் படத்தில் முத்துராமனின் மகன் கார்த்திக்கும், ஜெமினி கணேசனின் மகள் ஜீஜியும் நடித்தனர். இளையராஜா தனது இசையில் சாகாவரம் பெற்றப் பாடல்களை தந்தார். பனிவிழும் மலர் வனம்..., நீதானே என் பொன் வசந்தம்..., ரோஜாவை தாலாட்டும் தென்றல்..., தோளின் மேலே... என அனைத்தும் இளைஞர்களின் தேசிய கீதங்களாயின. படத்தின் ரிசல்டை தியேட்டர் தியேட்டராகச் சென்று நேரில் கண்டு அனுபவித்தார்கள் ஸ்ரீதரும், கோபுவும்.
நினைவெல்லாம் நித்யா படத்தின் வெற்றிக்கு வலுவான காரணமாக இளையராஜாவின் இசையும், பாடல்களும் அமைந்தன. அவர் இல்லையேல் படமே இல்லை என்றுகூட சில இசை ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அது ஸ்ரீதரின் காதுகளுக்கும் சென்றதா இல்லை வேறு காரணமா தெரியாது. அடுத்து இயக்கிய படத்தில் இளையராஜா தவிர்க்கப்பட்டார். அவருக்குப் பதில் பிரபல பாடகரும், அப்போது தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்திருந்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படி தமிழில் முதன்முறை இசையமைப்பாளராக எஸ்.பி.பி. அறிமுகமானார். அந்தப் படம்தான் 1983 இல் வெளிவந்த ரஜினியின் துடிக்கும் கரங்கள்.
கமல், ரஜினியை வைத்து 1978 இல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை ஸ்ரீதர் இயக்கினார். படம் பம்பர்ஹிட்டாகி 175 நாள்களை கடந்து ஓடியது. 1983 இல் ரஜினியை தனி ஹீரோவாக்கி துடிக்கும் கரங்கள். இதில் மெக்கானிக்கான ரஜினி எஸ்டேட் முதலாளி ஜெய்சங்கரின் அடாவடிக்கு எதிராக போராடுவார். படம் நெடுக கோபம் நுரைத்துப்பொங்க சண்டையிடும் கதாபாத்திரம். ரஜினி அதனை தனக்கேயுரிய ஸ்டைலில் செய்தார். ஜோடி ராதா. அண்ணன், அண்ணியாக விஜயகுமார், சுஜாதா நடித்தனர். ஒய்.ஜி.மகேந்திரன், சில்க் ஸ்மிதா போன்றோரும் நடித்தனர்.
எஸ்பிபி இசையில் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்ன. ஆறையும் எஸ்பிபியே பாடினார். உடன் எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சசிரேகா, துர்கா ஆகியோர் பாடினர். புலமைப்பித்தனும், கங்கை அமரனும் பாடல்கள் எழுதினர். நினைவெல்லாம் நித்யாவுடன் ஒப்பிடுகையில் பாடல்கள் சுமார்தான். படம் சென்னையில் மட்டும் தேவி பாரடைஸ், சக்தி அபிராமி, ஸ்ரீ கிருஷ்ணா, கிருஷ்வேணி ஆகிய திரையரங்குகளில் 50 நாள்களைத் தாண்டி ஓடியது. ஆனால், எங்கும் 100 நாள்கள் ஓடவில்லை. எனினும் படம் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கமர்ஷியலாக தப்பித்தது. 1983 மார்ச் 4 துடிக்கும் கரங்களுடன் டி.ஆர்.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா வெளியாகி சூப்பர்ஹிட் பாடல்களுடன் 175 நாள்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கண்டது.
துடிக்கும் கரங்கள் வெளியான உடனேயே ஸ்ரீதர் அடுத்தப் படத்தைத் தொடங்கி அந்த வருடம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட்டார். ரகுவரன், சுமலதா நடித்த ஒரு ஓடை நதியாகிறது என்ற அந்தப் படத்துக்கு மீண்டும் இளையராஜாவே இசையமைத்தார். துடிக்கும் கரங்கள் பாடல்கள் மட்டும் இன்னும் கூடுதல் வரவேற்பைப் பெற்றிருந்தால் எஸ்பிபி மேலும் பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்திருப்பார். சிகரம் போன்ற ஒருசில படங்களுடன் அவரது இசையமைப்பாளர் பயணம் முற்றுப் பெற்றிருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Spb